சீன பொருட்களை தடை செய்வதால் இந்தியா ஜெயிக்க முடியுமா? - தேசப்பற்றும் வணிகமும்









Salt Bae Ban GIF







சீனா இந்திய ராணுவ வீரர்களை தாக்கியவுடன் எப்போதும் போல ஆளுங்கட்சியினர் தேசவிரோத பொருட்களை பயன்படுத்தக்கூடாது என அறிவீனமாக பேசத்தொடங்கிவிட்டனர். பிரதமர் எல்லையில் சீனா அத்துமீறலை செய்யவே இல்லை என்று பேசியிருக்கிறார். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, இனி இந்தியாவில் சீன உணவுகளை பகிஷ்கரிப்போம். இதுதான் சீனாவுக்கு உண்மையான பதிலடி என முழங்கியிருக்கிறார். அப்போதே ட்விட்டரில் ஹோட்டல்துறை சங்க தலைவர், இது தவறானது. இந்தியப் பொரூட்கள் மூலம் இந்தியர்கள் சீன உணவுகளை தயாரிக்கின்றனர். அதனை சாப்பிடக்கூடாது தயாரிக்க கூடாது என்றால் நஷ்டம் நமக்குத்தான் என்று கூறினார். பாஜக ஏராளமான உள்நாட்டு அறிஞர்கள் நிரம்பி வழியும் கட்சி என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற மறுமொழிகள் காதில் கேட்காது. இருந்தாலும் சீனாவின் பொருட்களை பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனப் பொருட்களுக்கு தடை என்பது என்ன பிரச்னையை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

வணிகத்தை நிறுத்துவோம்

இந்தியா வணிக ரீதியான உறவை துண்டிப்பதால் இந்தியாவுக்கு பெரிய பலம் ஏற்படும் என்றோ, பலவீனம் ஏற்படூம் என்றோ கூறிவிட முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன்தான் இந்தியா நிறைய வியாபாரங்களைச் செய்கிறது. மீதியுள்ள 22 நாடுகளில்(சீனா, தென்கொரியா, நைஜீரியா, இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா) பற்றாக்குறையான வியாபாரம் தான் நடந்து வருகிறது.

நாம் சீனப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்கிறோம். நாம் ஏற்றுமதி செய்யும் சில பொருட்களையே சீனர்கள் வாங்குகிறார்கள். இந்த தன்மையைத்தான் நாம் பற்றாக்குறை என்கிறோம்.

மக்கள் தன்னியல்பாக தங்களுக்கு என்ன தேவை என்று தேடி வாங்குவதை அரசு தடுக்க முடியாது. அடுத்து இந்திய அரசிடம் தற்போது 500 பில்லியன் அளவுக்கு அந்நிய செலாவாணி இருக்கிறது. எனவே, இறக்குமதி செய்வதற்கான பலம் நம்மிடம் உள்ளது. அடுத்து, இந்திய மக்கள் தன்னிறைவாக வாழ்வதற்கான அனைத்து பொருட்களையும் உற்பத்திசெய்யும் திறன் இந்தியாவில் இல்லை என்பதுதான் உண்மை.

இன்று வணிகம் செய்யும் எந்த நாடும் தற்சார்பு கொண்ட நாடாக இல்லை. அப்படியிருந்தால் இன்னொரு நாட்டில் வியாபாரம் செய்வதற்கான அவசியமே இல்லையே? தற்சார்பு இந்தியா என்று அரசு கூறியபடி நடந்தால் வியாபாரங்களே நடைபெறாது. ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் அதற்கு அதிகாரம் உள்ளது. அதற்கான கொள்கைகளை வகுத்து அடிப்படை வசதிகளை துல்லியமாக செய்துகொடுத்தால் வியாபாரம் வளரும். இதற்கும் குறிப்பிட்ட பொருட்களை வாங்காதீர்கள் என்று சொல்லுவதற்கும் சம்பந்தமே இல்லையே?

மலிவான விலையில் தரமாக இருந்தால் அது எந்த நாட்டில் தயாரித்தால் என்ன, மக்கள் அப்பொருட்களை நிச்சயமாக வாங்குவார்கள்.

ஏழைகள்தான் பலியாடுகள்

இன்று நாம் கையில் வைத்துள்ள எலக்ட்ரானிக் பொருட்களைப் பாருங்கள். அனைத்து சீன நிறுவனங்களுடையதாகவே இருக்கும். ரியல்மீ, ஜியோமி போன்கள், குளிர்சாதனப்பெட்டிகள், முக்கியமான பெரிய திரைகளைக் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள், சமையல் சாதனங்கள் என இவை அனைத்தும் சீனத் தயாரிப்பாளர்களின் கைவண்ணம்தான். இவற்றை திடீரென தடுப்போம் என உள்நாட்டு தேசப்பற்றாளர்கள் சொன்னால் பாதிக்கப்படுவது இவற்றை வாங்கிவைத்து விற்றுக்கொண்டிருக்கும் வியாபாரிகளும், மக்களும்தான். இதற்கு மாற்றாக அமெரிக்க, ஜப்பான் நிறுவனங்களின் பொருட்களைத் தேடினால் உறுதியாக விலை அதிகமாகவே இருக்கும். அதனை பார்க்கத்தான் முடியுமே தவிர ஏழைமக்கள் வாங்க முடியாது.

வியாபாரிகளை பாதிக்கும்

சீனாவுடனான வியாபாரத்திற்கு தடை என்றாலும் கூட உடனே இந்திய வியாபாரிகள் பெரிதாக பயன் அடைந்து விட முடியாது. மக்களின் அனைத்து தேவைகளுக்கான தயாரிப்பு இங்கு நடைபெறவே இல்லை. சிலர் இத்தடையால் பயன்பெறுவார்கள் என்பதை மறுக்கவில்லை. மக்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோகப்பொருட்களை மட்டும் சீனர்கள் தயாரித்து இங்கு அனுப்பவில்லை. ஏராளமான மின்சாதன பொருட்களையும் தயாரித்து அனுப்புகிறார்கள். அவற்றை தடாலடியாக தடை என்று சொன்னால் உள்நாட்டில் நடைபெற்றும் வரும் பல்வேறு செயல்பாடும் நின்றுபோய்விடும்.

யாருக்கு பாதிப்பு?

இந்தியர்களுக்குத்தான். சீனாவைப் பொறுத்தவரை பல்வேறு நாடுகளுக்கு தன் பொருட்களை விற்று வருகிறது. இதில் இந்தியாவும் ஒரு நாடு. அவ்வளவுதான். இந்தியா இப்போது சீனாவுடனான வியாபாரத்திலிருந்து விலகுகிறது என்றால், சீனாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இதற்கு பதிலடியாக தனது நிதியாதாரங்களை நிறுத்தினால் இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்கள் திகைத்து செயல்பாடுகளை முடக்கவேண்டி வரும். இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சீனாதான் ஏராளமான நிதியுதவிகளை முதலீடாக்கி வருகிறது.

மக்கள் அளவில் அதிக விலைகொடுத்து, சேமிப்பைக் கரைத்து இந்தியப் பொருட்களை நாம் வாங்கவேண்டி வரும். அதனை  வேண்டாவெறுப்பாகவே செய்யவேண்டிவரும். தரமாக இருந்தால் பொருட்கள் விற்றிருக்காதா என்ன? கிரிக்கெட் வாரியம் கூட சீன நிறுவனத்தின் விளம்பர பணத்தை காரணம் காட்டி, அதனை விலக்க முடியாது என்று கூறியிருக்கிறதே? வியாபாரம் என்பது வேறு, அரசியல் வேறு என புரிந்துகொண்டால் பிரச்னையில்லை.

நம்பிக்கை இழப்பு

இந்தியாவில் முதலீடு செய்துள்ள பிறநாடுகளைச் சேர்ந்தவர்களும் சீனாவுக்கு விதித்த தடையால் பின்வாங்குவார்கள். நாளை அவர்களுடைய நாடு கூட இப்படியொரு நிலை ஏற்படலாம். ஒரே இரவில் கொள்கைகளை மாற்றிக்கொண்டால் அவர் முதலீடு செய்த பணம் என்னவாகும்? இந்தியாவின் மீதான நம்பிக்கை முதலில் அழியும். அடுத்து, அதன் மிச்சமுள்ள தற்சார்பு தொழில்வளம் காணாமல் போகும்.

வரிகளை ஏற்றலாமா?

முடியாது. இப்போது சீனாவின் முக்கியமான பல்வேறு பொருட்களுக்கு இந்தியா எந்த வரியும் விதிக்கவில்லை. இப்போது திடீரென வரிவிதிப்பை கொண்டுவந்தால் சீனா உடனே உலக வர்த்தக கழகத்தின் வாசலில் போய் நிற்கும். உடனே அந்த அமைப்பு இந்தியாவை பல்வேறு வணிக ஒப்பந்தங்களை காரணம் காட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றும். இது பிற வணிகங்களையும் பாதிக்கும். இந்தியாவால் இந்த வணிக பாதிப்பை தாக்குப்பிடிக்க முடியாது.

முன்னமே முன்னமே

இந்தியா இப்போது உள்நாட்டு உற்பத்தி காணாமல் போய் பொருளாதாரம் பாதாளத்தில் கிடக்க தடுமாறி வருகிறது. அரசுக்கு இப்போது ஒரு வருமானமாக எரிபொருள் மட்டுமே இருக்கிறது. அதனையும் மெல்ல பைசா கணக்காக ஏற்றி பத்து ரூபாய்க்கு பக்கம் வந்துவிட்டார்கள். இந்த நேரத்தில் எல்லைப் பிரச்னையை வியாபாரத்திற்கு மடை மாற்றினால் இந்தியா திவாலாகும் வாய்ப்பு அதிகம். இதில் சீனாவுக்கு பெரிய பாதிப்பு வராது.

மேலே சொன்ன இறக்குமதிக்கு வரி உயர்வு, தற்சார்பு உற்பத்தி, பொருட்களை புறக்கணிப்பது ஆகியவற்றை இந்தியா ஏற்கெனவே கைகொண்டு ஏராளமான அடிகளை வாங்கி துவண்டுவிட்டது. இந்தியா இப்போதும் உள்நாட்டை காப்பாற்றுகிறேன் என்று தாராள வணிகம், ஆர்இசிபி வணிக ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திடாமல் பிடிவாதம் பிடித்தால் இந்தியாவின் சந்தை பங்களிப்பை வியட்நாம் போன்ற நாடுகள் எடுத்துக்கொள்ளும்.

நிலைமை அதை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.

சீனாவுடன் இந்திய வணிகம்

87,071 மில்லியன் டாலர்கள்

ஏற்றுமதி

16, 752 மில்லியன் டாலர்கள்

இறக்குமதி

70, 319 மில்லியன் டாலர்கள்

(தொழில்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சகம்)

இந்தியன் எக்ஸ்பிரஸ்

உதித் மிஸ்ரா


கருத்துகள்