கொரோனாவுக்கு யார் காரணம் என கண்டுபிடித்து வீட்டீர்களா? - இதோ சில ஆப்ஷன்கள்






marc maron liar GIF by IFC




பொய்யும் புரட்டும்

பொதுவாகவே நமக்கு ஏதாவது பிரச்னை வந்தால் அதற்கு காரணம் நாமாக இருந்தாலும், அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். என்னுடைய தோல்விக்கு என்னைப் பார்த்து பொறாமைப்பட்ட பக்கத்து வீட்டு சந்தோஷ்தான் காரணம், படிக்கவிடாம மனசைக் கலைச்ச புஷ்பாக்காதான் காரணம் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போவோம். இதே மனநிலை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே இருக்கிறது. அந்த காரணங்களைப் பார்ப்போம்.

5 ஜி

இங்கிலாந்திலுள்ள 5 ஜி தொலைத்தொடர்பு கோபுரங்கள் வெறித்தனமாக தாக்கப்பட்டன. காரணம், மின்காந்த அலை மூலம் கோவிட் -19 நோய்த்தொற்று பரவுகிறது என இங்கிலாந்தைச் சேர்ந்த மகான் யாரோ ஈஎஸ்பி பவர் மூலம் கிளப்பிவிட்டதுதான். பின்னர் மின்காந்த அலைகள் மூலம் வைரஸ் பரவாது என ஆராய்ச்சியாளர்கள் உதவிக்க அழைக்க வேண்டியிருந்தது.

பில்கேட்ஸ்

நம்பர் ஒன் தமிழ் வார இதழ்களில் பில்கேட்ஸ்தான் காரணமா என்று கட்டுரையையே தீட்டிவிட்டார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் அனைவரின் வீடுகளிலும் கணினி என்ற நோக்கத்தை 90 சதவீதம் நிறைவு செய்துவிட்ட கேட்ஸ் இப்போது சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் சில மருந்துகம்பெனிகளில் பங்குகளை வாங்கியிருக்கிறார் என்பதை வைத்து நம்பினால் நம்புங்கள் என ஏராளமான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.

சீனா

சீனாவில் உள்ள ஆய்வகம் ஒன்று வௌவால்களிலுள்ள வைரஸ்களை ஆராய்ந்து வருவதாக கூறப்பட்டது. அது போதாதா, உடனே கப்பென பிடித்த பிற வெளிநாடுகள் சீனாதான் வைரஸ் பரவியதற்கு காரணம், அதற்கு இழப்பீடு கூட தரலாம் என பேச தொடங்கிவிட்டன. சீனா இதற்கு சிம்பிளாக நாங்கள் காரணம் இல்லை என்று சொல்லி பஞ்சாயத்தை கலைத்துவிட்டது.

உயிரியல் ஆயுதம்

உலகில் அமெரிக்கர்களைவிட யாரும் எதற்கும் பயப்பட முடியாது. வைரஸ் முதல் வேற்றுகிரகவாசிகள் வரை சிலுவையை கையில் பிடித்துக்கொண்டே பயப்படுவார்கள். அங்கு பியூ ஆய்வு நிறுவனம் செய்த ஆராய்ச்சிப்படி இருபது சதவீததிற்கு மேல் உயிரியல் ஆயுதமாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என நம்புகிறார்களாம். ஆறு சதவீதப்பேர் மட்டுமே தற்செயலாக வைரஸ் பிறரை தாக்கியிருக்கலாம் என கூறியிருக்கிறார்கள்.

மரபணுமாற்ற பயங்கரம்

இத்தாலி நாட்டில் வெளிவரும் மானிஃபெஸ்டோ பத்திரிகையில் மரபணு மாற்ற பயிர்கள் மூலம் உருவான வைரஸ் இது கதை கட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இதை முன்வைத்து வைரஸ் இப்படித்தான் பரவியது என காதில் மீட்டர் கணக்காக பூவை செய்தியைப் படிக்கும்போதே சுற்றிவிடுகிறார்கள். நோய்த்தொற்றுக்கு எதிரான செயல்பாட்டில் அவர்கள் பழி போட்ட அதே தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்த போகிறார்கள்.

அது நோயே கிடையாது

இப்படியும் சிலர் சொல்லித் திரிகிறார்கள். இந்திய பிரதமர் மோடி பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்று சொல்லி விளையாண்ட விளையாட்டில் பொருளாதாரம் கோமாவுக்கு போய்விட்டது. அந்த நேரத்தில் கோவிட்-19 மிகச்சரியாக வாசலில் நுழைந்து நிற்க, அதனால்தான் இந்த நிலைமை என்று சொல்லிவிட்டார் அல்லவா? நிறைய பிரச்னைகளை திசைதிருப்ப வைரஸ் என்கிறார்கள் அப்படியெல்லாம் கிடையாது என்கிறது வினோதமான சிந்தனைக்குழுக்கள் சிலர். அப்புறம் இறக்கும் மக்கள் எல்லாம் யார்? என்றால் மக்கள் தொகையை குறைப்பதற்கான அரசின் முயற்சி அது என புதுமையான காரணங்களை சொல்கிறார்கள்.

மருந்து கம்பெனிகளின் விளையாட்டு

இதனை தடுப்பூசிகளை வெறுக்கும் அமைப்புகள் தீவிரமாக பரப்ப, அமெரிக்காவில் உள்ள வலதுசாரிகளே இதனை நம்பி போராடி வருகிறார்கள், நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் பொதுமுடக்கத்தை விலக்குங்கள் என சாவதற்கு அதி அவசரப்பட்டு வருகிறார்கள். மருந்து கம்பெனிகள் இதனை ஏற்படுத்தினால், அவர்களே ஏன் அதற்கு மருந்து கண்டுபிடிக்க இவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்றால் அதற்கு இவர்களிம் எந்த பதிலும் இல்லை.

எல்லாமே வேற்றுகிரகவாசிகளின் லீலை

பிரிட்டிஷ் – இலங்கைக்காரரான சந்திர விக்கிரசிங்கே என்பவர் முதன்முதலில் இந்த கருத்தை பற்றவைத்தார். அதாவது சீனாவில் வடகிழக்கு பகுதியில் வேற்றுகிரக பொருள் ஒன்று விழுந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 14 அன்று இச்சம்பவம் நடந்தது என்று பற்றவைக்க இணையம் முழுக்க இதற்காகத்தானே காத்திருந்தோம் ப்ரோ என கப்பென பிடித்து மேலும் நச்சென்ற நாலு பிட்டுகளை நங்கூரம் போல போட்டனர்.  1979ஆம் ஆண்டு டிசீஸ் பிரம் ஸ்பேஸ் என்ற நூலை எழுதிய பிரெய்ட் ஹோய்ல் என்பவர் எழுதியுள்ளார் என்று விக்கிரசிங்கே திரட்ட விவகாரம் தீயாய் பரவிவருகிறது.

 

 


கருத்துகள்