நாவலை திரைப்படமாக எடுக்க ஆசைப்படுபவர்களுக்கான வழிகாட்டி நூல்!

 

 

 


 

 

 

நாவலும் சினிமாவும்
தொகுப்பு - திருநாவுக்கரசு
நிழல் வெளியீடு

நிழல் என்பது சினிமா தொடர்பான பத்திரிகை. இந்த பத்திரிகையில் பல்வேறு எழுத்தாளர்கள் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். நூலின் மையப்பொருள், நாவலை அடிப்படையாக வைத்து எப்படி திரைப்படங்களை உருவாக்குவது, அப்படி உருவாக்கியதில் சிறந்த திரைப்படங்கள் உள்ளனவா, அந்த பணியில் சொதப்பிய படங்கள் எவை, எந்த இடத்தில் பார்வையாளர்களை கவராமல் போயின என்ற விளக்கமாக கூறியுள்ள நூல்.

நூலின் இறுதியில், திரைப்பட இயக்குநர்கள் எந்தெந்த நாவல்களை திரைப்படமாக எடுக்கலாம் என குறிப்பிட்டு முருகேச பாண்டியன் அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். அதை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நூல்களாக வாங்கி வாசித்து பயன்பெறலாம். மற்றபடி கதை, திரைக்கதை என அனைத்துமே தான் என்று போட்டுக்கொள்ள விரும்பாத பெருந்தன்மை கொண்ட இயக்குநர்கள் கதைகளை படித்து உரிமை வாங்கி திரைப்படமாக மாற்றிக்கொள்ளலாம். நாவல்களை படித்தால் கூட அதை திருடி தன்னுடைய படத்தில் வைத்து ஜெயிக்க முயல்பவர்களே அதிகம். அதையும் மீறி யோக்கிய இயக்குநர்கள் இருந்தால் எழுத்தாளர்களுக்கு நன்மை நடக்கலாம். நூலில் இங்கிலீஷ் பேஷன்ட் உள்ளிட்ட ஐந்து முக்கியமான ஆங்கிலப்படங்கள் நாவலைத் தழுவி எப்படி திரைப்படமாக எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட படத்தில் கதை, திரைக்கதை என்னவாக இருந்தது, மூலத்திற்கு நெருக்கமாக இருந்ததா, மாற்றப்பட்டிருந்ததா என்றெல்லாம் விரிவாக எழுதப்பட்டுள்ளது. நூல் திரைப்பட இயக்குநர்களுக்கானது. மற்றபடி திரைப்படத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்டுள்ள உதாரண திரைப்படங்களை இணையத்தில் தேடி பார்க்கலாம். தவறில்லை.

இறுதியாக உள்ள நாவல்களை அறிமுகப்படுத்திய பகுதி நன்றாக இருந்தாலும் கூட அதை பரிந்துரை என முழுமையாக எடுத்துக்கொண்டுவிட வேண்டியதில்லை. வாசிப்பு பழக்கம் கொண்ட திரைப்பட இயக்குநர்களுக்கு திரைப்படமாக எடுக்கலாம் என நம்பிக்கையூட்டும் கதைகளை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கதையை காட்சிமொழியில் சாத்தியப்படுத்துவது அவர்கள்தானே? தீவிர இலக்கிய நூல் என்றில்லை. ராணிமுத்து, மாலைமதி, க்ரைம் நாவல் ஆகியவற்றில் கூட கதை கிடைக்கலாம். யார் கண்டது? திருநாவுக்கரசு அவர்கள் தொகுத்துள்ள இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது, நாவலை எப்படி படமாக்குவது என்பதற்கான ஐடியா கிடைத்துவிடும். அதில் எந்த மாற்றமுமில்லை. ஒரு நாவலை பலரும் திரைப்படமாக எடுக்கலாம். ஆனால் அதில் காட்சியமைப்பில் திறன் கொண்டவர்களின் படம் மட்டுமே காலம் கடந்து பார்வையாளர்களைக் கவரும். எனவே, கருத்தாழமிக்க திரைப்படங்களை விரும்புபவர்கள் நாவலும் சினிமாவும் நூலை ஆர்வமாக வாசிக்க வாய்ப்புள்ளது.

கோமாளிமேடை டீம்

நன்றி திரு.பிரிதிவி பொன்னுராஜா, ஜீவா, அதிதேவ வர்மன்

https://www.panuval.com/navalum-cinemavum-10022447

 

கருத்துகள்