நோய்த்தொற்றை முன்னதாகவே தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது! - தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்





Kerala under severe economic crisis: Finance Minister Thomas Isaac ...
இந்தியன் எக்ஸ்பிரஸ்




மொழிபெயர்ப்பு நேர்காணல்

தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்

பெருந்தொற்று காலத்தில் என்னென்ன விஷயங்களை கேரளம் அடையாளம் கொண்டதாக கருதுகிறீர்கள்?

கேரளத்தின் அரசு பொதுமருத்துவமனைகளின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இதனை முன்னர் இருந்த அரசுகள் உருவாக்கின. இடதுசாரி அரசு, இதிலுள்ள வசதிகளை மேம்படுத்தியுள்ளது. கேரள அடிப்படை வசதிகள் முதலீட்டு வாரியம், இந்த மருத்துவமனைகளை மேம்படுத்த நான்காயிரம் கோடி ரூபாயை செலவழித்துள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் நுண்ணுயிரிகள் நோய்த்தொற்று தொடர்பான பிரிவை தொடங்கியுள்ளோம். மாவட்ட மருத்துவமனைகளில் இதயநோய் பிரிவுகளை தொடங்கியுள்ளோம். தாலுக்காக்களில் 20 நீரிழிவு மருத்துவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளதோடு, ஆரம்ப சுகாதார மையங்களையும் உருவாக்கத் தொடங்கியுள்ளோம்.

தொடக்க சுகாதார மையங்களில் 68 க்கு மத்திய அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். இதுதவிர வலிநிவாரண சிகிச்சை மையங்களையும் கொண்டுள்ளோம். எபோலா, நிபா வைரஸ் பாதிப்பால் நாங்கள் தொற்றுநோய் பிரச்னைகளை கையாள்வதில் கவனமாக இருக்கிறோம். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் சென்ற இடம், நண்பர்கள், உறவினர்கள் என கண்காணிக்க புதுமையான வழியைக் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தியுள்ளோம். கேரள மக்களுக்கு வெற்றிலை போட்டு சாலையில் துப்பும் பழக்கம் உண்டு. இதனைக் குறைக்க வலியுறுத்தியதில் இன்று மக்கள் யாரும் அச்செயலை செய்வதில்லை. நாங்கள் இம்முறையில்தான் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

அனைத்து மாநிலங்களுக்கும் முன்னதாகவே நீங்கள் மக்களுக்கான நிதி ஊக்கத்தொகையை அறிவித்துவிட்டீர்கள். மாநில அரசு ஏற்கெனவே நிதிச்சுமையில் இருக்கும்போது எப்படி இப்படி அறிவிக்க முடிந்தது?

கேரளத்தில் இருந்த பல்வேறு சூழ்நிலை அழுத்தங்கள் அரசை அப்படி அறிவிக்க வைத்தன. பொதுமுடக்கத்தை அறிவித்தால், தினசரி கூலித்தொழிலாளர்கள், இடம்பெயர் தொழிலாளர்கள் உணவுக்கு, செலவுகளுக்கு என்ன செய்வார்கள் என யோசித்தே நிதி ஊக்கத்தொகையை அறிவித்தோம். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு கூட மாநில அரசு செலவிடாமல் கைகட்டிக்கொண்ட இருக்க முடியாது. இந்த நிலைமையை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் அறிவித்த 20 ஆயிரம் கோடி ரூபாயை நிதி நிலை அறிக்கைக்கு வெளியில் பெறுவது கடினமான காரியம். மக்கள் சிரமத்தில் இருக்கும்போது, தேர்தல் வருகிறதா இல்லையா என்று பார்த்து உதவ முடியாது. மேலும் நோய்த்தொற்றை தடுப்பதே இப்போது முக்கியம்.

55 லட்சம் வயதான, உடல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 8,500 ரூபாயை வழங்கினோம். பணக்காரரோ, ஏழையோ அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்க்கான உணவுப்பொருட்களை நாங்கள் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கினோம். 1300 சமூக சமையலறைகளை நிறுவினோம். இதில் இடம்பெயர் தொழிலாளர்கள், வீடற்றவர்கள் உணவு பெற்றுக்கொள்ளலாம். இல்லையா? போனில் அழைத்தால் உங்கள் வீட்டுக்கே உணவை கொண்டுவந்து தருவார்கள். முடிந்தவரை மக்கள் யாரும் தெருக்களில் உணவின்றி படுத்திருக்க கூடாது என்று முயன்றிருக்கிறோம். இதுதான் எங்களது முக்கியச் செயல்பாடு.  

வளைகுடா நாடுகளிலிருந்து நிறைய மலையாளிகள் கேரளத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள். எப்படி அவர்களை சமாளிக்கப் போகிறீர்கள்?

நாங்கள் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து வரும் மலையாளிகளின் எண்ணிக்கையை நாங்கள் மூன்று லட்சம் வரை எதிர்பார்க்கிறோம். இது எங்களுக்கு பெரிய சவால்தான்.

மலையாளிகளை தங்க வைக்க ஹோட்டல்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகிய நிறுவனங்களிடம் பேசியுள்ளோம். இதனால் அவர்களை எளிதாக தங்கவைத்து கண்காணிக்க முடியும். டிஜிட்டல் முறையில் அவர்களை கண்காணிப்பதால், நோய்த்தொற்று பிறருக்கு ஏற்படாமல் தடுக்க முடியும். அவர்கள் எங்கு இருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று உறுதி செய்து நோய்தொற்று பரவலை துண்டிக்க முடியும்.

நாங்கள் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பே தயாராகிவிட்டோம். இப்போது இரண்டாவது அலையாக நோய்த்தொற்று எழும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு எங்கள் மாநிலம் தயாராகி வருகிறது. இந்த விஷயத்தில் பிற மாநிலங்கள் மட்டுமல்ல மத்திய அரசு வெகு தாமதமாகவே விழிப்புணர்வு பெற்றது. ஆனால் கேரளம் ஓர் மாநிலமாகவே இருந்தாலும் வேகமாக நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருளாதாரம் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது?

தனிநபர் வருமானம் மிக குறைவாக இருந்த காலகட்டமாக 1980 ஐ அடைந்து போல இருக்கிறது. இந்த நிலையைக் கடந்து தனிநபர் வருமானம் அறுபது சதவீதமாக தேசிய சராசரியை விட கேரள அரசு உயர்ந்திருந்தது. இப்போது இந்த நிலை மாறியுள்ளது. அதாவது தலைகீழாகியுள்ளது.

இடம்பெயர் தொழிலாளர்களை அவர்களது மாநிலத்திற்கு அனுப்பி வைக்க என்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்?

மேற்கு வங்கம் போன்ற இந்தியாவின் மறு கோடியில் உள்ள மாநிலத்திற்கு தொழிலாளர்களை உணவின்றி நடந்துசெல்ல விட்டுவிடமுடியுமா?

அவர்களுக்கு பணியில்லை அதன் காரணமாக ஊதியம் கிடைக்கவில்லை என்பது உண்மை. மேலும் இவர்களுக்கு நாங்கள் உணவும் தங்குமிடமும் அளித்துள்ளோம். இவர்கள் எங்கள் மாநிலத்திற்கு மிகவும் தேவையானவர்கள். மலையாளிகள், வெளிநாடுகளுக்கு சென்று பணி செய்தவர்கள் கூட இப்போது மாநிலத்திற்கு திரும்பி வருகிறார்கள். நாங்கள் இடம்பெயர் தொழிலாளர்களை ஒட்டுண்ணியாக நினைக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு உதவிகரமாக இருக்கிறார்கள்.

அவர்கள் திரும்பி வர வாய்ப்புள்ளதா? பிற மாநிலங்களிலுள்ள மலையாளிகள் கூட கேரளத்திற்கு திரும்பி வருகிறார்களே?

இடம்பெயர் தொழிலாளர்கள் எங்கள் மாநிலத்திற்கு திரும்பி வர அதிக வாய்ப்புள்ளது. காரணம், இங்கு வழங்கப்படும் ஊதியம் வேறு எங்கும் வழங்கப்படுவதில்லை. பிற மாநிலங்களிலிருந்து வரும் மலையாளிகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆண்களுக்கு அவர்கள் நினைத்த ஊதியம் கிடைப்பது கடினமாகவே இருக்கும். இடம்பெயர் தொழிலாளர்கள் வரவில்லையென்றால் கட்டட வேலைகளில் சுணக்கம் ஏற்படும்.

மாநில அரசு பல்வேறு ஊக்கத்தொகையை அறிவித்து செயல்படுகிறீர்கள். தொடர்ந்து அப்படி செயல்பட மத்திய அரசு உதவுமா?

எங்களது மாநிலம் மட்டுமல்ல. காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பொதுமுடக்கம் காரணமாக செலவு செய்ய கையில் பணம் கிடையாது. இந்நிலையில் மத்திய அரசு வெறுமனே பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. பணப்பற்றாக்குறை வேறு ஏற்பட்டுள்ளத்து மத்திய அரசு பெருந்தொற்றுக்கான நிதி ஊக்கத்தொகையையும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகையையும் வழங்கவேண்டும். இதை வைத்துத்தான் பொது மருத்துவ சேவைகளை வலுப்படுத்த வேண்டும். மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். இது மத்திய அரசை வற்பறுத்தியாவது செய்ய வைக்கவேண்டும்.

மத்திய அரசு வேண்டுமென்றே தேவையான செயல்பாடுகளை செய்யவில்லை என்கிறீர்களா.?

அவர்களின் கருத்தியல் அப்படிப்பட்டது. அவர்களின் நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. அதேசமயம் மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்புகளையும் உயர்த்தவில்லை. இதற்கு காரணம், என்ன நடக்கிறது உலகில் என்பதை அவர்கள் கவனிக்கவுமில்லை. சரியான முறையில் சிந்தித்தால்தானே தெளிவாக திட்டமிடமுடியும்? இவை மத்திய அரசில் நடக்கவேயில்லை.

மாநில அரசுகள் தங்கள் செலவுகளை குறைக்க மத்திய அரசு கூறியிருக்கிறதே?

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 50 ஆயிரம் கோடியாக உள்ளது. இது இன்னும் வரும் மாதங்களில் அதிகரிக்கும். இவற்றை மத்திய அரசு நிதிப்பற்றாக்குறை என்று காரணம் சொல்லி வழங்கவில்லை என்றால் மாநில அரசுகள் என்ன செய்வது? மாநில அரசு செய்யும் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தவேண்டியிருக்கும். இது தவறான ஒன்று. மத்திய அரசு செலவுகளை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் மாநில அரசுகள் செலவுகளை குறைக்கவேண்டும் என்று உத்தரவிடுவது சரியல்ல. ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும் தன்மைக்கு இது எதிரானது.

ஃபிரன்ட்லைன்

ஆர்.கிருஷ்ணகுமார்



 

 

 

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்