தேசநலனை லட்சியமாக கொண்ட பத்திரிகையாளர் ஏ என் சிவராமன்!

 

 

 

 



ஏ என் சிவராமனின் பத்திரிகை உலகம்
பொன் தனசேகரன்
விலை ரூ.30
உலக தமிழாராய்ச்சி நிறுவனம்

தினமணி நாளிதழில் நாற்பது ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர் பத்திரிகையாளர் ஏ என் சிவராமன். தனது எண்பத்து மூன்று வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது நாளிதழ் செயல்பாடுகளை நூல் கவனம் குவித்துப் பேசுகிறது. நூல் வழியாக ஏ என் சிவராமன் தமிழுக்கென செய்த முக்கியமான செயல்பாடுகள், மொழியாக்கம், எழுதிய கட்டுரைகள், என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஏ என் சிவராமன், டிஎஸ் சொக்கலிங்கம் என்ற தனது உறவினர் மூலம் பத்திரிகைத்துறைக்கு வந்தார். காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்க கல்லூரி படிப்பை கைவிட்டுவிடுகிறார். கல்லூரி படிப்பை கைவிட்டாலும் பல்வேறு நூல்களை வாசிப்பதை கைவிடவில்லை. அதனால்தான் தினமணி நாளிதழில் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்த முடிந்திருக்கிறது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்திருக்கிறார். வெறுமனே அறைக்குள் இருந்தபடியே கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியராக இருந்தாலும் பல்வேறு அயல்நாடுகளுக்கு பயணித்து செய்திக்கட்டுரைகளை தலையங்க கட்டுரைகளை எழுதி குவித்திருக்கிறார். நூலின் இறுதியில் அவர் எழுதிய பனிரெண்டு நூல்தொகுப்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன. இவையன்றியும் தினமணி காப்பகத்தில் ஏஎன்எஸ் எழுதிய கட்டுரைகள் நிறைய இருக்கலாம். அவற்றை தினமணி தனது பதிப்பகம் வழியாக வெளியிட்டால் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டுதலாக அமையும்.

ஏஎன் சிவராமனின் தனித்துவம் என வாசிப்பவர் கருதுவது, கட்டுரையை எளிமையாக்கி அதை படிக்க வைக்க மெனக்கெடுவதுதான். இதற்காக ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தும் பழக்கத்தையும் கூட உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அப்படி எழுதுவது சிக்கலான ஒன்று என்று புரிந்தாலும் வாசகர்களுக்கு புரிய வேண்டுமென யோசித்திருக்கிறார். மேலும், நிறைய ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து உதவியிருக்கிறார். குறிப்பாக எழுத்து சீர்திருத்தம் பற்றியும் ஆதரவாக எழுதியிருக்கிறார்.

பொதுவாக நாளிதழ் ஆசிரியர், தன்னை பொதுவான ஒருவராக காட்டிக்கொள்வது வழக்கம். ஆனால் ஏ என் சிவராமன், தான் காங்கிரஸ் கட்சி ஆதரவாளன் என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டவர். அதேநேரம் நாட்டின் நன்மைக்காக மட்டுமே தினமணி ஆதரவு தெரிவிக்கும். பலாத்காரமும், வன்முறையும் செய்பவர்களுக்கு அதன் ஆதரவு கிடைக்காது என எழுதியிருக்கிறார். இன்று தினமணியின் சார்பு மாறிவிட்டது. ஆனாலும், அன்றைய ஆசிரியர் இந்தளவு தைரியமாக எழுதும் அளவுக்கு அவருக்கு சுதந்திரம் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதனால்தான் அவரால் நாற்பது ஆண்டுகள் அங்கேயே வேலை செய்ய முடிந்திருக்கிறது.

பொருளாதாரம், விண்வெளி அறிவியல் பற்றி எளிமையான கட்டுரைகளை எழுதியுள்ளார். இத்தனைக்கும் அந்த துறை சாரந்த படிப்பை படிக்கவில்லை. ஆனால் வெளியில் ஏராளமான நூல்களைப் படித்து அதிலுள்ள தகவல்களை வாசகர்களுக்கு கட்டுரையாக வழங்கியுள்ளார். இந்த நேரத்தில் ஏ என் சிவராமன், கம்யூனிச நூல்களை 700 மணி நேரம் செலவிட்டு படித்துள்ளார். ஆனால், அந்த கொள்கையில் மாறுபாடு கொண்டவர். எனவே, கம்யூனிச இயக்கங்களைப் பற்றிய எதிரான கருத்துகளை நாளிதழில் எழுதியிருக்கிறார். அதற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் தனது கருத்தில் மாற்றமில்லை என்றே இயங்கியிருக்கிறார். இப்படி தைரியமாக இயங்குவதற்கு எது காரணமாக இருந்திருக்கும்? கம்யூனிச  தத்துவ நூல்களை சிறையில் ஆழமாக வாசித்ததுதான். கூடவே அவரது கள அனுபவங்களும் அவருக்கு உதவியுள்ளது.

அயல் நாடுகளுக்கு மாநாடுகளுக்காக சென்றவர், அங்கேயே தங்கி நாட்டின் நிலை, கல்வி, பொருளாதாரம் பற்றி தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். இன்றைக்கு யோசிக்கவே ஆச்சரியமாக இருக்கும் பல்வேறு விஷயங்களை ஏஎன்எ்ஸ் திறம்பட கையாண்டிருக்கிறார். நாளிதழ் நிர்வாகத்தில் உள்ள விஷயங்களை ஓரிடத்தில் கூறுகிறார். அதை குற்றவுணர்ச்சி என்பதா, இப்படி இருக்கிறதே என்று நினைப்பதா என்று புரியவில்லை. அவருக்கு கீழே உள்ள உதவி ஆசிரியர் நிறைய நூல்களை வாசிப்பவர். அடுத்த ஆசிரியராக வர அனைத்து தகுதிகளையும் உடையவர். ஆனால் ஏஎன்எஸ் ஆசிரியராக இருக்கிறார். நான் நோயுற்று இறக்கவில்லை என்பதால் அவருக்கு ஆசிரியர் பதவி கிடைக்காமலேயே போய்விட்டது என எழுதியிருக்கிறார். ஆசிரியர் பதவியை எட்டிப்பிடிக்க ஏராளமான அசிங்கங்கள், கீழ்த்தரமான நடவடிக்கைகள் அலுவலகத்தில் செய்யப்படுகின்றன. அந்த சூழ்நிலை, அன்றைய தினமணியில் குறைவாக அல்லது அறவே இல்லாமல் இருந்திருக்கிறது போல.

ஏஎன்எஸ், ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நூல்களை எழுதியிருக்கிறார். நூலாசிரியர் பொன் தனசேகரன், அதன் சில பகுதிகளை எடுத்து நூலில் பயன்படுத்தியிருக்கிறார். அவை எளிமையாக படித்து புரிந்துகொள்ளும்படி உள்ளன. கடினமான விஷயங்களை எளிமையாக புரிய வைக்கும் திறனைக் கொண்டிரு்ந்திருக்கிறார். இதன் இன்னொரு விளைவாக, கட்டுரை மிக நீண்டதாக மாறிவிடுகிறது. எட்டு கட்டுரைகளை கொண்ட நூலாக எழுத வேண்டியது, பதினெட்டு கட்டுரைகளைக் கொண்டதாக மாறுவது இதற்கு சரியான உதாரணம். இதெல்லாம், முக்கிய கருத்துகளை வாசகர்களுக்கு விளக்குவதற்கு ஆசிரியர் ஏஎன்எஸ் மெனக்கெடுவதுதான்.

தினமணி மதவாத சக்திகளுக்கு ஆதரவாக, குறிப்பிட்ட சாதி, மதம் சார்ந்து தனது செயல்பாடுகளை சுருக்கிக்கொண்டுவிட்டது. ஆனாலும், அன்றைய காலத்தில் தினமணிக்கென தனி மரியாதை இருந்திருக்கிறது. அதற்கு அதில் பணியாற்றிய டிஎஸ் சொக்கலிங்கம், ஏ என் சிவராமன் போன்ற கொள்கை உணர்ச்சி உடையவர்களின் பங்களிப்பதுதான். இவர்களின் நட்பு பற்றிய செய்திகள் நன்றாக உள்ளன. சொக்கலிங்கம் ஆசிரியராக தினமணியில் சேர்கிறார். அவருடன் சிவராமனையும் கூடவே அழைத்துச் செல்கிறார். பின்னாளில் சொக்கலிங்கம் நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விலகிச் செல்கிறார். ஆனால் சிவராமன் அங்கு ஆசிரியராக பொறுப்பேற்று செயல்படுகிறார். அந்த நாளிதழில் பிறகும் சொக்கலிங்கத்தின் கட்டுரைகள், கதைகள் வெளிவந்திருக்கின்றன. சிவராமனின் தொடக்க காலத்தில் தமிழ்நாடு, காந்தி ஆகிய இதழ்களில் வேலைவாய்ப்பை வழங்கியவர், டி எஸ் சொக்கலிங்கம்தான்.

சிவராமன் நாளிதழில் பயன்படுத்த வேண்டியதாக கூறிய விஷயங்கள் குறிப்புகள் கொண்ட நோட்டு, தொலைந்துபோய்விட்டதாக கூறுவது இடரலாக உள்ளது. உண்மையில் அந்த நோட்டு கிடைத்து அதை நூலாக்கியிருந்தால் பத்திரிகையாளர்களுக்கு சிறந்த நூல் கிடைத்திருக்கும். பனிரெண்டுக்கும் மேற்பட்ட நூல்கள் இப்போது சந்தையில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. கிடைத்தால் அவற்றை வாங்கிப் படித்து சிவராமனின் எழுத்து வடிவத்தை புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு அச்சு ஊடகத்தின் நம்பகத்தன்மை மறைந்துகொண்டிருக்கிறது. காட்சி ஊடகம் வளர்ந்து வருகிறது. அச்சோ, காட்சியோ அடிப்படையாக அமைவது களத்தில் அலைந்து திரிந்து பெறும் தகவல்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் ஏஎன்எஸ் முக்கியமான பத்திரிகையாளர், ஆசிரியர்.

நூலில் ஏஎன்எஸ்ஸை குருவாக கொண்டு வளர்ந்த பத்திரிகையாளர்கள் பற்றிய எந்த தகவல்களும் இல்லை. அப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  அவர், உதவி ஆசிரியர்களை எப்படி நடத்தினார் என்பது பற்றிய கருத்துகளும் இல்லை. ஏஎன்எஸ் பற்றிய நூல்தான். தவறு கூற முடியாது. ஆனால் அவர் நாளிதழ் அலுவலகத்தில் பிறருடன் இணைந்துதான் பணியாற்றியிருப்பார். ஆனால் அவர்களைப் பற்றி எந்த தகவல்களும் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

பொதுநல நன்மை என்ற நோக்கில் தனது கருத்துகளை அமைத்துக்கொண்டு, அதை வாசகர்களுக்கு வெளிப்படையாக சொல்லி நாளிதழை நடத்த முடியுமா என்றால் முடியும் என சாதித்து காட்டியிருக்கிறார் ஏ என் சிவராமன். பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான நூல்.


நன்றி
தமிழ்டிஜிட்டல் லைப்ரரி

கோமாளிமேடை டீம் 

 

 

 


இந்த விமர்சனம் ஸ்பாட்டிபையில் மழைப்பேச்சு பாட்காஸ்டிலும் வெளியாகியுள்ளது. 

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்