ரிடர்ன் டு மவுண்ட்குவா செக்ட் - முற்பிறப்பில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு தீயசக்தியை வேட்டையாட வரும் முன்கோபக்கார வாள் வீரன்!

 













ரிடர்ன் டு மவுண்ட்குவா செக்ட்


காமிக்ஸ்


ரீட்மாங்கா.காம்


மவுண்ட்குவா செக்ட்டைச் சேர்ந்த பிளம் பிளாசம் வாள் துறவியின் மறுபிறப்பு பிச்சைக்காரனாக நடக்கிறது. சுயிங் மியுங் என்ற பெயரில் பிச்சைகாரர்கள் இனத்தில் பிறப்பவன் அவனது முற்பிறப்பு நினைவுகளால் வழிநடத்தப்படுகிறான். அதன் வழியாக சென்று முந்தைய தவறுகளை சரி செய்கிறான். அவனது இனக்குழுவை மேம்படுத்த முயல்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை. 


பிளாசம் பிளம் பிச்சைக்காரனாக தனது வாழ்க்கையை தொடங்குகிறான். ஆனால் அதற்கு முன்னர் அவனது வாழ்க்கை மவுண்ட் குவா செக்டில் சிறந்த வாள் வீரன்தான். ஆனால் டீமன் செக்ட் தலைவனால் மொத்த இனக்குழுவுமே வீழ்த்தப்படுகிறது. ஒற்றைக் கை இழந்த நிலையில் பிளம் பிளாசம் எழுந்து பிணங்களின் மேல் கத்திக்குத்து பட்டு குற்றுயிராக உள்ள டீமன் செக்ட் தலைவன் சுன்மாவின் தலையை வெட்டி எறிகிறான். பிறகு அப்படியே நினைவிழந்து இறந்து விழுகிறான். தான் சிறந்த வாள் வீரனாக இல்லாத காரணத்தால் டீமன் செக்டால் வீழ்த்தப்பட்ட குற்றவுணர்ச்சி இறக்கும் முன்னர் அவனை சித்திரவதை செய்கிறது. இதன்பிறகுதான் அவனது ஆன்மா, பிச்சைக்கார சிறுவனின் உடலுக்கு செல்கிறது. 


உடல் பிச்சைக்காரனாக இருந்தாலும் பிளம் பிளாசமின் நினைவுகள், ஆன்மா அப்படியே இருக்கிறது. அந்த வாழ்க்கையில் முதல் காட்சியே அவன் பிச்சையெடுக்காமல் தூங்குகிறான் என ஒருவன் அவனை கம்பால் அடித்து துவைக்கிறான். தடுக்க நினைக்கும்போதுதான், தான் சிறுவன் உடலில் இருக்கிறோம் என பிளம்மிற்கு தெரிகிறது. பிச்சைக்கார நண்பனை விசாரிக்கும்போதுதான் அவனது முற்பிறவியில் பிறந்த மவுண்ட் குவா தனது செல்வாக்கு, அந்தஸ்தை இழந்து தடுமாறுவதை அறிகிறான். பிளம் பிளாசம் காலம் முடிந்து நூறு ஆண்டுகள் ஆனதை புரிந்து மெல்ல அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறான். பிச்சைக்கார இனக்குழுவில் இருந்து தப்பி காட்டிற்குள் ஓடுகிறான். அடிப்படையான ஈக்குவலிபிரியம் என்ற அடிப்படை பயிற்சியை செய்து  உடலை, ஆன்ம சக்தியை தூயதாக்குகிறான். ஆனால் உணவில்லாததால் காட்டிலிருந்து மவுண்ட் குவாவிற்கு செல்லும் வழியில் மயங்கி விழுகிறான். பிறகு பிச்சையெடுத்து கிடைக்கும் பணத்தில் பழங்களை வாங்கி சாப்பிடுகிறான். அதையும் திருட மூன்று பிச்சைக்காரர்கள் முயல்கிறார்கள். அவர்களை அடித்து துவைப்பதுதான் முதல் சண்டை செய்யும் சம்பவம். அதற்கு பிறகு அத்தகைய சம்பவங்கள் முடிவே இல்லாததாக மாறுகின்றன. 


மவுண்ட் குவா செக்டிற்கு சென்று பார்த்தால், அந்த இனக்குழு ஏழ்மை நிலையில் இருக்கிறது. மாணவர்கள் பயிற்சி பெறும் இடம் கூட கற்கள் இல்லாமல் மண் தரையாக உள்ளது. முன்னோர்களை வழிபடும் இடத்தில் உள்ள முக்கியமான அலங்கார வேலைப்பாடுகளை கூட பெயர்த்து விற்றுவிட்ட நிலை. சுங் மியுங்கிற்கு நாம் முற்பிறப்பில் செய்த போர் காரணமாகவே மவுண்ட் குவா இந்த நிலையில்  இருக்கிறது என வருந்துகிறான். வாள் பயிற்சி வீரர்களுக்கு காய்கறி உணவு போடும் நிலையில் அங்கு நிர்வாகம் நடக்கிறது. மவுண்ட் குவா இனக்குழு தலைவருக்கும் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. சுங் மியுங் இனக்குழுவை மேம்படுத்த, திறமைதான் முதல் வழி என நினைக்கிறான். அவன் தங்கும் விடுதியில் உள்ள மூத்த மாணவன், புதிய மாணவன் என சுங் மியுங்கை அடிக்க முயல்கிறான். ஒரே அடிதான் ஜோ கூரையில் தலை மாட்டிக்கொண்டு அலற அனைத்து மாணவர்களும் உடனே சுங்கிற்கு பணிகிறார்கள். 


மூத்த மாணவர்கள் யார் நீ, என்ன பயிற்சி என்றெல்லாம் லொள்ளு பேச, அவர்களிடம் வாங்க அறையில் உட்கார்ந்து பேசலாம் என்று கூப்பிட்டு அத்தனை பேரையும் வெற்று கைகளாலேயே அடித்து நொறுக்கி வெளியே அனுப்புகிறான். இதனால் அனைவருமே விரைவில் அடிபொறுக்க முடியாமல் அதிகாலை ஐந்து மணிக்கு உடற்பயிற்சி செய்ய தொடங்குகிறார்கள். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்த ஆசிரியர் சற்று ஈகோ பேர்வழி. அவர் என்ன நமக்கு தெரியாமல் திடீரென பயிற்சி என சுங்கிடம் கூற, தன்னார்வமாக மாணவர்கள் அனைவரும் செய்கிறோம் என கூறுகிறார்கள்.  சுங் பயிற்சியில் யாரையும் விட்டு வைப்பதில்லை. ஒழுங்காக பயிற்சி செய்யவில்லையெனில் அடித்து நொறுக்குகிறான். அனைத்து மாணவர்களும் அதனாலேயே பீதியடைந்து பயிற்சியை தினசரி செய்கிறார்கள். தற்காப்புக்கலை ஆசிரியரிடம் ஒருமாதம் கால அவகாசம் கொடுங்கள். பயிற்சியின் பலன்களை  பார்க்கலாம் என்று கூறுகிறான். அவருக்கு தன்னிடம் கேட்டுத்தான் பயிற்சி செய்கிறார்கள் என ஈகோ திருப்தியடைந்துவிடுகிறது. 


இந்த நேரத்தில்தான் மவுண்ட் குவாவின் கடைகள், வணிக நிறுவனங்களை  அவர்களின் எதிரி இனக்குழுவான செர்குவான் சில ஆட்களை வைத்து பிடித்து வைத்து மிரட்டுகிறது. மவுண்ட் குவா ஏழு நாட்களில் வாங்கிய கடனை கட்ட வேண்டும். இல்லையெனில்  மவுண்ட் இனக்குழுவின் கோவில் உட்பட ஒட்டுமொத்த இடத்தையும் அவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும் என கடைக்கார வணிகர்கள் மிரட்டுகிறார்கள். சுங் மியுங் இதைபார்த்து, அதன் பின்னாலுள்ள உண்மையை கண்டுபிடிக்கிறான். உண்மையில் மவுண்ட் குவாவின் அடிவாரத்திலுள்ள வணிக நிறுவனங்கள் அனைத்துமே தற்காப்புக்கலை பள்ளிக்கு  சொந்தமானதுதான். ஆனால் சிலர் தவறான கணக்கு எழுதி அதை தங்களுக்கு கீழ் கொண்டு வந்து மவுண்ட் குவாவை மிரட்டுகிறார்கள் என்பதை அறிகிறான். 


மவுண்ட் குவா இனக்குழுவின் ரகசிய ஆவண அறையைக் காட்டுக்குள் சென்று கண்டுபிடிக்கிறான். அங்கு இனக்குழு தலைவர் சென்று மறைவாக நின்று வருந்துவதை பார்க்கிறான். அவர் சென்றபிறகு அங்குள்ள கதவை பிளம் பிளாசம் வாள் கலையைப் பயன்படுத்தி திறக்கிறான். அங்குள்ள மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட இனக்குழுவின் தற்காப்புக் கலை நூல்களைப் பார்க்கிறான். கூடவே, அவர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களின் முந்தைய கணக்கு வழக்கு புத்தகங்கள் உள்ளன. கூடவே மறைவாக உள்ள தங்க பாளங்களையும் அடையாளம் காண்கிறான். ஏறத்தாழ லைஃப் ஃபோர்ஸ் எனும் உயிர் ஆதாரசக்தியை பயன்படுத்தியே சுங் மியுங் வாள் கலையை பயன்படுத்தியிருப்பான். இதனால் அவனது ஆயுள் குறையும் அபாயம் உருவாகினாலும், இனக்குழுவை கடனிலிருந்து மீட்டு புதிய எழுச்சிக்கு கொண்டு செல்லமுயல்கிறான். கடன்காரர்களுக்கு இனக்குழு தலைவரே நிலைமையை புரிய வைத்து வணிகத்தை கையில் எடுத்துக்கொள்கிறார். மெல்ல, இனக்குழுவின் நிர்வாகம் சரியாகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு இறைச்சி கிடைக்கிறது. அதுவரை காய்கறிகளை சாப்பிட்டு பயிற்சி செய்தவர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு இறைச்சி சாப்பிடுகிறார்கள். அதேநேரம் இனக்குழு தலைவர் பயிற்சி முறைகளை மாற்றம் செய்யலாமா என பயிற்சி ஆசிரியரிடம் கேட்கிறார். ஆனால் அடிப்படையான பயிற்சியில் மாற்றங்களை யாரும் ஏற்பதில்லை. அதையே ஆசிரியர் கூறுகிறார். அங்கு மைதானத்தில் பயிற்சி செய்யும் மாணவர்கள் ஈக்குவலிபிரியன் ட்ரூ ஸ்வார்ட் என்ற பயிற்சியை சற்று மேம்படுத்தி செய்துகொண்டிருப்பதை இனக்குழு தலைவர் பார்க்கிறார். அவருக்கு பழைய அடிப்படை பயிற்சியை சற்று மேம்படுத்தி செய்ய ஆசை. அதை மாணவர்கள் பயிற்சி செய்துகொண்டிருப்பதை பார்த்து மனதில் சந்தோஷம் கொள்கிறார்.ஆனால் பயிற்சி ஆசிரியருக்கு திகைப்பு. எப்படியென? வேறு யார் சுங் மியுங்தான். 


பயிற்சிசெய்த மாணவர்களின் உடலும் கட்டுமஸ்தாக உருவாகிறது. இதை உணரும் மாணவர்களை மகிழ்கிறார்கள். பயிற்சியைப் பொறுத்தவரை மாணவர்கள் சுங் மியுங்கின் கடுமைக்குப் பழகி அவர்களே அதை ஏற்றுக்கொண்டு செய்யத் தொடங்குகிறார்கள். உடல் கட்டுறுதியாக மாறியதால், வாள் வீச்சும் சீராகிறது. வேகம் கூடுகிறது. இந்த நேரத்தில் இனக்குழுவினர் நடத்தும் கடைகள், வணிக நிறுவனங்களில் தரமான ஆட்கள் இல்லாமல் தடுமாறுகிறது. அப்போது சுங் மியுங்கிற்கு வணிகம் தெரிந்த ஆட்களின் உதவி தேவைப்படுகிறது. யாரிடம் உதவி கேட்கலாம் எனும்போது, அருகிலுள்ள வணிக சங்கத்தின் தலைவர் படுத்த படுக்கையாக இருக்கிறார் என அவரது மகன் கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். அதை பிரித்து படிக்கும் சுங் மியுங் அவரது வீட்டிற்கு சென்று குணப்படுத்துகிறான். ஆனால் அதேநேரம் அங்குள்ள மவுண்ட் குவா இனக்குழுவின் எதிரிகளிடம் குறிப்பாக இனக்குழுவின் மூத்த தலைவரோடு சுங் மியுங் முட்டிக்கொள்கிறான். இது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தியது, வணிக அமைப்பின் தலைவர் பிழைத்தாரா என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள். 


இந்த கதையில் உள்ள நேர்மறைத் தன்மை உங்களை வாசிக்க வைக்கும். சுங் மியுங்கின் ஆளுமை யாரையும் சற்று பீதிக்குள்ளாக்க கூடியது. முற்பிறப்பில் வாழ்ந்து அனுபவம் பெற்ற ஆள் என்பதால், சுங் மியுங் சிறுவனாக இருந்தாலும் கூட தன்னை பெரிய வளர்ந்த ஆளாகவே நினைத்துக்கொள்கிறான். தனது இனக்குழுவை மீட்பதோடு, அதை மேம்படுத்தவும் உதவுகிறான். இதனால் இனக்குழுவின் மூத்த தலைவர்கள் எல்லோரும் அவனை மரியாதையாக நடத்துகிறார்கள். அதிலும் மூன்றாம் நிலை மாணவர்களுக்கு அவன்தான் தற்காப்புக்கலை குரு. மரியாதைக்கும் பணிவுக்கும் சொல்ல வேண்டுமா? அடித்து உதைத்து அனைவரையும் வழிக்கு கொண்டு வருகிறான். 


தாவோயிச துறவிகள்தான் மாணவர்கள்தான். மது அருந்துவது இறைச்சி உண்பது பற்றிய கட்டுப்பாடுகளை அவர்கள் தளர்த்துகிறார்கள். அதுவும் சுங் மியுங் வந்தபிறகுதான் இனக்குழுவிற்கு பணப்போக்குவரத்து வருகிறது. இதனால் எல்லோரையும் விட நிதியமைச்சர் அவனை கொண்டாடத் தொடங்குகிறார். முற்பிறப்பில் உணராத வாள் பயிற்சி தத்துவங்கள் சுங் மியுங் மெல்ல உணரத் தொடங்குகிறான். அந்த தத்துவங்களை அவன் தகுதியுள்ளவர்களுக்கு கூறவும் முயல்கிறான். கற்பதும், புரிந்துகொள்வதும் மாணவர்களுடைய சமத்து. இந்த வகையில் அவர்களது எதிரியான இனக்குழு மாணவனுக்கு பாடம் சொல்லித் தருகிறான். இந்த சம்பவங்கள், அழகாக வரையப்பட்டுள்ளன. குறிப்பாக இரு இனக்குழுக்களுக்கான போட்டியில் பிளம் பிளாசம் வாள் கலையைப் பற்றி சுங் பேசுவது அருமையான காட்சி. அந்த இடத்தில் உண்மையான கலையின் தத்துவம் வேறு. அதை போலியாக நகல் செய்து கொண்டாடுவது வேறு என்று கூறுவது சிறப்பு. 


முற்பிறப்பில் கோபம் கொண்டவனாக சொல் பொறுக்க முடியாதவான இருக்கும் பிளம் பிளாசம், சுங் மியுங்காக மாறியபிறகு தன்னுடைய முந்தைய இயல்பால் தனது இனக்குழு சந்தித்த அழிவு, இழைக்கப்பட்ட துரோகங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகள், சந்தித்த அவமானங்கள் என மெல்ல உணர்கிறான். அப்படி யார் யாரெல்லாம் நடந்துகொண்டார்களோ அவர்களை பழிவாங்குகிறான். அதுவும் மவுண்ட் குவாவுக்கு எதிரான தற்காப்புக் கலை போட்டி காட்சிகளும் ஆக்ரோஷமான தாக்குதல் முறைகளும் பிரமிக்க வைக்கின்றன. மற்றவர்கள் எல்லாம் தயங்கும் இடங்களில் கூட சுங் பேசும் வார்த்தைகள் அந்தளவு சூடாக பிறர் பீதியடையும்படி இருக்கின்றன. அதுவும் மவுண்ட் குவாவுக்கு எதிரான இனக்குழுவின் மூத்த தலைவர்,எகத்தாளமாக மவுண்ட் குவாவை பேசும்போதெல்லாம் சுங் பேசும் வசனங்கள் இருக்கிறதே...அப்படி ஒரு காரம், பரிகாசம்.  அந்த மூத்த தலைவர் மரியாதை என ரத்தக் கொதிப்பிற்கே உள்ளாவார். தற்காப்பு சண்டைகளில் ஒருவன் எப்படி புகழ், மரியாதையைப் பெற முடியும்? அவனது திறமை மூலம்தானே? அந்த வகையில் சுங் மியுங் திறமைசாலி. வயதில் மூத்த மாணவர்களே எதுவும் பேசாமல் அமைதியாக பயிற்சி செய்கிறார்கள். இதில் முக்கியமான சம்பவம், எதற்காக கடினமான பயிற்சியை செய்தோம், வாள் வீச்சில் அடிப்படையான பயிற்சி எந்தளவு முக்கியம் என்பதை போட்டியில் மாணவர்கள் உணர்வதுதான். முகம், கண்கள் ஆகியவற்றை மட்டும் அதிகம் காட்டும் கோணங்கள் கதையில் உண்டு. அந்த ஓவியங்களே அந்த சூழலின் சண்டையிடும் இயல்பை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. நிறைய இடங்களில் நாம் மவுண்ட் குவாவில் வாழ்வது போலவே தோன்றுகிறது. 


கோபம் வந்தால் தவறான விஷயங்களை பலரும் செய்வோம். ஆனால்  சுங், ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாக திட்டமிட்டே தெளிவாக செய்கிறேன். அவனது வெளிப்புற தோற்றம் கோபம் கொண்டதுபோல இருந்தாலும் நிஜத்தில் ஆழ்மனதில் தனது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறான். சாதாரணமாக பார்த்தால் துரோகத்தில் வீழ்ந்த வஞ்சிக்கப்பட்ட இனக்குழு ஒன்றின் கதை. அதிலேயே தாவோவின் தத்துவத்தை எளிமையாக விளக்கியிருக்கிறார்கள். தற்காப்பு கலை சார்ந்த காமிக்ஸ் கதைகளில் சிறந்த ஒன்று. வாய்ப்பிருந்தால் வாசியுங்கள். 

குறிப்பாக நாயகனின் முகபாகங்களை எந்தளவு சிரத்தை எடுத்து வரைந்தோம் என சில அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார்கள். அதுவும் பார்க்க நன்றாக இருக்கிறது. 




கோமாளிமேடை டீம் 


கருத்துகள்