அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு!

 

 

 

 

 

 



 

 

அசைவ - சைவ இந்தியாவின் சாப்பாட்டுக் கணக்கு!

உலகில் சைவம், அசைவம் என்பதெல்லாம் வியாபாரத்திற்கு உண்டான சமாச்சாரங்கள். உணவைச் சாப்பிடும் மக்கள் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவது கிடையாது. பசிக்கு சாப்பிடும் உணவு கூட இன்று அரசியல்மயமாகி சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்படும் அளவில் உள்ளது. உண்மையில் இந்தியாவில் சைவம் சாப்பிடும் பழக்கம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். இங்கு தீவிர சைவம் என்றால் பருப்பு, காய்கறிகள், பழங்கள் மட்டும்தான் என்பதைக் குறிப்பிட்டுவிடுகிறோம். சிலர் சைவத்தில் பால், முட்டை இன்னும் பல பொருட்களை சேர்த்து அதற்காக விவாதம் செய்யவும் முயல்கிறார்கள்.

தீவிர சைவத்தில் பாலை சேர்க்க முடியாது. பால், விலங்கிடமிருந்து பெறும் பொருள். எனவே, அதை தீவிர சைவ பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தமுடியாது. ஆனால், அனுபவ அடிப்படையில் ஒருவர் பாலை தனது உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயிர், வெண்ணெய், நெய் ஆகிய பால் பொருட்களைப் பயன்படுத்தலாம் என்று மகாத்மா காந்தி எழுதியிருக்கிறார்.

அண்மையில் இந்திய மாநிலங்களில் கிராமம், நகரம் என உணவுக்கு செலவழித்த விவரங்களை ஆய்வு செய்துள்ளனர். 2022-2023 ஆம் ஆண்டறிக்கை வெளியாகியுள்ளது. அதிலுள்ள விவரங்களைப் பார்ப்போம்.

கிராமங்களில் தனிமனித அளவில் காய்கறி, பழங்கள், பருப்பு ஆகியவற்றுக்கான செலவுத்தொகை முறையாக 202.86, 140.16, 75.98 என செலவிட்டிருக்கிறார்கள். அப்படியிருந்தாலும் பாலுக்காக செலவிட்டுள்ள தொகை அதிகமாக 314.22 ஆக உள்ளது.  நகரப்பகுதியில் பாலுக்கு செலவிட்டுள்ள தொகை 466.01 ஆக உள்ளது. இதோடு ஒப்பிட்டால் காய்கறி 245.37, பழங்கள் 245.73, பருப்புகளுக்கான 89.99 தொகை மிக குறைவு.  

பாலையும், பால் பொருட்களையும் சாப்பிடுபவர்களை முழுமையாக சைவ சாப்பாட்டுக்காரர்கள் என்று கூற முடியாது. வீகன் என்ற உணவுமுறையைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் விலங்குகளிடம் இருந்து பெறும் உணவுப் பொருட்களையும் கூட தவிர்ப்பார்கள். முழுக்க தானியங்கள், தாவர உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சைவ இந்தியர்களை முழுமையாக உறுதி கூறிவிட முடியாது.

சைவ இனக்குழுக்கள் அதிகம் வாழும் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கூட காய்கறிகளை வாங்குவதற்கு செலவிடும் பணம் குறைவு. பாலை வாங்கவே அதிகம் செலவு செய்திருக்கிறார்கள்.  குஜராத்திகள் கிராமத்தில் பாலுக்கென 476. 35, நகரத்தில் 669.78 என மாதம்தோறும் செலவழித்திருக்கிறார்கள். ராஜஸ்தானில் கிராமத்தில் 660.85, நகரத்தில் 776.47 என பாலுக்கென செலவிட்டிருக்கிறார்கள். இது இந்தியாவின் பால் செலவுக்கான தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. தேசிய சராசரி கிராமத்தில் 314. 22, நகரத்தில் 466.01 என்ற அளவில் உள்ளது.

சைவம், அசைவம் என சாப்பாட்டு பழக்கம் எப்படியோ வேறுபாடுகள் இன்றி மக்கள்  பால் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இல்லையெனில் குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி ஆகிய பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனங்கள், டி20 உலக கோப்பையில் வெளிநாட்டு அணிகளின் ஜெர்சியில் விளம்பரம் செய்து முன்னேறி இருக்க முடியுமா? பாலுக்கு மாற்றாக சோயாபால், நிலக்கடலை பால் என்று நிறைய வந்தபோதும் எருமை மாட்டுப் பாலுக்கான மவுசு குறையவே இல்லை. எளிதாக கிடைக்கிறது. தூய்மையாக இருக்கிறது. இது போதாதா பாலை ஒருவர் பெற்று அருந்த....

வடக்கு, மேற்கு, மத்திய இந்தியப் பகுதிகளில் பாலை அருந்தும் மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை முட்டை, மீன், கறி சாப்பிடுபவர்களை விட அதிகம்.

ஆரிய சமாஜம், வைஷ்ணவ ஜெயின் மக்கள் அதிகம் வாழும் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், இந்தி பேசுபவர்களான உ.பி, ம.பி, பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பால் அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்.

வடகிழக்கு மாநிலங்களில் இறைச்சி, மீன், முட்டை சாப்பிடும் பழக்கம் அதிகம். இந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் இறைச்சிக்காக கிராமத்தில் 555.02, நகரத்தில் 608.20 என செலவிடுகிறார்கள். இது தேசிய அளவில் பிற மாநில சராசரியை விட அதிகம். தேசிய சராசரி கிராமத்தில் 185.16, நகரத்தில் 230.66 என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் சைவ மாநிலங்களாக பதினான்கு மாநிலங்கள் உள்ளன. அசைவ மாநிலங்களாக பதினாறு மாநிலங்கள் உள்ளன. அசைவம் சாப்பிடும் மாநிலங்களில் இறைச்சிக்கு செலவிடும் தொகை என்பது பாலுக்கான தொகையை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கறியும் மீனும் சாப்பிட்டு களிக்கும் மாநிலங்களென கேரளா, கோவா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களைக் கூறலாம். இந்த மாநிலங்களில் பாலுக்கென செலவிடும் தொகை சைவ மாநிலங்களை விட குறைவு.

பழங்குடிகளை விட்டுவிட்டோமே.. ஒடிஷா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முட்டை, இறைச்சி, மீன் சாப்பிடும் மக்கள்தொகையினர் அதிகம் உள்ளனர். இங்கெல்லாம் நகரங்களை விட கிராமங்களில் அசைவ சாப்பாட்டுக்கு என அதிகம் செலவிடுகிறார்கள். இதேபோக்கு ஆந்திரம், தெலங்கானா மாநில கிராமப்பகுதிகளிலும் அப்படியே தொடர்கிறது.

ஆக. விரைவில் அகண்ட பாரதமாக மாறப்போகும் இந்தியாவில் சைவ உணவுப்பழக்கம் என்பதில் காய்கறிகள், பழங்கள், பருப்புகள் காணப்படவில்லை. பால்தான் தென்படுகிறது. இறைச்சியை வாயில் வைக்காதவர்கள் கூட பாலை மறுப்பே இல்லாமல் அருந்தி வருகிறார்கள். உபரித்தகவல் அமுலின் அப்படியே குடிக்கும் 180 நாட்கள் கெடாத இருநூறு மில்லி டெட்ராபேக் பாலின் விலை ரூ.15தான்.

ஐஇ
https://indianexpress.com/article/explained/ex
plained-economics/what-vegetarianism-
means-in-india-9391436/ 

cartoon stock.com

 மூலக்கட்டுரையின் தழுவல்....

கருத்துகள்