விஷ்ணுகுப்தனின் வன்மமும், நந்த வம்சத்தின் வீழ்ச்சியும்! - அத்திமலைத்தேவன் -1 நரசிம்மா








Fact, Faith and Fiction - The Hindu







அத்திமலைத்தேவன்

முதல் பாகம்

காலச்சக்கரம் நரசிம்மா

வானதி பதிப்பகம்

ப.550

காஞ்சிபுரத்திலுள்ள அத்தியூரில் நாவல் தொடங்குகிறது. அந்த ஊரை அஸ்வத்தாமாவின் வழியில் வந்த புலிவேமு என்ற மன்னன் கைப்பற்றுகிறார். அத்தியூரைக் கைப்பற்றுவதற்கு அவனுக்கு உள்ள ஒரே காரணம், அங்குள்ள அத்திமலைத்தேவன் கோவில் ரகசியம்தான். அதனை அங்கு குருகுலம் நடத்தும் காஞ்சன குப்தர், சினேஷ்வரி தேவி தம்பதியினர் ரகசியமாக வைத்திருக்கின்றனர். அவர்களை புதிய மன்னர் புலிவேமு சந்திக்க ஏற்பாடாகிறது. அதன் பொருள், மன்னர் புலிவேமு, அவரின் உறவினரும் அத்தியூரின் நிர்வாகியுமான பரப்பசாமி ஆகியோருக்கு அத்திமலைத்தேவன் ரகசியங்கள் சொல்லவேண்டும் என்பதுதான். இந்த நிர்பந்தத்திலிருந்து பெற்றோரைக் காக்க அவர்களது மகன் விஷ்ணுகுப்தன் முயல்கிறான். அதில் அவன் வென்றாலும், அதன் பின் விளைவாக அவனது பெற்றோர் உறங்கும்போது தீ வைத்து எரிக்கப்படுகின்றனர். இதனால் அடங்காத வன்மத்தில் கொதிக்கும் விஷ்ணுகுப்தன், பெற்றோர் பூஜித்த திருமால் சிலையை எடுத்துக்கொண்டு செல்லும்போது, அவனுக்கு தேவ உடும்பரம் கிடைக்கிறது. அதை வைத்து அவன் பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்குகிறான். அதோடு அத்திமலைத்தேவனின் ரகசியங்களை தெரிந்துகொண்டு உலகை வெல்ல முயலும் நந்த வம்சத்தினரைக் கருவறுக்கிறான். எப்படி இந்த செயல்கள் நடந்தன? நந்தர்களுக்குப் பிறகு அங்கு யார் ஆட்சிக்கு வந்தனர்? அத்திமலைத்தேவனின் ரகசியம் என்ற என்பதுதான் நாவலின் இறுதிப்பகுதி.

நரசிம்மாவின் ஆராய்ச்சியை குறை சொல்ல முடியாது. சிறப்பாக பல்வேறு தகவல்களை ஆராய்ந்து வாசிப்பவர்களுக்கு நெருடல் இல்லாமல் எதையும் யோசிக்கவிடாமல் ஏராளமான தகவல்களை சொல்லிக்கொண்டே போகிறார். அடிப்படையில் இந்த பாகத்தில் இடம்பெறுவது விஷ்ணுகுப்தன், அதாவது சாணக்கியனின் கதை. அவனது எழுச்சியும் வீழ்ச்சியும்தான். இதில் நந்த வம்சம் முடிவுக்கு வருகிறது. மௌரிய வம்சம் எழுகிறது. அதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன. சாணக்கியர் அவரின் அர்த்த சாஸ்திரத்தில் எழுதியது போல, நிலையில்லாத மனம் கொண்ட பெண்களின் மனதில் ஏற்படும் வன்மம் எப்படி பல தலைமுறைகளை பாதிக்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர்.

தன்னைக்காத்துக்கொள்வதே ஆணுக்கு முக்கியம் என்று அர்த்தசாஸ்திரம் போதிக்கிறது. அப்படியிருக்க, பௌத்த மதத்தை பெரும் எதிரியாக எதற்கு காட்டவேண்டும் என்று புரியவில்லை. அசோகரும் முழுக்க எதிர்மறையான பாத்திரமாகவே காணப்படுகிறார். நாவல் முழுக்க அரச கதாபாத்திரங்களின் எண்ணன் வண்ணம் என்றே உள்ளது. மக்களின் நிலைபற்றிய தகவல்கள் கூறப்படவில்லை. இது நாவலின் பலவீனம்.

மற்றபடி வாசிப்புக்கு பங்கமில்லாத நாவல். வாசிப்பு சுவாரசியத்திற்கு இடர்ப்பாடே இன்றி வேகமாக வாசிக்கலாம்.

கோமாளிமேடை டீம்

 


கருத்துகள்