மனித பலத்தில் மூளைக்கும் சற்று பகிர்வு தேவை! - யாவரும் ஏமாளி அனுபவம்

 

 

 


 

 


 

 

மதிப்பிற்குரிய அன்னை உணவுப்பொருட்கள் தயாரிப்புக் குழுமத்திற்கு, வணக்கம்.

கடந்த 21.6.2024 வெள்ளிக்கிழமை அன்று தாராபுரம் செல்லவேண்டிய பணி. அங்கு சென்று பணியை முடித்துவிட்டு, மாலை நேரத்தில் ஶ்ரீ கண்ணன் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட்டிற்கு சில பொருட்களை வாங்கச் சென்றேன். அன்னை பிராண்ட் பேரீச்சம்பழம் நூறு கிராம் பாக்கெட் வாங்கினேன். விலை ரூ.51 என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அதை கணினியில் பில் போடும்போது 100 கிராம் ரூ.54 என்று காட்டியது. பில் போட்டவர், விலை அதிகமாக காட்டுகிறது. வேறு பிராண்ட் எடுத்துக்கொள்ளுங்கள் என பரிந்துரைத்தார். அதற்கு பதிலாக இருந்தது லயன் என்ற பிராண்ட். அந்த பாக்கெட்டின் விலை நூறு ரூபாய்க்கும் மேல். அன்னை பிராண்ட் நூறு கிராம் பாக்கெட்டின் விலை ரூ.54தான். வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள் என விற்பனையாளர் நெருக்கடி கொடுத்தார். எனவே, வேறுவழியின்றி அன்னை பிராண்ட் வேண்டாம் என்று சொல்லி பாக்கெட்டை செல்ஃபிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

உண்மையில், அன்னை நூறு கிராம் பேரீச்சைப்பழம் பாக்கெட்டில் வரி உள்பட அதிகபட்ச விலை அச்சிடப்பட்டு உள்ளது. ஆனால் கணினியில் வேறு விலை காட்டப்படுகிறது. இதில் எதை ஏற்பது என்று புரியவில்லை. எங்கு பிரச்னை என்று தெரியவில்லை. ஆனால் அன்றைக்கு என்னிடம் பணம் இருந்தும் கூட பேரீச்சம்பழத்தை வாங்க முடியவில்லை. இனி எதிர்காலத்தில் அன்னை பிராண்ட் கண்ணில் பட்டாலும் இந்த சம்பவம் நினைவில் வந்துகொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது.

தயவு செய்து விலை நிர்ணயத்தை சற்று தெளிவாக மேற்கொள்ளுங்கள். ஒரு பொருளை வாங்க நினைத்து ஆனால் அதை வாங்க முடியாமல் போன ஏமாற்றம், அன்றைய இரவு முழுக்க எனக்கு இருந்தது.

தவறு எங்கு நேர்ந்தது? சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திடமா அல்லது தங்களது விற்பனைக் குழுவிடமா என்று தெரியவில்லை. அதை சரி செய்துகொண்டால் உங்கள் குழுமம் மேலும் வளர்ச்சி பெறக்கூடும்.

நன்றி




இப்படியான சம்பவத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினால், அந்த முகவரிகள் செயல்பாட்டில் இல்லை என பதில் வருகிறது. இப்படி ஒரு உணவுக்குழுமம் செயல்பாட்டில் இருந்தால், அதன் பொருட்களில் நேரும் பிழைகளை எப்படி கூறி பதில் பெறுவது?

அன்னை டேட்ஸ் நிறுவனம், தொடக்கத்தில் ஒரே நபரை கொண்டு பிறகு முன்னேறி நிறைய பணியாளர்களைக் கொண்டதாக மாறியது என தங்களைப் பற்றி கூறிக்கொள்கிறார்கள். இன்று மசாலா, குளிர்பானம், தேன், பாலில் ஊற வைத்து சாப்பிடு்ம் உணவுப்பொருட்கள், சத்துமாவு என தயாரித்து பெரிய குழுமமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் ஒரே நபர் நிர்வாகம் செய்த மனநிலை மாறவில்லை. 

அன்னை டேட்ஸ் மட்டுமல்ல நிறைய நிறுவனங்கள் வலைத்தளங்களில் போனால் போகிறது என்று தொடர்பு மின்னஞ்சலைக் கொடுக்கிறார்களே தவிர, அதில் வரும் புகார்களுக்கு கருத்துகளுக்கு எந்த பதிலும் அளிப்பதில்லை. ஒருமுறை ஏமாந்துவிட்டாய், இனி என் பொருளை வாங்க மாட்டாய் பிறகு எதற்கு நான் பதில் சொல்லவேண்டும் என்ற ஆணவம்தான் இதற்கு காரணம். 

உடலுக்கு பலம் தேவை. உண்மைதான். ஆனால் அது மூளையிலும் இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.

 அன்னை உணவு தயாரிப்பு குழுமம் முன்னேறி வளர வாழ்த்துகள்.

 

கருத்துகள்