காதலியின் அண்ணன் காதலை ஒன்று சேர்க்கப் போராடும் நாயகன்!

 










ஆடு மகாடுரா புஜ்ஜி

தெலுங்கு

சுதீர் பாபு, அஸ்மிதா சூட்



அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால்... அவன் ஆம்பளடா புஜ்ஜி... என தலைப்பு வரும். 

தெலுங்கு படம்தான். ஆனால் தேவையில்லாத ரவுடிகள், சண்டை என்று இல்லாமல் நகைச்சுவையாக கொண்டாட்டமாகவே படம் பாதிக்கும் மேல் நகர்கிறது. படத்தின் முக்கியமான பாத்திரம் சித்து. இவனைப் பொறுத்தவரை வாழ்க்கை ஜாலியோ ஜிம்கானா என வாழ்ந்து வருகிறான். அனைவரிடமும் வம்பு செய்து மாட்டிவிடுவது, சக வயது பிள்ளைகள் தொடங்கி ஆசிரியர்கள், பள்ளிக்கு வெளியில் ஐஸ் விற்பவர் தொடங்கி யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் அவனது அப்பாவுக்கு மகனுக்காக அபராதம் கட்டுவதே தொழிலாக இருக்கிறது. கூடவே சித்துவை அடிக்க முடியாதவர்கள் அவனது அப்பாவி அப்பாவை அடித்துவிட்டு செல்கிறார்கள். வம்பு செய்யும் மகனின் பெயரை எங்கும் சொல்லாமல் வாழ்ந்து வருகிறார் அவனது அப்பா. 


இந்த சூழலில் சித்து கல்லூரிக்கு செல்கிறான். அதுவும் கூட அவன் காதலிக்கும் இந்து என்ற பெண்ணுக்காகத்தான். அவன் காதலிக்கும் பெண்ணின் அண்ணன் செர்ரி, தனது தங்கையை காதலிக்க நினைப்பவர்களை அடித்து துவைக்கிற ஆள். அவனை டபாய்த்து தங்கை இந்துவை காதலிப்பதோடு, அதுவரை அண்ணனின் அட்ராசிட்டியால் அவளது திறமைக்கு கிடைக்காமல் இருந்த பாராட்டுகளையும் பெற்றுத் தருகிறான் சித்து. இதுவே,   இந்துவுக்கு அவன் மீது காதல் உருவாக காரணமாகிறது. 


இந்துவின் கோரிக்கை காரணமாக பொது விஷயம் ஒன்றில் தலையிட்டு அரசியல்வாதி புஜ்ஜி (எ) சங்கரை அடித்து துவைக்கிறான். இதனால் புஜ்ஜி தன்னை அடித்தவனை ஊர் முழுக்க தேடுகிறான். கல்லூரியில் செர்ரி தொல்லையில்லாமல் இந்துவை காதலிக்க நினைக்கும் சித்து, அதற்காக செர்ரியை ஒருதலையாக காதலிக்கும் அஞ்சலி என்ற பெண்ணை கண்டுபிடிக்கிறான். அவளை தனது தங்கை என்று பொய் சொல்கிறான். ஏற்கெனவே, சித்துவை பழிவாங்க துடிக்கும் செர்ரி, அஞ்சலியிடம் தானாகவே சென்று காதலைச் சொல்கிறான். இதன் வழியாக சித்துவை பழிவாங்கலாம் என செர்ரி அப்பாவித்தனமாக நினைக்கிறான். இதை பயன்படுத்தி சித்து, இந்துவோடு காதலை ஶ்ரீ கோமினேனி இசையில் பழுக்க வைக்கப் பார்க்கிறான். 


அந்த அஞ்சலி யார் என்று தெரியுமா? அவள் அரசியல்வாதி புஜ்ஜியின் முறைப்பெண். அதாவது, அக்கா பெண். அவனுக்கு அவளை கல்யாணம் செய்ய ஆசை. இந்த நேரத்தில் செர்ரி உள்ளே புகுந்து ஆட்டத்தை கலைத்து அஞ்சலியைக் காதலிக்க கல்லூரி புகுந்து அவனை அடித்து உதைத்து அஞ்சலியை கூட்டிச்செல்கிறான் புஜ்ஜி.


சித்து, அஞ்சலியை மீட்டு செர்ரிக்கு கல்யாணம் செய்து வைத்தானா, இல்லையா என்பதே கதை. 


படத்திற்கு ஶ்ரீ கோமினேனி இசை பெரிய பலம். ஏனென்றால், படத்தின் காட்சிகளோடு இசையை சேர்த்து பார்த்தால் உங்களுக்கு விஷயம் புரியும். இளமைத் துடிப்பான கதை. அதற்கேற்ப இசை உள்ளது. படத்தில் வரும் குத்துபாடல் தவிர்த்து பிற பாடல்களை ரசிக்கலாம். 


இது ஒரு ஜாலியான நகைச்சுவைப் படம். எப்போதும் குறும்பு செய்கிற, தனக்கு வேண்டுகிற ஒன்றை எப்படியும் பெறுகிற ஆள் என சித்துவின் பாத்திர பில்டப் சூப்பர். அதுதான் படத்தின் மீதான தொடக்க கட்ட ஆர்வத்தை தூண்டுகிறது. படத்தின் இறுதிக்காட்சியின் நாயகியின் புத்திசாலித்தனத்தை, பழிக்குப் பழி வாங்கும் குணத்தை காட்டும் காட்சி உண்டு. உண்மையில் அதை யாருமே எதிர்பார்க்க முடியாது.  சித்து பாத்திரத்தில் நடித்த சுதீர் பாபு சிக்ஸ்பேக் வைத்திருக்கிற ஆள். சண்டை இல்லாமல் படம் முடிந்தால் எப்படி?


மக்கள் பிரதிநிதியாக இருப்பவர், தனது மகளுக்கு அவள் விரும்பியவனை திருமணம் செய்து கொடுக்க கூட தெம்பு இல்லாமல் இருக்கிறார். அதாவது, மாப்பிள்ளை புஜ்ஜியைப் பார்த்து பயப்படுகிறார். கல்யாணம் நடக்கும் இடத்திலேயே சித்துவுக்கும், புஜ்ஜிக்கும் நடக்கும் சண்டையை வேடிக்கை பார்க்கிறார். இறுதியாக தோற்றுப்போன புஜ்ஜியை அழைத்து படத்தின் தலைப்பை கூறி ஆத்திரத்தை தணித்து அட்சதை போட வைக்கிறார் என படம் முடிகிறது. இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் செய்கிற வேலையா? சுமனை அநியாயத்திற்கு வீணடித்திருக்கிறார்கள்.


அஸ்மிதா சூட்டிற்கு பெரிதாக நடிக்கும் கஷ்டம் இல்லை. மற்றபடி மற்ற விஷயங்களை சுதீர் பாபுவும், அஜய்யும் பார்த்துக்கொள்கிறார்கள். சொல்ல மறந்துவிட்டேனே, ஒரு நாய் ஒன்று படத்தில் பாத்திரமாகவே வருகிறது. அதைப் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. 


நகைச்சுவை, அதற்கான வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதுதான் படத்தின் முக்கியமான பலம். 


சுதீர்பாபு, பழனி படிக்கட்டு போல உடலை வைத்திருக்கிறார் என்பதாலேயே காதல் பாட்டு, குத்துப்பாட்டு என இரண்டிலும் திறந்த மேனி உடலாக வருகிறார். இதனால் நாயகிகளை பார்ப்பதை விட அவரது உடலையே ஆசையோடு பார்க்கிறோம். குத்துப்பாட்டிற்கு கூட படிக்கட்டு தெரியலாம். காதல் பாட்டில் எதற்கு சிக்ஸ்பேக்? இவரின் எக்ஸ்போஸ் காரணமாக நாயகி, தனது உடலை முழுக்க மூடிக்கொண்டுவந்து டூயட்டை பாடுகிறார். சாமி ரங்கா!


சுதீர்பாபு தனது படங்களில் எப்போதும் செய்கிற விஷயம் இது. ரிலாக்ஸாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் பார்க்கவேண்டிய படம். உங்களுக்கு நேரமிருக்கிறது. செலவழிக்க டேட்டா இருக்கிறது என்றால், யூட்யூபில் படம் இருக்கிறது. பாருங்கள். 


கோமாளிமேடை டீம்


கருத்துகள்