சீனாவின் சிந்தனைகளை எண்ணவோட்டங்களை அறிய உதவும் கட்டுரை நூல்!

 

 

 


 

 

 கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்
கட்டுரை நூல்
ஆசிரியர்: மு.இராமனாதன் ♦
♦ முதல் பதிப்பு: டிசம்பர் 2022
♦ வெளியீடு:
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001

இந்த கட்டுரை நூல் மொத்தம் 34 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதன் வழியாக சீனா, ஹாங்காங், மியான்மர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள், அதன் பின்னணி ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சீனாவில் தணிக்கை முறை அமலில் உள்ளதால், அதைப்பற்றிய கட்டுரைகள் அங்குள்ள சமூக சூழல், அரசியல் அமைப்பு, கட்டுப்பாடுகள், விதிகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலில் அமெரிக்கா, மியான்மர், ஹாங்காங்கை விட சீனாவைப் பற்றிய கட்டுரைகள் கவனம் ஈர்த்தவையாக இருந்தன.

இந்தியாவும் சீனாவும் ஒரே ஆண்டில்தான் சுதந்திரம் பெற்றன என்றாலும் சீனா இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உயர்ந்துவிட்டது இதை அமெரிக்கா ஏற்கிறது ஏற்காமல் போகிறது என்பது விஷயமல்ல. பல்வேறு தடைகள் இருந்தாலும் உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் தயாரித்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு திறன் கொண்டவர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுவதோடு, இந்தியாவில் சாதி, மதச்சண்டைகளில் செலவிடப்படும் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக மாற்றக்கோருகிறார். இணையமெங்கும், பிறரை பழிசொல்லி, குற்றம் சொல்லி நிறைய எழுத்துகள் எழுதப்படுகின்றன. மு.இராமனாதன் தனது எழுத்தில் நேர்மறையான ஆக்கப்பூர்வ தன்மையை மட்டுமே கைக்கொண்டிருக்கிறார். எந்த இடத்திலும் அரசியல் கட்சி அல்லது கட்சியின் தலைவர்களை அவர் குற்றம் குறைகாண முயலவில்லை. அதையெல்லாம் வாசகர்களுக்கு விட்டுவிடுகிறார்.

சீன அதிபர்களான மாவோ, டெங் சியோபிங், ஷி ச்சின்பிங் ஆகியோருக்கான ஒற்றுமை, வேற்றுமை, யோசிக்கும் திசை ஆகியவற்றை நூலாசிரியர் இனம் கண்டு கச்சிதமாக அவர்களது செயல்கள் கூறிய கூற்றுகள் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியா, சீனா எல்லை விவகாரங்களை ஏராளமான வரைபடங்கள் கொண்டு துல்லியமாக விளக்கியது சிறப்பாக இருந்தது. கட்டுரைகளில் கூறப்படும் தகவல்களின் துல்லியம் வியக்க வைக்கும் வகையில் உள்ளது.

சீனாவுக்கு ஜப்பான் மீதுள்ள பகையும், வன்மத்தையும் பற்றிய காரணத்தை அறிந்துகொண்டது மகிழ்ச்சி. சீன தொடர்கள், திரைப்படங்களைப் பார்க்கும்போது ஜப்பானியர்களை துரோகிகள், எதிரிகள் என வசைபாடிய காட்சிகள் இருந்தன. இறுதிப்பகுதியில் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது இதன் அடுத்தகட்டம். இதற்கான காரணங்களை வரலாறு ரீதியாக விளக்கியிருந்தார் இராமனாதன். ஜப்பான் தொடுத்த போரில் சீனாவில் இறந்த மக்களின் எண்ணிக்கை, அகதியானவர்களின் எண்ணிக்கை சில கட்டுரைகளில் மாறி வருகிறது. அதுபோலவே அமெரிக்க கட்டுரையில் உறுப்பினர் அவை, பிரதிநிதிகள் அவை, மேலவை, கீழவை என்ற வார்த்தைகளும் மாறுகின்றன.  சற்று தெளிவாக பார்த்து ஏதேனும் குறிப்பிட்ட ஒரே வார்த்தையைப் பயன்படுத்தினால் நல்லது. நூலின் அடுத்த பதிப்பில் இந்த குறைகள் களையப்படும் என நம்பலாம்.நூலை பதிப்பித்த காலச்சுவடு நிறுவனம், பிழையா உடனே நூலை வாபஸ் கொடுங்கள். வேறு தருகிறோம் என உணர்ச்சிவசப்படுவார்கள். ஆனால் அவர்களின் வாக்குறுதி செயலில் பெரும்பாலும் இருப்பதில்லை. நூலை தொகுக்கும்போது இன்னும் கவனம் அவசியம்.  

அமெரிக்காவில் டிரம்ப் எப்படி இத்தனை ஆண்டுகாலம் முன்னேறி வந்த நாட்டை இனவாத கொள்கைகளால் பின்னுக்கு இழுத்தார் என்பது சில கட்டுரைகளில் விளக்கிக் கூறிவிட்டார். வலதுசாரி மதவாதம், சாதி, இனவாதம், வெறுப்பு, பிரிவினை நோக்கி நாட்டின் அதிபரே திருப்பிவிட்டு அதன் சாதக பயன்களை அடையத் துடிக்கிறார் என்பது யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். அப்படியான சூழலில் கூட நூலாசிரியர். டிரம்மை அந்த திசை நோக்கி செலுத்தியவர்கள் யார் யார் என நிதானமாக பட்டியலிட்டு விளக்கிக் கூறுகிறார். அதிபர் மாளிகை தாக்குதல் சம்பவம் பற்றிய கட்டுரை இதற்கு சான்று. டிரம்ப் செய்த இனவாத வெறியால் நடந்த கலவரங்கள், இந்தியாவிலும் கூட ஒருநாள் நடக்கலாம். அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. அவையும் வாசிப்புக்கு இடையே நினைவுக்கு வருகிறது.

சீனாவின் கலாசாரம், அங்குள்ள பிரச்னைகள், அவர்களின் நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய விஷயங்களை அறிந்துகொள்ள சிறந்த நூலாக கிழக்கும் மேற்கும் நூலைக் கருதலாம். கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பல கோணங்களிலும் யோசித்து எழுதப்பட்டுள்ளது. முடிந்தவரை ஆக்கப்பூர்வமான கற்றல்களை நாம் பெறமுடிகிறது.

கோமாளிமேடை டீம் 


https://www.amazon.in/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-Kizhakkum-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-Ramanathan/dp/B0BS3YD7PN

கருத்துகள்