சினிமா பற்றிய இரு நூல்கள் - ஒளி ஓவியம், சினிமா கோட்பாடு

 

 

 



 

 

 

 ஒளி ஓவியம் - சி ஜெ ராஜ்குமார்
டிஸ்கவரி புத்தக நிலையம்
விலை ரூ.350

புத்தகம் ஒளிப்பதிவாளர்களுக்கானது. நூலும் அதற்கேற்ப வண்ணத்துடன் வழுவழுப்பான தாளில் தயாரிக்கப்பட்டதால் விலையும் கூடுதலாக உள்ளது. உண்மையில் நூல் விலைக்கு நியாயம் செய்துள்ளதா என்றால் ஒளிப்பதிவாளர்கள்தான் கூறவேண்டும்.

ஒளிப்பதிவாளர்களுக்கு தேவையான விளக்குகள், ஒளியைக் குறைக்கும் கருப்புத் துணிகள், ஒளியை அளவிடும் மீட்டர், படப்பிடிப்பில் பயன்படுத்தும் விளக்குகள், அதிலுள்ள வகைகள் என நிறைய விளக்கங்கள் படங்களுடன் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதைப் பற்றிய புகைப்படங்கள் இருப்பதால் விளக்கு, அதிலிருந்து வரும் ஒளியின் தன்மை ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும்.

வெளிப்புற படப்பிடிப்பு, உட்புற அரங்கில் படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு உதவும் ஏராளமான விளக்குகள், ஒளியின் வீச்சை தடுக்கும் பொருட்கள், குறிப்பிட்ட கேமரா கோணங்களில் நடிகர்கள் புகழ்பெற்ற விதம், அதற்கான உதாரண திரைப்படங்கள் என நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒருவகையில் ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நூல் என்றே கூறலாம்.

கோமாளிமேடை டீம்
2

சினிமா கோட்பாடு
புதிய கோணம் - பாரதி புத்தகாலயம்
எம் சிவக்குமார்

இந்த நூலை முழுமையாக படிக்க முடியவில்லை. நூலில் ஒரு நான்கு அத்தியாயங்கள்தான் படிக்க முடிந்தது. நூலாசிரியர் பயன்படுத்திய மொழி, அவரது அறிவிற்கு ஏற்ப உயர்ந்த அளவில் இருந்தது. அதை எளிதாக எட்டிப்பிடிப்பது கடினம்.

சார்லி சாப்ளின் ஏன் மௌனப் படங்களை விரும்பினார், படத்தில் வசனங்களையோ, பாடலையோ வைக்க விரும்பவில்லை என்பதற்கான காரணம் மிகச்சரியானது. அதை சிவக்குமாரின் எழுத்து சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தது. காலமாற்ற கட்டாயத்தால் அவரும் படத்தில் பேசத் தொடங்கினார். ஆனால் அது வேறுவகையாக இருந்தது. தான் உருவாக்கிய உலகில் தானே சிக்கிக்கொள்வது என்பதற்கு சார்லி சாப்ளின் சிறந்த உதாரணம். அவர் உருவாக்கிய பிச்சைக்கார நாடோடி போன்ற பாத்திரம், பாடத் தொடங்கினால் எப்படி இருக்கும்? என்பதற்கான பதிலை சார்லி சாப்ளின் தேடிக்கொண்டு இருந்தார்.

அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர், உடல் பருமனான நடிகர். அவர் பாடல் பாடுவதாக வந்த சூழலில் இசையமைப்பாளர் இளையராஜா எப்படி பாடியிருப்பார் என அறிந்துகொண்டால், மேற்சொன்ன கேள்விக்கு விடை கிடைத்துவிடும். குரலை மாற்றி கோணங்கித்தனமாக பாடுபவர்கள் உண்டு. மற்றொரு வழியாக குறிப்பிட்ட பாடகரையே முழுப்பாடல்களையும் பாட வைத்துவிடுவது. சார்லி சாப்ளின் படத்தில் வேலையற்ற நாடோடியாக பார்த்தவுடனே சிரிப்பு வரும்படி நடித்தாரே ஒழிய, அவரால் பாடல்களை அழகாக பாட முடியும்.

சிவக்குமார் எழுதிய நூல் சினிமாவின் அடிப்படை கோட்பாடுகளைப் பற்றி பேசுகிறது. அதைப்பற்றி அறிந்துகொள்வது திரைப்பட இயக்குநர்களுக்கு அவசியம். அந்த வகையில் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. இதிலேயே ஒளி, ஒலி அமைப்பு, படத்தொகுப்பு என நிறைய விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது. துல்லியமாக விளக்கப்படுகிறது. ஆனால் நூலை அதன் ஆசிரியர் எழுதியுள்ள மொழியில் வாசிக்க சற்று பொறுமை தேவை. இல்லையெனில் கருத்தை உள்வாங்க முடியாது.

கோமாளிமேடை டீம்

நன்றி

பிரிதிவி

கருத்துகள்