வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம்

 

 

 





வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம்


அரச நீதி என்பது தனது அதிகாரத்தை எப்படியேனும் தக்கவைத்துக்கொள்ள முயல்வது. நீதி,நிர்வாகம் தாண்டி சுயதோல்விகளைப் பற்றி விமர்சிக்கும் எவரையும் சர்வாதிகாரி விட்டுவைப்பதில்லை. அந்த வகையில் பிரிட்டிஷ் அரசும் தனது காலத்தில் போராட்டக்காரர்களை தேசதுரோக சட்டத்தின்படி தண்டித்தது. தலைவர்கள் பலரை சிறையிலிட்டது. நேதாஜி வழியில் சென்றவர்களை தூக்கிலிட்டது. இப்படி நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே அதற்கென உருவாக்கி வைத்த சட்டங்களின்படிதான் நடந்தன. அதே சம்பவங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஜனநாயகத்தின்படி கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்க கூலிப்படை தொடங்கி அரசின் புலனாய்வு அமைப்புகள் வரை பயன்படுத்துகிறார்கள். அப்படி அரச பயங்கரவாதத்தைப் முறைப்படுத்தும் சட்டங்களில் ஒன்று ஊபா.

எழுத்தாளர் அருந்ததி ராய், அவரது நாவல் எழுத்துக்காக உலகளவில் புகழ்பெற்றவர். அவரது எழுத்துகள், பேச்சுகள் அனைத்துமே பல லட்சம் பேரால் வாசிக்கப்படுபவை. கேட்கப்படுபவை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரை ஒன்றுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அருந்ததி ராயுடன், காஷ்மீர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சௌகத் ஹூசைனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். 153ஏ, 153பி, 505 ஆகிய சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவானால், அதிகபட்சமாக மூன்றாண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

 ஒன்றிய அரசு, எழுத்தாளரும், பேராசிரியரும் ஆகிய இருவரும் பேசிய பேச்சை மதம், இனம், சாதி ஆகியவற்றின் இணக்கத்தை குலைத்து பிரிவினையை ஆதரித்துப் பேசுவதாக அடையாளம் காண்கிறது. உரையாற்றிய சம்பவம் நடைபெற்று பல்லாண்டுகள் ஆகிவிட்டதால், தண்டனை அளித்தாலும் ஓராண்டுதான் அளிக்கமுடியும் சூழல் உள்ளது. எனவே, தண்டனை அளித்து எதிரிகளை ஒழிக்க பல வழிகளில் முயலும் ஒன்றிய அரசு ஊபாவை பயன்படுத்த முயல்கிறது. ஊபா சட்டத்தின்படி, பிரிவு பதிமூன்றுபடி,  ஒருவரை குற்றம் சாட்டினால் அவரை ஏழாண்டுகள் சிறையில் வைத்திருக்கலாம். முதலில் ஒருவரை சிறையில் தள்ளிவிட்டு பிறகு நிதானமாக குற்றச்சாட்டுகளை வடிவமைத்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து கூடுதலாக தண்டனை விதிக்கப்பட ஆவன செய்யலாம். பிணை வழங்குவதைக் கூட தடுக்க முடியும்.

2010ஆம் ஆண்டு எழுத்தாளர், பேராசிரியர் ஆகிய இருவர் மீதும் 124 ஏ சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டது. இந்த வகையில், தேசதுரோக சட்டம் உள்ளே வருகிறது. இந்த வழக்கின் நடவடிக்கையை 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து தடுத்தது. பேச்சு, எழுத்து, செயல்பாடு வழியாக சட்டம் ஒழுங்குக்கு கேடு விளைவிப்பது, பொது அமைதியைக் குலைக்கும் நோக்கம் இருப்பது என நீதிமன்றம் ஊபா சட்டத்தை நடைமுறைப்படுத்த விதியை வரையறுத்துள்ளது. இப்படி உச்சநீதிமன்றம் கூறவும் பீகாரில் கேதார் நாத் சிங் தொடுத்த வழக்கு(1962) காரணமாக இருந்தது.  ஒரு குடிமகன் அரசைப் பற்றி விமர்சிக்க, கருத்துகளைக் கூற, எழுத உரிமை உள்ளது. அவரது பேச்சு, எழுத்து அரசின் சட்டம் ஒழுங்கை குலைக்கவோ, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வன்முறை செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அதிகாரமும், உரிமையும் கூட குடிமக்களுக்கு இல்லையெனில், அந்த நாட்டை ஜனநாயக நாடு என்று எப்படி கூறுவது? தங்களை அடிமைப்படுத்தும் சட்டங்களை ஒரு நாட்டின் மக்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், முட்டாள்களை மூடன்தான் ஆளுவான் என்ற வாசகம் எந்தளவு உண்மையானதாக இருக்கவேண்டும். ஒருவர் எந்தளவு சிறந்த ஆளுமையாக இருந்தாலும், வசீகரம் கொண்டிருந்தாலும் அவரின் பாதத்தில் மக்கள் தம் சுதந்திரத்தை அடகு வைத்துவிடக்கூடாது. அப்படி செய்யும்போது, பின்னாளில் அந்த தலைவனே ஆபத்தான சர்வாதிகாரியாக மாறவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஐஇ
மூலக்கட்டுரையைத் தழுவியது.  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்