ஆப்பிரிக்க கண்டத்தின் வேளாண்மை பொருளாதாரத்தை மேம்படுத்த முயலும் இளம்பெண் கேட் கலோட்!

 









கேட் கலோட் என்ற பெண்மணி கென்யா நாட்டைச் சேர்ந்தவர். இவர்,2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமினி என்ற தகவல்தள நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், ஆப்பிரிக்காவில் உள்ள விவசாய நிலங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது.


 மண்வளம்,ஈரப்பதம், மழை ஆகிய தகவல்களை செயற்கைக்கோள் மூலம் சேகரித்து வருகிறது. கலோட்டின் நோக்கம், விவசாயிகளுக்கு காலநிலை பற்றிய தகவல்களை  எஸ்எம்எஸ் வழியாக வழங்குவதுதான். இதன் மூலம் அவர்கள் பயிர்களை கவனித்து வளர்க்கலாம், லாபம் பெறலாம். ஆப்பிரிக்க கண்டமே இதன் மூலம் லாபம் பெறும். இந்த திட்டத்தை சற்று விரிவாக பார்ப்போம். 


மொத்தம் ஆறு செயற்கைக்கோள்கள் வானில் அலைந்து திரிந்து ஆப்பிரிக்காவின் 11.7 மில்லியன் சதுர மைல் நிலப்பரப்பு பற்றிய காலநிலை தகவல்களை சேகரிக்கும். இதை வைத்து காலத்தே பயிர் செய்து, பராமரித்து லாபம் பெறலாம். வெள்ளம், பூச்சி தாக்குதல், மழை பற்றிய தகவல்கள் விவசாயிகளுக்கு போன் வழியாக அனுப்பி எச்சரிக்கப்படும். ஆப்பிரிக்க கண்டமே வேளாண்மையை அடிப்படையாக கொண்டதுதான். எனவே, அதை மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவ முடியும். 


உலகளவில் உள்ள விவசாயம் செய்யப்படாத தரிசு நிலங்களில் 65 சதவீதம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ளது. இதை கிடைத்த தகவல்களை வைத்து மாற்றமுடியும் என கலோட் நம்புகிறார். செயற்கைக்கோள் தகவல்களுக்கு நாசா, ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் உதவுகின்றன. கட்டற்ற முறையில் குறைந்த பிக்சல் தரம் கொண்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை அமினிக்கு வழங்குகின்றன. தனியார் செயற்கைக்கோள்களை இப்பணிக்கு பயன்படுத்தினால் நாளொன்றுக்கு 1.8 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. கட்டற்ற செயற்கைக்கோள் புகைப்படங்கள் வழியாக இச்செலவு இல்லாமல் போகிறது. 


2024ஆம் ஆண்டு கடைசிக்குள் ஆறு செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளியில் ஏற கலோட் திட்டமிட்டுள்ளார். இவர் தற்போது கென்யாவில் இருந்தாலும் பிறந்து  வளர்ந்தது எல்லாமே பிரான்ஸ் நாட்டில்தான். இங்கிலாந்து,அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள இன்டெல், என்விடியா, ஆர்ம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டுள்ளார். அமினி நிறுவனம் மூலம் விவசாயிகள், காப்பீடு செய்வதற்காக தேவைப்படு்ம் தகவல்களைக் கூட வழங்கிவருகிறார். சகாரா பகுதிகளில் வெறும் மூன்று சதவீத விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்கிறார்கள். கலோட்டின் அமினி மூலம் ஆப்பிரிக்க கண்டத்தின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது.


அலெக்ஸ் கிரிஸ்டியன்

வயர்ட் இதழ் 

கார்ட்டூன்ஸ்டாக்


கருத்துகள்