ஆராய்ச்சியாளர்களின் பிணங்களைத் திருடி அழிவு சக்தியாக்கும் சதிகாரக்கூட்டம்!

 

 

 

 


 

 

லாரன்ஸ் மற்றும் டேவிட் மிரட்டும்
திகிலூட்டும் நிமிடங்கள்
லயன் காமிக்ஸ்
நன்றி -ஆர்எம்


அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் கதை. அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஆராய்ச்சி செய்பவருடன் லாரன்ஸ் அண்ட் டேவிட் ஆகிய இருவரும் விடுமுறைக்காக சென்று தங்கியிருக்கிறார்கள். அப்போது ஒருநாள் காட்டு வாத்து வேட்டைக்காக செல்கிறார்கள். அங்கு, ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் மாரடைப்பு வந்து இறந்துபோகிறார். இறந்த அடுத்தநாளே அழைக்காமல் இருவர் வந்து சவப்பெட்டி செய்பவர்கள் என்று கூறி உடலை அடக்கம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள். இது லாரன்ஸ், டேவிட்டிற்கு சந்தேகத்தை தருகிறது. பிறகு, உடலை ஆராய்ச்சியாளரின் கடைசி ஆசைப்படி அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். செல்லும் வழியில் ஜீப்பின் பிரேக் பிடிக்காமல் வண்டி விபத்துக்குள்ளாகிறது. அதில், லாரன்ஸ் டேவிட் அடிபட்டு மயக்கமாகிறார்கள். சவப்பெட்டிக்கு மட்டும் ஏதும் ஆகவில்லை. இவ்வளவு பெரிய விபத்தில் எப்படி சவப்பெட்டி அப்படியே இருக்கும் என்று திறந்து பார்த்தால் அதில் செங்கற்கள் இருக்கிறது. ஆராய்ச்சியாளரின் உடலைக் காணவில்லை. இரு புலனாய்வு ஆட்களும் சேர்ந்து விபத்து ஏற்படுத்தி சவத்தை திருடிய  கயவர்களை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே கதை.

கருப்பு வெள்ளை காமிக்ஸில் கதை படிக்க நன்றாகவே இருக்கிறது. டிசி காமிக்ஸின் கதை என்பதால், அமெரிக்க தேசப்பற்று கதையாக உருவாகியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக உள்ள அயல்நாடுகளின் சதியை பின்னணியாக வைத்து எழுதப்பட்ட கதையில் வில்லன்களின் அறிவியல் ரீதியான முறைகள் சிறப்பானவை. ஆனால் நோக்க அடிப்படையில் முட்டாள்தனமானவை. அமெரிக்க அரசின் பொருளாதார வளத்தை சீர்குலைப்பதே நோக்கம். அதற்காக கடல் அடியில் உள்ள எண்ணெய் கிணறுகளை குறிவைத்து அழிக்க முயல்கிறார்கள். இதைத்தான் லாரன்ஸ், டேவிட் ஆகியோர் தடுக்கிறார்கள். எண்ணெய் வளத்தை கைப்பற்றி இருந்தால் காசு பார்த்திருக்கலாம். அதை வில்லன்கள் செய்யவில்லை. பொருளாதாரத்தை நசிப்பிக்க முயல்கிறார்கள்.

கார்லோஸ், டோமோஸ் என இருவரும்தான் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளுக்காக அதை பழிவாங்க நினைக்கிறார்கள். அதற்கான நுட்பமான திட்டம்தான், ஆராய்ச்சியாளர்களின் மாரடைப்பு சம்பவம். காமிக்ஸில் நிறைய வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. துப்பாக்கிகள் முழங்குகின்றன. இவற்றை கருப்பு வெள்ளை ஓவியங்களாக பார்க்க நன்றாகவே இருக்கின்றன. அடிக்கடி கதையில் நீதியை நிலைநாட்டுபவர்கள், நீதியின் காவலர்கள் என்ற சொற்கள் வருகின்றன. அவை அவசியமற்றவை. அவை இல்லாதபோதும் கதைக்கு எந்த பங்கமும் இல்லை. உண்மைகளை வில்லன்கள் நாயகர்களுக்கு சொல்வதும் வாடிக்கையான காட்சி. ஆனால் டேவிட் இந்த சூழலின்போது, எதற்காக உண்மைகளை எங்களிடம் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். கதையை படிக்கும் நமக்கே அடேய் முட்டாள் உன்னைப் கொல்லப்போறானுகடா  என்று சொல்லத் தோன்றுகிறது. அசல் கதையில் இதுபோல அபத்த வசனம் இருந்தாலும் அதை எடிட் செய்துவிடலாம். தவறில்லை. அந்த இடத்தில் டேவிட் எதிர்வினை ஆற்றவில்லை என்றாலும் கதைக்கு பாதகமில்லை.

பொதுவாக லாரன்ஸ் புத்திசாலி. டேவிட்டிற்கு அவர்தான் கட்டளைகளை சொல்லுவார். டேவிட் அதை அப்படியே பின்பற்றுவார். கொஞ்சம் அவர் யோசிப்பது போல காட்டியிருக்கலாம். இருவருக்கும் சேர்த்து ஒருவரே யோசிப்பது பெரிய சுமையல்லவா?

ஆக விடுமுறைக்கு சென்ற இடத்திலும் மர்ம நபர்கள் செய்த தேச துரோக திட்டத்தைக் கண்டுபிடித்து லாரன்ஸ் டேவிட் ஆகியோர் இணை, தடுக்கிறது. நாட்டைக் காப்பாற்றுகிறது. ஆய்வாளர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறுவதில் மர்மம் ஒன்று உள்ளது. அதை காமிக்ஸைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஜீப்பில் ஏற்படும் விபத்து, கடலில் இருவரோடு போடும் சண்டை, சவப்பெட்டி ஆட்களோடு நிறுவனத்தில் சண்டை ஆகிய இடங்களில் ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. நேரம் கிடைத்தால் காமிக்ஸை வாங்கி வாசியுங்கள்.

கோமாளிமேடை டீம்







 

கருத்துகள்