தன் தந்தையை துரோகத்தால் வீழ்த்தியவர்களை தேடிச்சென்று பழிவாங்கும் வடக்கு வாள்!

 











லெஜண்ட் ஆஃப் நார்த்தர்ன் பிளேடு


காமிக்ஸ் 


ரீடுமங்காபேட்.காம்



வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஜின் மோ வோன், என்பவன் நார்த் ஹெவன்லி செக்ட் என்ற சிறிய அரசின் ஒரே வாரிசு. அவரது அப்பா பேராசையற்ற ஆட்சியாளர். காலப்போக்கி்ல் அவருக்கு செல்வாக்கு பெருகியதால், அவர் மீது தேசதுரோக குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். இதனால் அவர் தனது மகனைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்.  அவர் இப்படி இறந்துபோக அவரது நான்கு நண்பர்களே முக்கிய காரணம். சென்ட்ரல் அலையன்ஸ், நைன் ஸ்கைஸ் என இரு அமைப்புகளிடம் பரிசுகள், பணம் பெற்று, ஜின்னின் அப்பாவுக்கு துரோகம் செய்கிறார்கள். நாட்டின் நூலகத்தில் உள்ள தற்காப்புக்கலை நூல்களை ஜின் படித்து வீரனாகிவிட்டால் என்னாகும் என அத்தனை நூல்களையும் எடுத்துசெல்கிறார்கள். 


ஜின்னின் அப்பா இறந்தபிறகு, நாட்டின் அரசு கலைக்கப்படுகிறது. சென்ட்ரல் அலையன்ஸ் சார்பாக கண்காணிப்பு மட்டும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது, ஜின்னை அங்கு உள்ள காவலர்கள் அடித்து சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் அவன் அதை பொருட்படுத்தாமல் வாழ நினைக்கிறான்.


 ஜின்னின் அப்பா, அவனுக்கு மட்டுமே குறிப்பிட்ட முன்னோர்களின் எழுத்து மொழியைக் கற்பித்திருக்கிறார். அதன் மூலம் ஜின் தினசரி தற்காப்புக்கலையைக் கற்று மனப்பாடம் செய்து வருகிறான். ஆனால் இதை அங்குள்ள காவலர்கள் அறிவதில்லை. பிழைப்புக்கு கொல்லனாக வாள்களை செய்து வருகிறான். இந்த நேரத்தில் அங்கு ஒரு பெண் தஞ்சம் தேடி காயமுற்று வருகிறாள். அவளை ஜின் யாருக்கும் தெரியாமல் காப்பாற்றுகிறான். உணவு கொடுக்கிறான். அவள் பெயர் ஹன் சியோல். 


இருவருக்கும் நல்ல நட்பு உருவாகிறது. ஆனால் அவளுக்கு மோசமான கடந்தகாலம் ஒன்றுண்டு. அதேநேரம் ஜின்னின் தந்தையைக் கொன்ற சென்ட்ரல் அலையன்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் அங்கு வருகிறார்கள். இவர்களின் நோக்கம். அங்கு ஒரு தற்காப்புக்கலை சங்கத்தை தொடங்குவது,இதில் முழுக்க இளைஞர்களே இருப்பார்கள். ஏறத்தாழ சென்ட்ரல் அலையன்ஸ் அமைப்பை எதிர்க்கும் நோக்கத்தில் உருவாக்க நினைக்கிறார்கள். 


ஆனால் அங்கு அமரத்துவ உடல் கொண்ட அரக்கன் ஒருவன் வருகிறான். அவனது தாக்குதலில் தற்காப்பு சங்கம் தொடங்க வந்தவர்கள் பெரும் இழப்பை சந்திக்கிறார்கள். படுகாயம் அடைகிறார்கள். அதை ஜின் நேரடியாகவே பார்க்கிறான். நேர்மையும் பலமும கொண்ட ஹம் சூ சியோன் என்பவனும்கூட அரக்கனுக்கு முன்னே நிற்கமுடியவில்லை. அரக்கன் நோக்கம் ஹன் சியோலை அழிப்பதுதான். இந்த இடத்தில்தான் ஜின் வோ முன் தன் சக்தியை வெளியே கொண்டு வருகிறான். தனது காதலி ஹன் சியோலைக் காப்பாற்றுகிறான். 


அந்த சம்பவத்தில்தான் ஹன் சியோல், ஜின்னின் முழுமையான சக்தியை அடையாளம் காண்கிறாள். ஆனால் அங்குள்ள காவலர்களில் ஒருவர் ஜின்னின் சக்தியைப் பார்க்கிறார். அவர் தற்கொலைக்கு முயலும் ஒரு சமயம், அவரை ஜின்தான் டெலிபதி மூலம் ஆறுதல் சொல்லி காப்பாற்றி வாள் கலையை மேம்படுத்துகிறான். அவர் ஜின்னை தனது அரசராக ஏற்று பணி செய்யத் தொடங்குகிறார். அரக்கனோடு நடந்த சட்டையில் அங்குள்ள பழுதுபட்ட கட்டிடங்கள் முழுமையாக இடிந்துவிடுகின்றன. எனவே, ஜின் தனது விசுவான ஊழியரான ஹ்வாங் மாமாவின் உதவியுடன் காட்டில் சென்று பயிற்சி செய்கிறான். ஹ்வாங் அவனுக்கு உணவுப்பொருட்களை நான்கு மாத இடைவெளியில் அனுப்புகிறார். 


மொத்தம் ஏழு ஆண்டுகள் பயிற்சி செய்யும் ஜின்,தனது பாரம்பரிய வாள் கலையில் தேறுகிறார். இந்த காலகட்டத்தில் ஹ்வாங் மாமா சில ஆண்டுகளில் வராமல் போக அவரைத் தேடிப் போகிறான். அங்குதான் ஒயிட் மெசினரி குழு, மாமாவின் மாணவன் மியூங்கை சந்திக்கிறான். இவர்கள் இருவரும் அயர்ன் பிரிகேடு எனும் பாதுகாப்பு குழுவி்ன் உதவியோடு உன்னாம்  எனும் நகருக்குசெல்கிறார்கள். அங்குதான் ஹ்வாங், அவர் பாதுகாத்த ஒயிட் மெர்சினரி குழுவின் மூன்றாவது தலைவர் காணாமல் போனார். 


இதற்கு பின்னாலுள்ள மர்மத்தை ஜின் மெதுவாக கண்டுபிடிக்கிறான். போகும் வழியில் வம்பு செய்பவர்களை அடித்து உதைத்து சிலரை காப்பாற்றி அதன் வழியாக நிறைய நண்பர்களை சம்பாதிக்கிறான். அவனின் சக்திக்கு எதிரிகளும் கூடுகிறார்கள். அவனை வடக்கு வாள் என்று அழைக்கிறார்கள். ஒருவரின் முழு சக்தியையும் வெளிப்படுத்த வைத்து திடீரென ஒரே வீச்சில் அவர்களை தலைவெட்டி, உடலை வெட்டி கொல்வது ஜின்னின் சிறப்பம்சம். 



டீமன் ஃபிஸ்ட்டைக் கொல்லும் சண்டையில் ஓவியங்கள், ஜின் பயன்படுத்தும் உத்திகள் அசர வைக்கின்றன. அதேபோல இவரின் மகன் கியூங், அரக்கனாக மாறிவிடுவார். பழங்குடி பெண்களை வெட்டி பலியிட்டு அந்த ரத்தம் மூலம் பலம் பெறுவார். ஒருவகையான கருப்பு மந்திரவாத முறை. ஜின்னின் கையில் உள்ள வாளில் பழிவாங்கும் வெறிகொண்டு பெண்ணின் ஆன்மா இருக்கும். அது, இறந்துபோன பழங்குடி பெண்களின் சார்பாக ஜின்னை பழிவாங்குவதற்கு தூண்டும். மேலும் அந்த வாளை வேறு யாரும் கையில் எடுக்க கூட ஆன்மா அனுமதிக்காது. ஜின் மட்டுமே ஆன்மாவைக் கட்டுப்படுத்தி இயக்கி சண்டை போடுவான். மனதின் சமநிலை தவறும்போது ஆன்மா அவனை முழுமையாக இயக்கும். அதன் பெயரே பிசாசு வாள்தான். 


கியூங்கை கொல்வதும் ரத்தவெறியாட்டமாகவே இருக்கும். வாளை வீசுவதும் தெரியாது. தலை வெட்டப்பட்டது கூட வில்லனுக்கு தெரியாது. அந்தளவு வாள் வீச்சு இருக்கும். காமிக்ஸில் காமெடிக்கு பிளாக் மூன் ரகசிய தகவல் அமைப்பின் சுயிங் இன் இருக்கிறார். எனவே, நகைச்சுவையை  எளிதாக அனுபவிக்கலாம். சிரிக்கலாம். 


த்ரீ மைண்டட் ஸ்காலர் என்ற பாத்திரம் கதையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவர், ஜின்னின் வாள்வீச்சு திறமையை அடையாளம் கண்டு அவன் மூலம் தனது பழிவாங்கும் முயற்சியை செய்கிறார். அவர், மந்திரசக்தி மூலம் தன்னை பைத்திய நிலைக்கு கொண்டு சென்ற பெண்ணை பழிவாங்க நினைக்கிறார். அதற்கென போடும் திட்டமும், செயல்பாடும் பிரமிக்க வைக்கின்றன. கூடவே  விஷங்களை தயாரிக்கும் டேங் குடும்ப பத்தாயிரம் விஷ வைத்தியர், தற்காப்பு பள்ளி நிறுவனர், வைத்தியரின் நண்பர், மவுண்டைன் மூ குடும்பம் என ஜின்னின் ஆதரவு வட்டம் பெரிதாகிறது. இவர்களின் நோக்கம், ஜின்னுக்கு ஆதரவாக இருப்பதுதான். 


நார்த்தன் ஹெவன்லி செக்டை உருவாக்கி சென்ட்ரல் அலையன்சை , நைன் ஸ்கை என இரு அமைப்புகளையும் கூடவே சைலண்ட் நைட் எனும் தீயசக்தி அமைப்புகளையும் அழிப்பதுதான். அதை ஜின் எப்படி திட்டமிட்டு செய்கிறார் என்பதே கதை. 


சண்டைக் காட்சிகளுக்கான படங்கள் பிரமாதமாக உள்ளன. உண்மையில் ஜின் யாருடைய ஆதரவையும் தேடிப்போய் பெறவில்லை. தன்னை நோக்கி வருபவர்களுக்கு உதவுவார். அதுவே அவருக்கு நண்பர்களை உருவாக்கிக் கொடுக்கிறது. தன் மனதை பின்பற்றி செல்கிறார். அதில் பழிக்குப்பழி வன்மமே உள்ளது. 


எதிரிகள் இறக்கும்போது அதுவரை மனதில் சொல்லாமல் இருந்த சில உண்மைகளை சொல்லுகிறார்கள். இதனால் பழிவாங்கும் முயற்சி நிறைவடையும்போது எது நல்லது எது கெட்டது என்ற  மன ஊசலாட்டத்தை ஜின் அடைகிறான். ஆனாலும் இறுதியில் பழிவாங்கும வெறியே வெல்கிறது. டீமன் எக்ஸ்டெர்மினேஷன் ஸ்குவாட்டை முழுமையாக அழிக்கும் காட்சியெல்லாம் வேறு லெவல். அதன் தலைவர் ஷிம், தன்னை தாக்கியதை நினைவில் கொண்டு ஜின் தண்டிப்பான். தாக்குதல் முறைகள் அந்தளவு வேகமாக துல்லியமாக இருக்கும். 


பழிவாங்கும் வெறி உங்களுக்குள் உள்ளதா, மனதில் கோபம் எரிமலையாக கொதிக்கிறதா நிச்சயம் இந்தக்கதை உங்கள் மனதுக்கு பெரிய ஆறுதலைக் கொடுக்கும். அந்தளவு சண்டைக் காட்சிகள், நாயகன் ஜின்னின் எழுச்சி காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரியூசான் என்ற திருடனிடம் குடும்பம் பற்றி ஜின் பேசியபடியே அடிப்பது, த்ரீ மைண்ட் ஸ்காலர் ஜின்னின் இளமைக்காலத்தை ரியூ சானிடம் வெளிப்படுத்துவது, அயர்ன் பிரிகேட் தலைவரின் யோசனைகள் எந்தளவு உண்மையானது என  ஜின் உணர்வது, தனது தந்தை தேசதுரோகியல்ல என்று மேடையில் ஜின் உணர்ச்சி பெருக பேசுவது, த்ரீ மைண்ட் ஸ்காலரின் மனதிலுள்ள உண்மையை ஜின் கண்டுபிடித்து அதை கூறுவது என ரசிக்கும்படியான காட்சிகள் நிறைய உள்ளன. 


ரத்தப்பாதை


கோமாளிமேடை



கருத்துகள்