நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலையைத் துப்புதுலக்கும் போக்குவரத்து அதிகாரி

 

 

 

 


 

 

கபடதாரி
தெலுங்கு
இயக்கம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை சைமன் கே கிங்
மூலம் - கன்னடப்படம் காவலுதாரி
நடிப்பு சுமந்த், நந்திதா சுவேதா


குற்றத்தை துப்பறியும் சாகச திரைப்படம். கதை, 1975 தொடங்கி 2019 வரை இரு காலகட்டங்களில் நடைபெறுகிறது. போக்குவரத்துதுறை துணை ஆய்வாளர், குற்றப் பிரிவுக்கு மாற முயல்கிறார். ஆனால் எழுத்து தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாற முடியாத சூழ்நிலை. தன்னை நிரூபிக்க வழக்கு ஒன்றைத் தேடுகிறார். அப்படி கிடைத்த வழக்கு அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. சில உயிர்பலிகளும் நடக்கிறது. எடுத்த லட்சியத்தை நாயகன் முடித்தாரா இல்லையா என்பதே கதை.

படத்தில் நாயகதுதி, நாயகிக்கான பாடல், காதல் காட்சிகள், குத்துப்பாடல் என தெலுங்கு படத்தின் அத்தியாவசிய அம்சங்கள் ஏதுமில்லை. படத்தில் அனைத்து காட்சிகளுமே குறியீடுகளாக உள்ளன. ஆனால் ஒரு பார்வையாளராக அதை பெரிதுபடுத்தவேண்டியதில்லை. கதையை மட்டும் கவனித்தால் போதும். குறியீடுகளை அறிய யூட்யூபில் தேடினால் பதில்கள் கிடைக்கும்.

அகழாய்வு நடைபெறும் இடத்தில் ஆண், பெண், சிறுமி என மூன்று நபர்களின் எலும்புக் கூடுகள் கிடைக்கின்றன. தேர்தல் நேரம் என்பதால் காவல்துறையினர் வழக்கை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால், கௌதம் எனும் போக்குவரத்து துறை துணை ஆய்வாளர் அதில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைக்கிறார். அதை ஆராயத் தொடங்குகிறார். அப்போதுதான் அதை விசாரித்த ரஞ்சித் குமார் என்ற இன்ஸ்பெக்டருடன் பழக்கம் ஏற்படுகிறது. அவர் ஓய்வு பெற்று தனி பங்களாவில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு துணையாக டாபர்மேன் நாய் மட்டுமே உள்ளது.

கௌதமின் ஆர்வத்தைப் பார்த்து தான் முடிக்காமல் விட்ட வழக்கை தீர்க்க முன்வருகிறார். தகவல்களைக் கொடுக்கிறார். லாக்கப் நியூஸ் என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஒருவரும் அகழாய்வு நடந்த இடத்தில் எதையோ தேடி கௌதமிடம் மாட்டிக்கொள்கிறார். கௌதம், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர், பத்திரிகையாளர் என மூன்று பேரும் இணைந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நான்கு கொலைகளைப் பற்றி துப்பு துலக்குகிறார்கள்.

முக்கிய குற்றவாளி, முதல்வர் நாற்காலியை நோக்கி நகர்ந்து வரும் அரசியல் தலைவர் சீனிவாஸ். உண்மையில் இவர் யார் என்ற உண்மையை ரஞ்சித் குமார் அறிந்து அவரின் உண்மையான பெயரைக் கூறி அழைப்பது சிறப்பான காட்சி.

நாயகனுக்கு தன்னை நிரூபித்து குற்றப்பிரிவுக்கு மாறுவது அவசியம். அதேசமயம் எளியோரைக் கண்டால் இரங்கும் கருணை காட்டும் குணம் கொண்டவனாக இருக்கிறார். எனவே, இறந்துபோனவர்களின் எலும்புகளைக் கண்டதும் அமைதியாக இருக்கமுடியாமல் மேலதிகாரிகளை பகைத்து தனியாக விசாரணையில் இறங்குகிறார்.

ஒருவர் செய்த நன்றிக்கடனை, இன்னொருவர் தன்னை அறியாமலேயே பதிலாக உதவி ஒன்றைச் செய்து தீர்ப்பதாக காட்டியுள்ளனர். இத்தனைக்கும் உதவி செய்பவருக்கு தான் யாருக்கு உதவி செய்கிறோம் என்பது தெரியாது. அவர், தன் மனதில் எழுந்த நீதி உணர்வுக்காக எழுந்து போராடுகிறார். இதேபோன்ற இறுதிக்காட்சியை பிரசாந்த் வர்மா இயக்கிய கல்கி படத்தில் பார்க்கலாம்.

இந்த படம் தெலுங்கில், தமிழில் என இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. பரிசோதனை படங்களில் நடிப்பவரான சுமந்த் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். தமிழில் சிபிராஜ் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் நிறைய காட்சிகளை மேம்படுத்த உழைத்திருக்கிறார். அதை படமாக பார்க்கும்போது தெரியும். உடை வெள்ளையோ, காக்கியோ மனசு தூய்மையா இருக்கிறது முக்கியம் என ரஞ்சித்குமார் பேசும் வசனம் சிறப்பு. என்டிவிக்கு ஆதரவாக படத்தின் காட்சிகள் அமைந்துள்ளது. எதற்கோ என்று புரியவில்லை. ஊழலை அம்பலப்படுத்தும் சேனல் என கூற வருகிறார்களா?

படத்தில் இறுதிகட்டம் வரை நாயகனை அச்சுறுத்தும் விஷயங்கள் ஏதுமில்லை. எனவே, படம் நிதானமாக நகர்கிறது.

நிதானமாக நகரும் சாகச திரைப்படம். அனைவருக்கும் பிடித்தமானது என்று கூறமுடியாது. நேரமிருந்தால் பார்க்கலாம்.

கோமாளிமேடை டீம்


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்