இந்திய அரசின் ஓய்வூதிய நிதிச்சுமையைக் குறைக்கும் அக்னிபாத் திட்டம்!

 




இ்ந்திய அரசின் அக்னிபாத் திட்டம் - எதிர்ப்பு ஏன்?

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்னிபாத் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. அறிவிக்கப்பட்ட காலம் தொடங்கி, அத்திட்டம் எதிர்க்கட்சிகள்,  முன்னாள் ராணுவ வீரர்கள் என கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி அக்னிபாத் திட்டத்தை எதி்ர்த்து பிரசாரம் செய்தது. இங்கெல்லாம் பாஜக நிறைய இடங்களை இழந்ததற்கு அத்திட்டம் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது.

ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத சிறுபான்மை பாஜக அரசுக்கு, ஐக்கிய ஐனதாதளத்தின் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் அக்னிபாத் திட்டத்தை மறுசீராய்வு செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். கடந்த இருமுறை பெரும்பான்மை பெற்ற பாஜக அரசு இம்முறை நினைத்த வெற்றியை பெறமுடியாமல் பின்தங்கியுள்ளது. இந்த நிலைமையில் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று இணக்கமாக செல்லுமா என்ற சில மாதங்களில் தெரிந்துவிடும்.

அக்னிபாத் திட்டத்தைப் பற்றி பார்ப்போம்.

பதினேழு வயது தொடங்கி இருபத்து மூன்று வயது வரையிலான வீரர்கள், ராணுவத்தில் அதிகாரி நிலைக்கு கீழாக வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இப்படி சேருபவர்கள் நான்கு ஆண்டுகள் பணி செய்யவேண்டும். பிறகு, இந்த வேலை செய்த தகுதி அனுபவத்தை வைத்து வேறு அரசு சேவைகளில் சேர்ந்து வேலை செய்யலாம். இப்படி வேலை செய்ய அனுமதிக்கப்படும் சேவைக்காலம் பதினைந்து ஆண்டுகள். இவர்களைத்தான் அக்னி வீரர்கள் என்று இந்திய அரசு குறிப்பிடுகிறது. விமானப்படை, கப்பல்படை ஆகியவற்றில் பெண்களும் கூட இணையலாம். மாத சம்பளமாக முப்பது ஆயிரம் தொடங்கி நாற்பது ஆயிரம் வரை வழங்கப்படும். மற்றபடி கொடுக்கப்படும் வேலைகளைப் பொறுத்து சம்பளம் கூடுதலாகும்.

கோவிட் -19க்குப் பிறகு அறிவிக்கப்பட்ட ராணுவ ஆள் சேர்ப்பு திட்டம் இது. இரண்டு ஆண்டுகளாக நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ராணுவத்திற்கு ஆட்களை சேர்ப்பது நிறுத்திவைக்கப்பட்டது. சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு சேவாநிதி என்ற இந்திய அரசு திட்டத்தில் சேர்க்கப்படும். நான்கு ஆண்டுகள் பணி நிறைவு பெற்றபிறகு, தோராயமாக வட்டியோடு சேர்த்து 11.71 லட்சத்தை அரசு வீரர்களுக்கு வழங்கும். இதில் வருமானவரி பிடித்தம் கிடையாது.

ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக வீரர்கள், பணியில் இருக்கும்போது இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். கூடவே, அந்த வீரர் நான்கு ஆண்டுகள் வேலை செய்தால் கிடைத்திருக்கும் சம்பளத் தொகையையும் அரசு வழங்கும். உடல் உறுப்புகள் ஊனமானால், மாற்றுத்திறனாளியின் பாதிப்பு மதிப்பீடு செய்யப்பட்டு 44 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

பார்ப்பதற்கு சிறப்பான திட்டம் போல தொடக்கத்தில் தெரிந்தாலும் இதன் பின்னால் உள்ள அரசின் உள்நோக்கம் வேறுவிதமானது. ராணுவ வீரர்களை நிரந்தரமாக நியமித்தால் அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். இதற்கே இன்று வரை அரசு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. அக்னிவீரர்கள், ஒப்பந்தமுறை திட்டம். இதில் சேருபவர்களில் 25 சதவீதம் பேரை மட்டுமே ராணுவசேவைகளுக்கு எடுப்பார்கள். எனவே அவர்களுக்கு மட்டும் ஓய்வூதிய பயன்களைக் கொடுத்தால் போதுமானது. மற்றவர்களுக்கு நயாபைசாவைக் கூட கண்ணில் காட்டவேண்டியதில்லை.  இதன் விளைவாக அரசுக்கு நிதிச்செலவு சுமை பேரளவில் குறையும்.

பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், அக்னிபாத் திட்டம், ராணுவத்தில் சீர்திருத்தமான ஒன்று. இதை செயல்படுத்தும்போது, ராணுவம் நவீனமாக தொழில்நுட்பத்திறன் கொண்டதாக மாறும் என்று பேசினார். ராணுவசேவையில் பங்குகொண்ட வீரர்கள் சமூகத்திற்கு திரும்பும்போது ஒழுக்கம் கொண்டவர்களாக பொறுப்புணர்வோடு நடந்துகொள்வார்கள். உள்நாட்டு உற்பத்தி வளர உதவுவார்கள் என இந்திய அரசு அப்போது வாதிட்டது. சேவையை நிறைவு செய்தவர்களுக்கு வேலை வேண்டுமே? இவர்களுக்கென பல்வேறு படிப்புகளும். சான்றிதழ்களையும் அரசு வழங்கும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் ஒன்றாம்தேதி. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, ஜனாதிபதிக்கு அக்னிபாத் திட்டத்தைப் பற்றி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நாட்டுக்கு உழைக்கும் அக்னி வீரர்களுக்கு
பிற ராணுவ வீரர்கள் போலவே சம்பளம், சலுகைகள் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி கூறினார். இத்திட்டத்தை தொடக்கம் முதலே அகில இந்திய காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதள், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் எதிர்த்து வந்தன.

தற்போதுவரை அக்னிபாத் திட்டத்தின் வழியாக நாற்பதாயிரம் வீரர்கள் ராணுவ சேவையில் பணியாற்றியுள்ளனர்.கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பரில் இருபதாயிரம் வீரர்கள் புதிதாக பயிற்சி பெறத் தொடங்கியுள்ளனர். விமானப்படையில் 7,385 வீரர்களும், கடற்படையில் 4,955 வீரர்களும் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்திய அரசு, அக்னிபாத் திட்டத்தை முழுமையாக கைவிடும் எண்ணத்தில் இல்லை. அதில் மாறுதல்களை செய்ய சில நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. ஆயுதப்பயிற்சி பெற்ற வீரர்கள், பணி முடிந்தபிறகு சமூகத்திற்கு திரும்பும்போது தவறாக வழிநடத்தப்பட்டால் அதற்கு கொடுக்கும் விலை பெரிதாக இருக்கும். வன்முறை செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது மாநில, மத்திய அரசுகளுக்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும். அக்னிபாத் திட்டம் பற்றிய சந்தேகங்களை தீர்க்க முயலவேண்டும். கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினரை தனிப்பட்ட தாக்குதலில் இறங்கி தரக்குறைவாக பேசுவது திட்டத்தின் மீதான அச்சத்தை அதிகரிக்கவே செய்யும்.

ஐஇ
பின்டிரெஸ்ட்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்