கோவிட் -19 நோய்த்தொற்றை கம்யூனிஸ்ட் நாடுகள் வெற்றிகரமாக தோற்கடித்துள்ளனவா? - ஓர் அலசல்






chevy chase community GIF








சோசலிச நாடுகள் கோவிட் -19 தாக்குதலில் வென்றுள்ளனவா?

அவுட்லுக்

டோபி சைமன்

வியட்நாம், கியூபா, தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கோவிட் -19 பிரச்னையை வெற்றிகரமாக சமாளித்துள்ளன. இந்த நாடுகளில் முதல் இரு நாடுகள் மட்டுமே கம்யூனிச நாடுகள். இப்போது சமூக வலைத்தளங்கள் தொடங்கி அனைத்து இடங்களிலும் முதலாளித்துவம் தோற்றுவிட்டது. கம்யூனிச  தத்துவத்தை பின்பற்றி செயல்பட்ட நாடுகள் வென்றுவிட்டன என்று கூறப்படுகிறது. இது உண்மையா?

அடிப்படையில் எந்த நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்படுகின்றனவோ அந்த நாடுகள் கோவிட் -19 போன்ற பிரச்னைகளை எளிதாக சமாளித்து வர முடியும். மேற்சொன்ன அனைத்து நாடுகளும் சிறப்பான பொது மருத்துவமனை கட்டமைப்பைக்கொண்டே நோய்த்தொற்றை வென்றுள்ளன. அதிலும் கம்யூனிச தத்துவங்கள் கொண்ட நாடுகள் வென்றுள்ளன என்பது முழுக்க நாம் ஒதுக்கிவிடவும் முடியாது. மக்கள் நலனுக்கான மருத்துவமனைகளை அவர்கள் உருவாக்கி வைத்திருப்பது முக்கியமான வெற்றிக்காரணங்களுள் ஒன்று. அதேசமயம் வெற்று த த்துவங்கள் மட்டும் மக்களின் உயிரைக் காப்பாற்றிவிட முடியாது. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் கோவிட் -19 க்கு எதிராக சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். ஆனால் பெரும்பாலும் அவர்கள் இப்பிரச்னையில் தலையிடாமல் மருத்துவமனைகளை பூட்டிவிட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

சீனாவில் கம்யூனிச கட்சி ஆட்சியில் இருந்தாலும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எப்போதோ நகர்ந்துவிட்டனர். ஆனால் இயற்கை பேரிடர் போன்று வைரஸ் பரவி வர, அனைத்து மக்களுக்கும் இலவச பரிசோதனை, மருந்துகள், சிகிச்சைகளை அளித்து வூகான் நகரில் நோய்த்தொற்றை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்துள்ளனர். அதேபோல கம்யூனிச தத்துவத்தை உலகிற்கு அளித்த ரஷ்யா, நோய்த்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது. சரியான தலைமை இல்லாததுதான். இந்தியாவில் சிறப்பான நிர்வாகச் செயல்பாட்டிற்கு கேரளத்தை பலரும் கைகாட்டுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. அவர்களது தத்துவத்தை விட விரைவாக செயல்பட்டு நோய் தீர்க்கும் அவர்களது முனைப்பு மக்கள் பலியாவதை குறைத்துள்ளது நிச்சயம் பெருமைப்படத்தக்க செயல்பாடுதான்.

கியூபா

உலக நாடுகளில் எங்கு இயற்கை பேரிடர் நடந்தாலும் மருத்துவர்களை அனுப்பி வைக்கும் மனிதாபிமான கம்யூனிஸ்ட் நாடு. இங்கு 2,173 நோயாளிகள் கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 83 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுக்க 28 ஆயிரம் மருத்துவர்கள் வீட்டுக்கு வீடு வந்து நோய்த்தொற்றை சோதித்து சிகிச்சை அளிக்கின்றனர். இங்கு பொதுமருத்துவம் இலவசம் என்பதால் அரசு நோய்த்தொற்றை உடனே கட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளது. இத்தாலிக்கு தன் மருத்துவர்களை அனுப்பி வைத்து உதவிய நாடு மருந்து ஆராய்ச்சியிலும் சொல்லி அடித்திருக்கிறது. கியூப நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இன்ஃபெரான் அல்ஃபா 2பி என்ற மருந்தை சீனாவுக்கு கொடுத்து உதவியுள்ளது. இம்மருந்தை கனடாவைச் சேர்ந்த பெட்டர் லைஃப் நிறுவனம் சோதனை செய்து பயன்படுத்த உள்ளது.

தென்கொரியா பிரச்னை பெரிதாகத் தொடங்கியபோதே, தேவையான கருவிகளை தயாரித்து தினசரி 10 ஆயிரம் சோதனை மாதிரிகளை சோதிக்கத் தொடங்கி நோய்த்தொற்றை கட்டுப்படுத்திவிட்டது. வியட்நாமில் 329 நோயாளிகள் இருந்தனர். அவர்களையும் சிறப்பாக சிகிச்சையளித்து காப்பாற்றி விட்டனர். யாருமே பலியானதாக அந்நாட்டு அரசு கூறவில்லை. இங்கு ஜனநாயகம் என்பதை விட கண்காணிப்பு அரசியல் அதிகம் என சிலர் கூறுகின்றனர். ஜனநாயக நாடுகளை விட வியட்நாம் போன்ற சிறிய நாடுகள் இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

கேரளம் முன்னமே ஊரடங்கை அறிவித்து 87 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழியாக பொருட்களை வழங்கியுள்ளது. மேலும் இரண்டு லட்சம் பேரை தனிமைப்படுத்தி வைத்து நோயின் தீவிரத்தை  குறைத்துள்ளது. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1,50, 000 பேரை தங்க வைத்து உணவும் கொடுத்து பராமரித்து வந்த அக்கறையை வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது. அதுதான் கேரள மாநிலத்தின் தலைமையை உலகமெங்கும் பேச வைத்துள்ளது. இதே தலைமைத்துவத்தின் சரிவிற்கு அமெரிக்கா  சிறந்த உதாரணமாக மாறிவிட்டது. ஒரு லட்சம் பேருக்கு மேல் இறக்க, 20 லட்சம் பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.

இக்கட்டுரையை படித்தபின் உங்களுக்கு என்ன தோன்றுகிறது கருத்தியல் வென்றதா, தனிநபர்களின் செயல்பாடு வென்றதா?

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்