வெப்ப அலையை இயற்கை பேரிடர் பட்டியலில் சேர்ப்பதற்கு தயக்கம் என்ன?

 

 

 


 


வெப்ப அலைகள் பேரிடராக அறிவிக்கப்படக்கூடுமா?

நாடு முழுக்க வெப்ப அலைகளின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. பள்ளி திறப்பு கூட தள்ளி வைக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் வெப்ப அலை தாக்குதலை, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் பேரிடராக அறிவிக்க முடியுமா என்பது பற்றிய விவாதங்கள் உருவாகியுள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வெப்பஅலை தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசுகள் தம் சொந்த நிதியையே இப்போதுவரை செலவிட்டு வருகின்றன. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெப்ப அலை வந்தால், நிதி ஒன்றிய அரசிடமிருந்து வர வாய்ப்புள்ளது.

1999ஆம் ஆண்டு ஒடிஷாவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி சம்பவம் ஆகியவற்றின் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் உருவாக்கப்பட்டது. இயற்கை அல்லது மனிதர்கள் உருவாக்கிய செயல்பாடு என இரண்டு வகையிலும் ஒன்றிய அரசின் உதவியை பேரிடர் காலத்தில் பெறலாம். இயற்கை பேரிடரில் சொத்துகள் இழப்பு, மக்கள் உயிரிழப்பு பேரளவில் ஏற்படும். அதை ஈடுகட்ட ஒன்றிய அரசு உதவுகிறது.

ஒரு மாநிலத்தில் இயற்கை பேரிடர் ஏற்படுகிறது என்றால், அதை சமாளிக்க மாநில அரசு மாநில பேரிடர் நிதியிலிருந்து(எஸ்டிஆர்எஃப்) குறிப்பிட்ட தொகையை எடுத்து செலவிடும். ஆனால் பாதிப்பு தீவிரமாக இருக்கும்போது தேசிய பேரிடர் நிதியை(என்டிஆர்எஃப்) நாடும். இயற்கை பேரிடம் நேரும்போது ஒன்றிய அரசுக்கு அதுபற்றிய நிதித்தேவை கோரிக்கை விடுத்தால். நிதி கிடைக்கும். இதில் மாநில அரசின் பங்கு இருபத்தைந்து சதவீதமாக இருக்கும். சில மாநிலங்களில் மாநில அரசின் பங்கு பத்து சதவீதம் மட்டுமே. இயற்கை பேரிடம் நிதிக்கான பணத்தை மாநில, மத்திய அரசுகள் வேறுவகையான செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது விதி.

புயல், பஞ்சம், நிலநடுக்கம், தீ, புயல், சுனாமி, நிலச்சரிவு, மேக உடைப்பு, பூச்சி தாக்குதல், உறைபனி, குளிர் தாக்குதல், பனிச்சரிவு, ஆலங்கட்டி மழை  ஆகியவற்றுக்கு மட்டுமே இயற்கை பேரிடர் வரிசையில் இடம் உள்ளது. மொத்தம் பனிரெண்டு பேரிடர்கள்தான் தேசிய பேரிடர் சட்டத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு, வடக்கு, மத்திய இந்தியப் பகுதிகளில் வெப்பஅலை இறப்புகள் புதிதல்ல. கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் சிலர் இறந்துபோவதுண்டு. 2005ஆம் ஆண்டு தேசிய பேரிடர் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகும் கூட வெப்ப அலை இறப்புகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் அது குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தானே என நடக்கிறது என அரசு யோசித்திருக்கலாம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெப்ப அலையின் பாதிப்பு தீவிரமாகியுள்ளது. இதன் விளைவாக, அதிக நேரம் வெளியில் வேலை செய்பவர்களுக்கு வெப்ப வாதம் பிரச்னை ஏற்பட்டு இறப்பை சந்திப்பதை நாளிதழ் செய்திகளில் அறிந்திருப்பீர்கள். இந்த வகையில் இந்தியாவில் உள்ள இருபத்து மூன்று மாநிலங்களில் வெப்பஅலை பாதிப்பு உள்ளது. வெப்ப அலை பாதிப்புள்ள மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களை மாநில அரசு மாற்றியமைக்க முடிவு செய்து வருகிறது. மேலும், மக்கள் வெளியே வந்தால் பொது இடங்களில் வெப்பத்தை தவிர்க்க நிழலான இடங்கள், குடிநீர் தரும் பகுதிகள் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இந்த செயல்பாடுகளை செய்ய மாநில அரசு தனது பேரிடர் நிவாரண நிதியை செலவிட முடியாது. எனவே, ஒன்றிய அரசிடம் நிதி உதவியைக் கேட்கிறார்கள்.


நிதி கமிஷனில் மூன்று முறை வெப்ப அலையை பேரிடர் சட்டத்தில் சேர்க்கச் சொல்லி மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால் நிதி கமிஷன், இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றிய அரசு அனுமதித்தால்தான் மாநில அரசு பேரிடர் நிதியை வெப்ப அலை பாதிப்புக்கு செலவிடமுடியும். அதற்கு உள்ளூர் அளவில் நேரும் பேரிடர் என்ற அளவில் ஒன்றிய அரசின் அனுமதி தேவை. இந்த வகையில் அனுமதி பெற்று நிதியை செலவழிக்கும் மாநிலங்களாக ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஒடிஷா, கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நிதி கமிஷன் என்பது ஒன்றிய அரசும், மாநில அரசும் வரி பங்கீடுகள் தொடர்பாக பேசி முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில் ஒன்றிய அரசு வெப்ப அலைகளை பேரிடராக கருதாததற்கு முக்கிய காரணம், நிதிச்சுமைதான். மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றால், வெப்ப அலை தாக்குதலில் இறக்கும் நபர் ஒருவருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயை வழங்க வேண்டியிருக்கும்.  இதெல்லாம் தாண்டி காயங்களுக்கும் இழப்பீடு தரவேண்டிய இக்கட்டு நிலை உண்டாகும்.

ஒன்றிய அரசு நிதிக்காக யோசித்தாலும் காலநிலை அந்தளவு கருணையோடு இல்லை. நடப்பு ஆண்டில் மட்டுமே வெப்ப அலை தாக்குதலில் ஐநூறு பேர் பலியாகியிருக்கின்றனர். அரசு, இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கையை தொடங்கினால் இறந்துபோன நபர்களின் எண்ணிக்கு வெளிப்படையாக தெரிய வரும். நடைமுறை ரீதியாக வெப்ப அலைத் தாக்குதலால் இறந்துபோனவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவி வழங்குவதும் எளிதானதல்ல. பேரிடர் மரணங்களை அடையாளம் காண்பது போல வெப்ப அலைத் தாக்குதலை எளிதாக அறிய முடியாது.

2021-26 ஆண்டுக்கான நிதிக் கமிஷன் ஒதுக்கீடுகளைப் பார்ப்போம். உத்திரப் பிரதேச மாநிலத்தின் பேரிடர் நிதியாக 1,60,153 கோடி ரூபாயை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகளுக்கான தொகை. இதே காலத்தில் மகாராஷ்டிரா அரசுக்கான நிதி பரிந்துரை 19,000 கோடியாக உள்ளது. இதில் அனைத்து இயற்கை பேரிடர்களும் அடங்கும். ஆனால் அச்சமே, இத்தொகை நடக்கும் பேரிடர்களை எதிர்கொள்ள போதுமானதாக இருக்குமா என்பதுதான். இதை ஒன்றிய அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்று தெரியவில்லை.

வெப்ப அலை தாக்குதலை ஒன்றிய அரசு இயற்கை பேரிடர் பிரிவில் சேர்த்தால், அதை எதிர்கொள்வது, இறந்துபோன நபர்கள் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்படும், தாக்குதலை சமாளிக்கும் திட்டங்களும் மேம்பட வாய்ப்புள்ளது.


WHY HEATWAVES HAVE NOT BEEN INCLUDED AS A NOTIFIED DISASTER IN THE
DISASTER MANAGEMENT ACT

IE
படம் - பிபிசி

கருத்துகள்