தன்னை, உலகத்தை மறந்து செயலைசெய்பவன் அனுபவிக்கும் பேரின்பம்!

 







ஏ ஆர் இசையமைப்பதில் தன்னை மறப்பார். மணிரத்னம், கதைகளை படமாக்குவதில் தன்னை மறந்து வேலை செய்வார். இவர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே நமக்கு பிடித்த ஏதோ ஒரு செயலில் உலகை மறந்து நம்மை மறந்து ஈடுபட்டிருப்போம்.  அப்படியான மனநிலையை ஃப்ளோ என உளவியலில் குறிப்பிடுகிறார்கள். இதை லயம், சீரான ஓட்டம் என புரிந்துகொள்ளலாம். இதை மிகாலாய் என்ற உளவியலாளர் உருவாக்கினார். தொண்ணூறுகளில் தனது கருத்தை தொகுத்து ஃப்ளோ - தி சைக்காலஜி ஆஃப் ஆப்டிமல் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நூலை எழுதினார். 


உளவியலாளர் மிகலாய், மருத்துவர்கள், இசைக்கலைஞர்கள், பல்வேறு வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களை நேர்காணல் செய்தார். இதில் அவர்களது தொழில், பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளைக் கேட்டு அனுபவங்களை அறிந்தார். இதன்படி, ஒருவர் தொழில் அல்லது ஓய்வு நேர பொழுதுபோக்கிலோ தன்னை மறந்து ஈடுபாடு கொள்வது தெரிந்தது. அதாவது, தன்னை முழுக்க செய்யும் செயலில் கரைத்து திருப்தி காண்கிறார். பொதுவாக விளையாட்டில் வெல்வது மட்டுமல்ல பங்கேற்பதற்கும் கூட ஒருமித்த கவனம் தேவை. முழு கவனத்துடன் விளையாட்டை அனுபவித்து விளையாடுபவர்களுக்கு காலநேரமே தெரியாது. இதை உளவியலாளர் மிகாலாய் பேரின்ப நிலை என்கிறார். 


ஒருவரின் திறனுக்கு மிஞ்சிய வேலை என்றால், அதை செய்பவர் பதற்றத்திற்கு உள்ளாகிறார். எளிதாக செய்வது என்றால் அதை செய்பவர் சலிப்பு அடைகிறார். இப்படியல்லாமல், புதிய விஷயங்களை கற்கும் விதமாக சவாலான விஷயங்கள் ஒருவரை திருப்திகொள்ள வைப்பதோடு, அவர் அந்த செயலின் வழியாக மகிழ்ச்சியைப் பெறுகிறார். ஒரு செயலை செய்வதன் வழியாக கிடைக்கும் பரிசை விட, அதன் அர்த்தம், மகிழ்ச்சி என்பது முக்கியமானது. 


மிகாலாய் சிக்ஸென்ட்மிகாலாய், இத்தாலியில் ஃபியூம் நகரில் பிறந்தார். இவரது தந்தை ஹங்கரி அரசு அதிகாரி. 1948ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுகள் ஹங்கேரி நாட்டை கைப்பற்றியபோது, பெற்றோர் ரோம் நாட்டிற்கு அகதியாக சென்றனர். 


சிறுவயதில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் கார்ல் ஜங் பேசிய உரை ஒன்றைக் கேட்டார். அந்த ஊக்கம் காரணமாக உளவியலைக் கற்கத் தொடங்கினார். 1965ஆம் ஆண்டு, முனைவர் படிப்பை நிறைவு செய்தார். மாணவராக இருக்கும்போதே, எழுத்தாளர் இசபெல்லா செலன்காவை மணம் செய்தார். 1968ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகனாக மாறினார். சிகாகோ பல்கலையில் வேலை செய்து வந்தவர், அங்குதான் சீரான ஓட்டம் என்ற சிந்தனையை உருவாக்கினார். பின்னாளில் கிளார்மன்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 


முக்கிய படைப்புகள்


1975 பியாண்ட் போர்டம் அண்ட் ஆங்க்ஸைட்டி

1990 ஃப்ளோ தி சைக்காலஜி ஆஃப் ஆப்டிமல் எக்ஸ்பீரியன்ஸ் 

1994 தி எவால்விங் செல்ஃப்

1996 கிரியேட்டிவிட்டி

pixabay



கருத்துகள்