ஹாபியை தேர்ந்தெடுத்து வளர்ப்பது எப்படி?









 பொழுதுபோக்கு பழக்கங்களை வளர்த்துக்கொள்வது எப்படி?


சவால் தரும், வேடிக்கையான ஊக்கமூட்டும் பொழுதுபோக்கு பழக்கங்கள் என்னென்ன உங்களிடம் உள்ளன என்று கேட்டால் பலருக்கும் மனதில் கேள்விக்குறிதான் எழும். பலரும் டிவி பார்ப்பார்கள். ரேடியோ பார்ப்பார்கள். இன்ஸ்டாரீல்ஸ் பார்ப்பார்கள். இதில் ஹாபிக்கு எங்கே போவது?


பொழுதுபோக்கு என்பது ஒருவருக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது. தூக்கம் வரவைக்கிறது. தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது. தன்னளவில் திருப்தியை அளிக்கிறது. மற்றபடி இதில் யாரையும் கவர, திருப்திபடுத்த வேண்டியதில்லை. வேறு உள்நோக்கங்களும் இல்லை. ஒரு கேக்கை சமையல்காரர் ஆர்வமுடன் உருவாக்கி அதை அலங்காரம் செய்து பார்ப்பது போலவே பொழுதுபோக்கு செயல்கள் இருக்கும். இதில் செய்யும் செயல்முறையே முக்கியம். பொழுதுபோக்குகளை ஆக்கப்பூர்வமாக எப்படி அமைத்துக்கொள்வது என்று பார்ப்போம். 


உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி


பொழுதுபோக்கு எப்படியிருக்கவேண்டுமென யாரும் கூறமாட்டார்கள். அதை செய்யப்போகும் நீங்கள்தான் பல்வேறு கேள்விகளை கேட்டு அதை கண்டறியவேண்டும். நான் செய்யும் செயல் என்னை நெகிழ்வாக வைத்திருக்கவேண்டுமா, கவனத்தை வேறுபக்கம் திருப்ப வேண்டுமா, ஊக்கமூட்டவேண்டுமா, சமூக ரீதியான இணைப்பை ஏற்படுத்த வேண்டுமா இவைதான் அந்த கேள்விகள். 

மிகச்சிறந்த துல்லியமான பொழுதுபோக்கு என்று ஒன்று உலகிலேயே கிடையாது. அதனால் இதைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டுமா என மனம் கலங்க வேண்டாம். 


சிறியதே அழகு


இயக்குநர் ஷங்கர் போல பிரம்மாண்டமாக எதையும் தேர்ந்தெடுக்கவேண்டாம். பணத்தையும் செலவிட வேண்டாம். பொழுதுபோக்கு செயல்களில் வேடிக்கை முக்கியம். அதையும் மிகத் தீவிரமாக செய்து களிப்பை தவறவிடாதீர்கள். எதையும் பெரிதாகத்தான் செய்வேன் என அடம்பிடிப்பவர்கள் கூட செயலை சிறியதாக தொடங்குவதே நல்லது. மெல்ல அதை விரிவுபடுத்திக்கொள்ளலாம். 


திறந்த மனம் 


வாக்கிங் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது சில சமூக ஆர்வலர்கள் மரக்கன்றுகளை நடுவது அல்லது ஏரியை தூய்மை செய்வதற்கான பணிக்கான ஆட்களை திரட்டுகிறார்கள். அதற்கான நோட்டீஸ்களை உங்களுக்கும் கொடுக்கிறார்கள். அதை தூக்கி எறியாமல் அந்த பணிக்கு சென்றால், புதிய மனிதர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நீங்கள் செய்யும் பணி சார்ந்தும் உங்களை புத்துயிர்ப்புடன் வைத்துக்கொள்ளலாம். எனவே பொழுதுபோக்கு என்பது கிடைத்த நேரத்தை உங்களுக்கு ஏற்றாற்போல செலவழிப்பது என புரிந்துகொள்ளுங்கள். 


பட்டியல் ரெடியா?


மனைவி, காதலி என யார் உங்கள் அறையில் இருந்தாலும் ஓகே. அவர்களிடம்  கேட்டு செய்ய ஆசைப்படும் ஏதோ ஒரு விஷயங்களை பட்டியல் போட்டு ஃப்ரிட்ஜில் ஒட்டி அதை நிறைவேற்ற முயலாம். இந்த ஆசைகள் எல்லாமே சற்று இயக்குநர் வி சேகர் பட்ஜெட்டில் இருந்தால் அதை ஹாபியாக நினைத்து செய்யலாம். இருவருக்கு்ம அதில் மகிழ்ச்சி கிடைக்கும். 


குற்றவுணர்ச்சி வேண்டாம்


வேலைநேரம் போக ஓய்வு நேரம் கிடைத்தால் அதை செய்யும்போது சம்பந்தப்பட்டவர் நேரத்தை வீணாக்குகிறோமே என்று நினைத்து மனப்பதற்றம் கொள்வதுண்டு. அதற்கு அவசியமில்லை. ஹாபி என்பதே உங்களுக்கு பிடித்த ஏதோவொன்று செய்வதுதான். அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பதற்றம் எதற்கு? உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அடுத்தவர் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டியதில்லை. 


ரீடர்ஸ் டைஜெஸ்ட். 

 








கருத்துகள்