அடிப்படை உரிமைகளை கோரும் போராளிகளை கண்காணிக்கும் சீன அரசு!

 











கண்காணிப்பு அரசியலில் வேகமெடுக்கும் சீனா 


சிசிடிவி கேமராக்களை செயற்கை நுண்ணறிவு வசதியுடன் பொருத்தி அதை இயக்கி குற்றவாளிகளை பிடிப்பது சீனாவின் சிறப்பம்சம். இதில் நாம் அறியாத ஒன்று. இதே வசதியைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை முழுமையாக முடக்க முடியும் என்பதுதான். சீனாவில் மட்டுமல்ல. அதன் ஆட்சி ஹாங்காங்கிலும் விரிவடைந்துள்ளது. அங்குள்ள காவல்துறைஅதிகாரிகளும் இப்போது சீனாவின் காவல்துறை போலவே அரசியல் உரிமை போராளிகளை கைதுசெய்து, கண்காணித்து விசாரித்து மிரட்டி வருகின்றனர். இங்கு நாம் பார்க்கப்போவது அப்படியான போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதுதான். 


ஹாங்காங்கைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆக்னஸ் சோ. இவர் கனடாவில் படிக்க விண்ணப்பித்தார். பல்கலைக்கழகத்தில் கூட அனுமதி கடிதம் வழங்கிவிட்டனர். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை ஹாங்காங் அரசு தர மறுத்துவிட்டது. அதை ஆக்னஸ் பெற சில நிபந்தனைகளை விதித்தது. ஹாங்காங்கில் அவர் செய்த போராட்டங்கள், பங்கேற்புகள் அனைத்தும் வருத்தம் தெரிவிப்பது, கம்யூனிஸ்ட் கொள்கை சுற்றுலாவை ஏற்கவேண்டும் என்பவைதான அவை. 


ஆக்னஸூக்கு அப்படியான கருத்தியல் சுற்றுலா என்பது பற்றி எதுவும் புரியவில்லை. ஆனால் அவருக்கு தெரிந்த ஒன்று, சீனாவுக்கு சென்றால் திரும்பி வர வாய்ப்பில்லை. அவரை கைது செய்து சிறையில் அடைத்தால் கூட யாருக்கும் தெரியாது. அவரது போராட்டங்களுக்காக ஏழு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவமும் அவருக்கிருந்தது. 


கருத்தியல் சுற்றுலா என்பது அரசியல் போராளிகளை மெல்ல மூளைச்சலவை செய்யும் நோக்கத்தைக்கொண்டது. சீனாவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி, தனது கருத்துகளுக்கு எதிரானவர்களை தங்களுக்கு சாதகமாக மாற்ற பல்வேறு ஒடுக்குமுறை செயல்களை செய்கிறது. அதில் ஒன்றுதான் புரபாகண்டா டூர். இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம், அதன் செயல்பாடு, சாதனைகளை அதன் எதிர்ப்பாளர்களுக்கு விளக்குகிறார்கள். ஏறத்தாழ மூளைச்சலவை செய்யும் ஏற்பாடு. 


ஆக்னஸ் கனடாவின் டொரண்டோவுக்கு வந்தபிறகும் கூட அவரை ஹாங்காங் காவல்துறை இருமுறை அழைத்து விசாரித்திருக்கிறது. நேரடியான ஒடுக்குமுறை  ஒருவகை என்றால் ஒருவரை மன ரீதியாக பலவீனப்படுத்தி வழிக்கு கொண்டு வருவது இன்னொரு வகை. இவ்விரண்டு வகையில் சீனா, ஹாங்காங் அரசுகள் செயல்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அரசியல் போராளிகளை சிறையில் அடைப்பது, மூளைச்சலவை செய்வது, அவர்களை வெளிநாடு செல்லவிடாமல் பாஸ்போர்டை முடக்குவது, காவல்துறை மூலம் தொடர்ந்து கண்காணித்து மன உளைச்சல்களை ஏற்படுத்துவது ஆகியவற்றை செய்கிறார்கள். உலக நாடுகளில் உள்ள சீன கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் மீது கூட தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கு தொடுத்து அவர்களை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது சீனா.


ஆக்னஸ் காவல்துறை கண்காணிப்பால் மன அழுத்தம், பதற்றக்குறைபாட்டுக்கு உள்ளாகி பின்னரே மீண்டிருக்கிறார். இதன் வெளிப்பாடாக சமூக வலைதளத்தில் தான் இனி தாய்நாடு திரும்பபோவதில்லை என்று ஒரு பதிவை இட்டார். இது சீனா, ஹாங்காங்கில் பெரும் பிரச்னையாக உருவானது. ஹாங்காங் காவல்துறை, வெளியுறவு துறையினர் ஆகியோர், இப்படி பேசுவது தவறு என தங்கள் கருத்தை ஆவேசமாக முன்வைத்திருக்கிறார்கள். 


குழந்தைக்கு பாதுகாப்பு பெற்றோர்தான். அத்தகைய பெற்றோரே பாலியல் சீண்டலில், வன்முறையில் இறங்கினால் ஒருவர் என்ன செய்ய முடியும்? தாய்நாட்டில் ஆக்னஸுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. வேறுவழியின்றி அவர், கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கேயே படித்து வாழ நினைக்கிறார். இதன் அர்த்தம். அந்த நாடு அவருக்கான கல்வி மட்டுமல்ல பாதுகாப்பையும் அளித்துள்ளது என்பதுதான். இதை முட்டாள் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவில்லை. உண்மையில் முட்டாள்தனத்திற்கு எந்த மருந்தும் இல்லை. 



ஹெலன் டேவிட்சன்

கார்டியன் நாளிதழ்  


படம் - கார்ட்டூன் ஸ்டாக்




கருத்துகள்