தூமகேதுவுக்கு கிடைக்கும் சாமந்திமாலை சொல்லும் செய்தி! - இடக்கை - எஸ் ராமகிருஷ்ணன்

 

 

 

 

 


 

இடக்கை
எஸ் ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம்
ப.318
ஒளரங்கசீப்பின் இறுதிக்காலம், அவரது இறப்பு, புதிய பாதுஷா ஷா ஆலம் பதவியேற்பது, மெல்ல இந்தியா பல துண்டுகளாக பிளவுபடுவது, ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக வருவது, ஆட்சியைப் பிடிப்பது என நாவல் பயணித்து நிறைவடைகிறது. உண்மையில் இந்த நூல் அரசர்கள்,சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ள தீ்ண்டத்தகாதவர்கள் அதாவது இடக்கையர்கள் ஆகிய இருவரின் அக புற பிரச்னைகளைப் பேசுகிறது. நூலிலுள்ள முக்கியமான பாத்திரங்கள் என அஜ்யா, தூமகேது, சக்ரதார், படகோட்டி சம்பு, பிஷாடன், மந்திரி முக்தலன், மகாபிரஜா சபை, கவிஞர் ஜமீல் ஆகியோரைக் கூறலாம். இந்த பாத்திரங்கள் அனைவருமே அதிகாரத்தின் அருகே நின்று அதன் சாதக, பாதக விளைவை அடைந்தவர்கள். அதிகாரத்தின் அருகில் நிற்பவர்கள் எவருமே அந்த அதிகாரத்தால் எப்போது வேண்டுமானாலும் பலி கொடுக்கப்படலாம். ஆனால், அதை பலரும் பின்னாளில்தான் உணர்வார்கள். ஆனால் என்ன பயன்? அதிலிருந்து மீள வழி கிடைக்காது.

அஜ்யா, ஒளரங்கசீப்பின் பணிப்பெண். காலை அமுக்கிவிடுவதுதான் வேலை. ஆனால் அவர் இறந்தபிறகு, மன்னருக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால் வன்மத்தோடு பழிவாங்கப்படுகிறார். சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார். பின்னர் ஒருநாள் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுகிறார். அப்போதும் அவள் பெரிய வருத்தம் இல்லாமல் தனக்கு கிடைத்த வாழ்க்கைக்கு நன்றி கூறுபவளாக இருக்கிறாள். காவலர்களுக்கு நன்றி சகோதரா என்று கூறுவதே இறுதி வார்த்தை. அஜ்யா திருநங்கை. திறமையாக நாட்டியமாடுபவள் என்பதால் பாதுஷாவின் அந்தப்புரத்திற்கு வருகிறாள். உதய்பூர் அரசியின் பணிப்பெண். ஆணாக இருந்து பெண்ணாக தன்னை மாற்றிக்கொள்ளும் சூழலில் பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்கிறாள். அப்போது அவளுக்கு தர்ஷன் என்ற ஆண் நண்பன் நட்பாகிறான். பின்னாளில் இவனே அஜ்யாவை உடல்ரீதியாக உள்ள ரீதியாக காயப்படுத்துகிறான். ஆனால் தர்ஷனை பிச்சைக்காரனாக சந்தித்தபோதும் அஜ்யாவிற்கு காழ்ப்புணர்வு ஏதுமில்லை. அவனுக்கு உணவிட்டு, உடைகளை வழங்கி அங்கேயே இரு என்று கூறுகிறாள். ஆனால் தர்ஷனுக்கு தான் செய்த வன்முறை செயல்கள் நினைவுக்கு வர, உணவுக்கு நன்றி கூறிவிட்டு பழையபடி பிச்சைக்கார உடைகளை அணிந்துகொண்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான்.

அஜ்யா பாதுஷாவின் அரண்மனைக்கு வந்தபிறகு அவளுக்கு உடல்ரீதியாக பாதுகாப்பு கிடைக்கிறது. ஓரளவுக்கு மரியாதை கொண்ட வாழ்க்கையும் உறுதியாகிறது. இறுதியாக ஒளரங்கசீப்பிடம் தனக்கு நன்றிக்கடிதம் எழுதி தாருங்கள் என கேட்கிறார். தாய், சகோதரி என இருவேறு பாத்திரங்களில் அஜ்யாவை பார்த்த பேரரசர், அவருக்கென தனி உயிலே எழுதி வைக்கிறார். ஆனால், அதுவே அஜ்யாவிற்கு இறுதியாக உயிரை பலி வாங்குகிறது. உயில் என்றில்லை. அப்படி எழுதிக் கொடுக்காவிட்டாலும் மன்னருக்கு நெருக்கமாக இருப்பவர்களை அடுத்து மயிலாசனம் ஏறுபவர்கள் உயிரோடு விட்டுவைக்கப்போவதில்லை. அதுவே உண்மை.

தூமகேது, சாமர் சாதியைச் சேர்ந்தவர். இவர், சத்கர் நகரில் ஏற்பட்ட பிளேக் நோய் பாதிப்பை சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தி வரவைக்கப்பட்ட மக்கள் கூட்டத்தில் ஒருவர். கழிவுகளை அகற்றுவதுதான் இவர்களது மக்களின் ஒரே தொழில். அப்படி செய்யுமாறு அவர்களை மேல்சாதியினர் கட்டாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக இடதுகையை மட்டுமே வேலை செய்ய பயன்படுத்தவேண்டும். வலதுகையை பயன்படுத்த கூடாது. அதாவது, இடதுகதை தலித், வலது கை பார்ப்பனர். நகரின் கோட்டை அருகே மண்வீடு கட்டி வாழ்கிறார்கள். நகைகளோ பூவோ கூட அணிய முடியாது. செத்தால் அதற்கும் கூட மரியாதை கிடையாது. தீண்டாமை உச்சத்தில் இருந்த நாட்கள் அவை. தூமகேதுவுக்கு நடக்கும் செயல்கள், இன்றும் கூட சிறுபான்மையினருக்கு, தலித்துகளுக்கு இந்தியாவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது பேரவலம். சிறுவயதில் காளி கோவில் விழாவில் பயன்படுத்திய சாமந்தி மாலையை எடுத்த காரணத்திற்காக மேல் சாதியினர் சேர்ந்து அவனது வாயில் சாணியை கரைத்து ஊற்றுகிறார்கள். செருப்பு மாலை அணிவித்து அடித்து விரட்டுகிறார்கள். ஆண்களோடு சேர்ந்து பெண்களும் இச்செயலை மகிழ்ச்சியோடு வன்மம் கூட்டுசேர்ந்த மனத்துடன் செய்கிறார்கள்

காலா சிறையில் இதைப்போலவே ஒரு சம்பவம். அங்கும் மேல்சாதிக்கு ஒரு கிணறு, கீழ்சாதிக்கு ஒரு கிணறு உள்ளது. மேல்சாதி கிணற்றின் வாளியை தூமகேது பயன்படுத்துவதால், அடித்து உதைக்கப்படுகிறான். அவன் வாயில் நாயின் மலம் கரைத்து ஊற்றப்படுகிறது. காலா சிறையில் சக்ரதார் என்ற கதை சொல்லி அவனுக்கு துணையாக இருக்கிறார். கதைகளை பிறர் நம்பும்படி சொல்லி அவனது சாதி இழிவை நீக்க முயல்கிறார். கதையில், காலா சிறைவாசிகளைப் பற்றிய இடம் சற்று மாயத்தன்மை கொண்டதாக மாறுகிறது. தூமகேது இந்த இடத்தில் கண்கள் தெரியாத சர்ப்ப நயனி வாசிப்பவர் ஒருவரைச் சந்திக்கிறான். அடுத்து, ஐந்து பிள்ளைகளை விஷம் கொடுத்து கொன்ற தாயை சந்திக்கிறான். கேலி நாடகம் போட்டதால் கைதான புத்திசாலி ஒருவரையும் சந்திக்கிறார். இந்த மூவரின் கதைகளும் தூமகேதுவுக்கு உலகம் பற்றிய உண்மைகளை அதுவரை அறிந்தது தாண்டி உணர்த்துகிறது.

குழந்தையின் பசிக்கு யாரிடம் பிச்சை கேட்பது என்று தெரியாத நிலையில், அந்தப் பெண் உணவில் விஷம் கலந்து கொடுத்துவிடுகிறாள். இதே சூழலில் தூமகேதுவின் மனைவி நளா, வியாபாரிகளின் மாவு மூட்டைகளை திருடுகிறாள். பிள்ளைகளைக் காப்பாற்ற வேறு ஊருக்கு செல்கிறாள். இதை இரு விதமாக பார்க்கலாம். சிறைபட்ட பெண், பிறர் பொருட்களை தனது பிள்ளைகளுக்காக திருட துணிச்சல் இல்லாதவள். அதில் வரும் அவப்பெயருக்கு அஞ்சுபவள். கணவன் இல்லாத சூழலில் பெரும் சுமைகளுக்குள் அழுந்திப்போனவள். எனவே, குழந்தைகளை கொல்ல முடிவெடுக்கிறாள். நளா தன்னை சமூகம் ஏமாற்றுகிறது என நினைக்கிறாள். தவறே செய்யாத அப்பாவி கணவனை அரசு பிடித்துக்கொண்டுபோய்விட்டதாக சபிக்கிறாள். அவளது அரசுக்கு எதிரான மனநிலையை நாயைக் காப்பாற்றுவதிலிருந்து புரிந்துகொள்ளலாம். நாயை சிலர் கடத்திச்செல்ல முயல்கிறார்கள். ஆனால் நளா அவர்களை அடித்து விரட்டி சோறிட்டு பாதுகாக்கிறாள். இதை கேள்வி கேட்கும் மாமனாரை ஏசுகிறாள். காசு கிடைக்கும். சோறு வாங்கி குழந்தைகளுக்கு ஊட்டலாம் என்று அவள் எண்ணவில்லை. தன்னைப் பாதுகாத்த நாயை, அதற்கு ஆபத்து வரும்போது தானும் காக்கவேண்டும் என நினைக்கிறாள். இத்தனைக்கும் சாமர்களின் வீட்டில் மாவு, மிளகாய், வெங்காயம், உப்பு என எண்ணி நான்கே பொருட்கள்தான் உள்ளன.

சத்கரை ஆளும் சிற்றரசன், பிஷாடன். இவன் மனநிலை பிறழ்ந்தவன். இளம்வயதில் அன்பே கிடைக்காமல் போனதால், கொடூர மனம் கொண்டவனாக மாறியவன். இவனைப் பற்றி புரிந்துகொள்ள தினமும் இரண்டு வழக்குகளை விசாரிக்கும் முறை போதுமானது. நிரபராதிகள் என்றால் அவன் மீது எதற்கு குற்றம் சுமத்தப்படுகிறது? குற்றம் சுமத்தினால் போதுமானது. குற்றம் சுமத்தப்பட்டவன் குற்றவாளிதான் என முடிவெடுத்து அவர்களை காலா சிறையில் அடைத்துவிடுவான். இந்த நாட்டிலும் பார்ப்பனர்கள் உண்டு. அவர்களின் பெயர், மகாபிரஜாக்கள். இவர்கள்தான் அரசனுக்கு கீழே உட்கார்ந்துகொண்டு நிர்வாகம் செய்கிறார்கள். நாவலில் வரும் பிஷாடனின் ஆட்சி, தற்போதைய வலதுசாரி மதவாத ஆட்சியைப் போலவே இருப்பது தற்செயலா என்று தெரியவில்லை. பார்ப்பனவர்கள் தீட்டு, சடங்கு, ஆட்சிக்கு கேடு என மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தி தங்களைக் காத்துக்கொள்கிறார்கள். செல்வ வளம் பெறுகிறார்கள்.

நாவல் நெடுக தூமகேதுவின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. காலா சிறையில் இருந்து தப்பியபிறகு பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். அதில் ஜோயா என்ற கிராமம், அதன் வாழ்க்கை ஆச்சரியப்படுத்துகிறது. உண்மையில் மனிதர்கள் அடையவேண்டிய லட்சிய வாழ்க்கை என வைத்துக்கொள்ளலாம். உடற்பசி பற்றி பெண் ஒருவர் விளக்கிப் பேசுவது உண்மையிலேயே அந்த கிராமம் மேம்பட்ட அறிவை அடைந்த சமுதாயம் என்று தோன்ற வைக்கிறது. பேச்சு மட்டுமல்ல அந்த சமூகமே ஒரு இனக்குழுவாக வாழ்கிறார்கள்.

காலா சிறையில் கேலி நாடகம் போட்டவரும், கவிஞர் ஜமீலும் பேசுவது ஒன்றுபோலவே உள்ளது. அதாவது, சிந்தனை என்று வைத்துக்கொள்ளலாம். இளம் வயதில் தூமகேது அடைய நினைத்த சாமந்தி மாலை, குல்லாய் இறுதியாக அவருக்கு கிடைப்பதோடு நாவல் நிறைவடைகிறது. உண்மையில் தூமகேது சாமந்தி மாலையை எடுத்து முகர்ந்து பார்க்கிறார். உண்மையில் அவர் என்ன நினைத்திருப்பார்? ஏறத்தாழ அது அவரின் இறுதிக்காலம். மனைவி நளாவைத் தேடி தேடி இறுதியாக தள்ளாமை வந்துவிடுகிறது.

நாவல் முழுக்க ஏராளமான அற்புதமான தத்துவ வரிகள் உண்டு. அவற்றை எஸ் ரா தனியாக எழுதி விற்றால் கூட மக்கள் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். ஒளரங்கசீப் பற்றிய பகுதியில் நீதி, அரச நீதி, விசேஷ நீதி என பல்வேறு விதமாக கூறப்படுகிறது. ஞானி இபின் முகைதீன், நீதியை ஒருவன் மறுக்கும்போது, துர்மரணம் அவனுக்கு சம்பவிக்கும் என்கிறார். ஒளரங்கசீப்பை ஒட்டுமொத்த முகலாயர்களின் முகமாக, கொள்ளையராக நிறுத்துவது இந்துத்துவத்தை நிலைநாட்டு வேண்டுமானால் உதவும். உண்மையில் அரியணையில் அமரும் ஏராளமான ஆயுதங்களை தாங்கியுள்ள எவரும் அவரைப் போலத்தான் இருக்க முடியும். உண்மையில் ஐந்து வேளைகள் தொழுகிற தீவிர மதநம்பிக்கை கொண்டவரும், நண்பனின் துரோகத்தை தாள முடியாதவரும், மகளையே சிறை வைத்தவரும், சகோதரா என்ற குரலால் மனமுருகி தன் கையால் நெய்த குல்லாவை குறிப்பிட்ட நபருக்கு மசூதிக்கு அனுப்பி வைக்க முயல்பவரும் ஒரே நபர்தான். ஒளரங்கசீப் என்பவர், சிம்மாசனத்தால் ஆட்கொள்ளப்பட்டவர். முற்றிலும் நல்லவருமல்ல. கெட்டவருமல்ல. நாவல், அவரை அப்படியே முன்வைக்கிறது. சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவேண்டும் என சிலர் கூறி தேசப்பற்றை விளக்குவார்கள். உண்மையில், அரசர் நீதி, நிர்வாக சட்டங்களைத் தாண்டி தனது விருப்பங்களை நிறைவேற்ற தனிச்சட்டங்களை உருவாக்கிக் கொள்ள முடியும். தனக்கு பிடிக்காத சிறுபான்மையினரை வேட்டையாடி அழிக்க முடியும். நீதி பற்றிய விளக்கங்கள், விவாதங்கள் நூல் முழுக்க வருகின்றன. அவை அனைத்துமே நாம் இதுவரை கொண்டிருந்த கருத்துகளை மறுபரிசீலனை செய்யக் கோருகின்றன. நீதிக்கான கலந்துரையாடல் பயணம் என்று கூறலாமா?

இடக்கைக்கான நீதி கிடைக்கிறது. ஆனால் அதை வாசிக்கும்போது நம்மிடம் வெறுமை மட்டுமே மிச்சமிருக்கிறது.

வாய்ப்பிருப்பவர்கள் நூலை வாங்கி வாசியுங்கள். எஸ் ராவின் வசீகர எழுத்து உங்களின் மனங்களைக் கட்டிப்போடும்.

கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்