காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை

 











காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை


கடந்த சனிக்கிழமை இரவு எனது போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆங்கிலச்செய்தியை தமிழ்படுத்தி கூறுகிறேன். "அன்பு, தயவு செய்து உதவுங்கள் ஃப்ரீதமிழ் த.சீனிவாசனின் தொடர்பு எண்ணைக் கொடுங்கள்" என செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆங்கிலச்செய்தி அனுப்பும் அளவுக்கு நண்பர்கள் யாருமில்லையே என்று பார்த்தேன். அனுப்பியவர் பெயர் ராமமூர்த்தி. 

ஆம். அவரேதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடித நூல் பற்றிய புகாரை கொடுத்த முன்னாள் நண்பர்தான். இந்த செய்தி வந்ததும் எனக்குத் தோன்றியது. நூல் புகாருக்கு பிறகு அவர் என்னுடன் தொலைபேசியில் பேசவே இல்லை. திடீரென சில மாதங்களுக்கு முன்னர்தான் அவரே தொடர்பு கொண்டு பேசினார். பிறகு பேசுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. திடீரென இப்படியொரு குறுஞ்செய்தி என்றதும் எனக்கு மனதில் தோன்றியது. வேண்டுமென்றே ஏதோ பிரச்னையில் நம்மை இழுக்கிறாரோ என்று.... 


உள்ளுணர்வு சொன்னது சரிதான்.  இரண்டு பக்க கடிதம் ஒன்றை பச்சை மசியில் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் முன்னாள் நண்பர் திரு. ராமமூர்த்தி. அதாவது, விஷயம் என்னவென்றால், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புகார் அளிக்கப்பட்டு ஃப்ரீதமிழ் வலைத்தளத்தில் இருந்து உடனே நீக்கப்பட்ட 'ஒரு துளி மணலில் ஓர் உலகு' நூல், தற்போது டெலிகிராம் குறுஞ்செய்தி மென்பொருளில் உள்ள ஏதோ ஒரு சேனலில் பகிரப்பட்டிருக்கிறது. இதற்காக குறிப்பிட்ட நூல் பகிர்வு சேனலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் நிறுவனர் த. சீனிவாசன் அவர்களுக்கும், எனக்கும், நூலை வெளியிட்ட ஆரா பிரஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்திருக்கிறார் முன்னாள் நண்பர்.


இதில், ஆரா பிரஸ் நிறுவனம் தொடர்புடைய கடிதத்திற்கு சம்பந்தம் இல்லையென்றாலும் கூட தனது தரப்பு கருத்தை, புகார்தாரருக்கு மின்னஞ்சல் வழியாக தெரிவித்துவிட்டது. ஃப்ரீதமிழ் இபுக்ஸ் நிறுவனரான த. சீனிவாசன் அவர்கள் இதில் என்ன பதில் கூறினாரோ தெரியவில்லை. மின்னூலை எழுதியவன் என்ற முறையில் நான் நூலை இலவசமாக ஃப்ரீதமிழ் இபுக்ஸ் நிறுவனத்திற்கு அளித்தேன். அவர்களும் நூலை வலைத்தளத்தில் பதிப்பித்தனர். 

பிறகு, அந்த நூலை வாசித்த முன்னாள் நண்பரின், நண்பர் அதில் அவரது துறைசார்ந்த தலைவர் பற்றிய விமர்சனம் ஒன்று உள்ளது, அது அவரது பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தும் என கூறியிருக்கிறார். இதன்மூலம் தன்னுணர்வு பெற்று விழிப்புணர்வு அடைந்த முன்னாள் நண்பர், உடனே தடாலடியாக புகார் கடிதம் ஒன்றை எழுதி த.சீனிவாசன் அவர்களுக்கு அனுப்பினார். அதில் உள்ள சாராம்ச விஷயங்களை  சுருக்கமாக ''நூலின் எழுத்தாளர் புனைவாக கருத்துகளை எழுதியிருக்கிறார். அதில் எந்த உண்மையும் இல்லை. நூலை வலைத்தளத்தில் இருந்து நீக்கினால் மட்டுமே எனது அரசு வேலை பிழைக்கும்'' என கூறலாம்.  எளிமையாக நூலை எழுதியவர் யாரென்றே தெரியாது என கூறியிருந்தால் கூட விஷயம் இன்னும் எளிமையாக முடிந்திருக்கும். முன்னாள் நண்பர் அப்படி கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 


த.சீனிவாசன் அவர்கள் தனது வலைத்தளத்தை எந்த சர்ச்சைக்கும் இடம் தராமல் நடத்தி வருகிறார். தனது தொழில்நுட்ப பணியைக் கடந்து நேரத்தை ஒதுக்கி தமிழை இணையத்தில் பரப்பும் அவரது பணி மகத்தானது. அவருக்கும் அவரது குழுவினருக்கும் இதன் காரணமாகவே பெருமை மிக்க ஆனந்தவிகடனின் நம்பிக்கை இளைஞர்கள் விருது வழங்கப்பட்டது. அவர்களது செயல்பாடு சர்ச்சைகளை தவிர்க்கும் வண்ணம் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்படி புகார் வந்ததும் அதைப்பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதை நான் தாமதமாகவே பார்த்தேன். அதற்கு பதில் அனுப்புவதற்கு முன்னதாகவே மின்னூல் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. முன்னாள் நண்பரின் அரசு வேலையை காலத்திலேயே காத்த இந்த செயல்பாடு, என் தரப்பில் நான் கூறுவதற்கு இருந்த வாதத்தைக்கூட நசித்துவிட்டது. எழுத்தின் நம்பிக்கையை உண்மைத்தன்மையை முற்றாக அழித்துவிட்டது.  தண்டனை வழங்கப்பட்ட பிறகு குற்றவாளியின் குற்றத்திற்கு காரண காரியங்களையோ, அவர் நிரபராதியோ என்று  ஆராய்ந்து என்ன பயன்? அப்படித்தான் இருந்தது என் நிலைமை. 


முன்னாள் நண்பர் தனது வேலை போய்விடும் என கூறியிருந்த கடிதத்தை பார்த்ததும் நான் யோசித்தது ஒன்றே ஒன்றுதான். அடுத்தவர்களின் வாய்ப்பை, வசதியை தட்டிப்பறித்து எனது பாக்கெட்டில் பணமோ, புகழோ நிரப்பிக்கொள்ளப் போவதில்லை. எனவே, த.சீனிவாசன் அவர்களுக்கு முறையான மின்னஞ்சல் கடிதம் ஒன்றை எழுதி,'' நூலை நீக்கிவிடுங்கள். முன்னதாகவே முடிவெடுத்து நீக்கியதும் நல்லது'' என கூறினேன். அதற்குப் பிறகு, நான் ஃப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளத்திற்கு எந்த நூல்களையும் அனுப்பவில்லை. ஏனெனில் ஒற்றைப் புகார் போதுமானது. இதுவரை நான் எழுதி கொடுத்த மொத்த நூல்களைக் கூட நிறுவனர் அவர்களால் நீக்க முடியும். யாரோ ஒருவர் ''என் மனம் புண்பட்டுவிட்டது. அவர் எழுதியுள்ளதை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது'' என்றால் கூட போதும்தானே? 


முன்னாள் நண்பர், என்னை பொய் கூறுகிறார்.நூல் ஒரு புனைசுருட்டு என்று கூறியதை அவரின் கடிதம் மூலம் வாசிக்கும்போது வருத்தமாக இருந்தது. அதைவிட மனதிற்கு சங்கடமாக இருந்தது, நூலை வெளியிட்ட த.சீனிவாசன் என் பொருட்டு சங்கடப்பட்டுவிட்டாரே என்றுதான். ஒருமுறை நம்பிக்கை இழந்தபிறகு, நூலை அனுப்பும்தோறும் அதில் ஏதேனும் பிரச்னைகள் இருக்குமோ என தோன்றும். அதுதானே மனிதர்களின் இயல்பான குணம். 

எனவே, நூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸிற்கு அனுப்புவதை முழுமையாக நிறுத்திக்கொண்டுவிட்டேன். என்னைப் போன்ற தனிநபர் ஒருவரால் அந்த வலைத்தளம் இயங்கவில்லை என்று அறிவேன். உலகம் முழுக்க ஏராளமான தன்னார்வலர்கள் பங்களிக்கிற முன்னோடி வலைத்தளம். அதில் என்னுடைய நூல்கள் இடம்பெற்றிருப்பது பெருமையாகவே இன்றுவரை நினைக்கிறேன். 

பெயருக்கு களங்கம் வந்தபிறகு முன்னர் இருந்தது போல உறவு இருக்காது என்று என் மனதிற்கு தோன்றியது. எனவே, என்னுடைய நூல்களை இலவசமாக வெளியிடும்போது அதை பொதுவாக ஒரு கோப்பு பகிரும் வலைத்தளத்தில் பதிவிடத் தொடங்கினேன். வேண்டுபவர்கள் அதை தரவிறக்கிக் கொள்ளலாம். சில நாட்கள் கோப்புகள் இருக்கும். பிறகு அதுவே அழிந்துவிடும். யாரும் புகார் கொடுத்தால் உடனே நீக்கப்படாது பாருங்கள். இது கொஞ்சம் ஜனநாயகத் தன்மையோடு உள்ளது அல்லவா? 


நண்பர் என்று நினைத்தவர்கள், தங்களின் சுயநலத்திற்கு நிறையமுறை என்னை பயன்படுத்தியிருக்கிறார்கள். தூக்கி எறிந்திருக்கிறார்கள். அதை தாமதமாகவே தெரிந்துகொண்டிருக்கிறேன். முதல்முறை பொய்யாக கருத்துகளை எழுதியதற்கு நான் காரணம் என வைத்துக்கொள்வோம்.  இரண்டாம் முறை நடந்த நூல் பகிர்வு சிக்கலுக்கு நான் காரணமில்லை. த.சீனிவாசன் அவர்கள், எனது முன்னாள் நண்பருக்கு முறையாக தனது கருத்துகளை கூறியிருப்பார் என நினைக்கிறேன். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நூல் கோப்பை, ஃப்ரீதமிழ் இபுக்ஸிற்கு மட்டுமே அனுப்பினேன். அதை அவர்கள் குழுவாக இணைந்து பல்வேறு வகை கோப்புகளாக மாற்றி வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள். இந்த நூலின் கோப்பை பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் தரவிறக்கி பல்வேறு இடங்களில் பதிவிடுகிறார்கள். நூலை பகிரும் வலைத்தளங்களில் சேமிக்கிறார்கள். இதன்மூலம் தமிழ் நூல்களை ஒருவர் பல்வேறு தளங்களில் எளிதாக பெறமுடியும். காப்புரிமையற்ற வகையில் நூல்களை பகிருவதால் சட்டச்சிக்கலும் ஏற்படாது. ஒருவரின் சிந்தனைகளையும் மக்கள் எளிதாக விலையின்றி வாசித்து அறிய முடியும். 


மின்னூல்களை விலைக்கு விற்கும் தளங்களில் இருந்து திருடி அதை இலவசமாக கொடுக்கும் தளங்களும் இணையத்தில் உண்டு. இந்த வகையில் எழுத்தாளர்களான பா.ராகவன், சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ்குமார், பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ரா ஆகியோரது நூல்கள் குறுஞ்செய்தி மென்பொருட்களின் வழியாக கோப்பாக பகிரப்படுகின்றன. இப்படி பகிருவதற்கு என்னை குற்றம்சாட்டினால் எப்படி? இதில் என்ன நியாயம் இருக்கிறது? 

இப்படியான வழியில், பேரும் புகழும் சமூக மரியாதையுடன் வாழும் முன்னாள் நண்பரை பழிவாங்கும் வன்மம் ஏதும் எனக்கு இல்லை. கடிதநூல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு, முன்னாள் நண்பரின் தாயார் வழங்கிய ரூ.500 ரூபாயைக் கூட பணவிடை மூலம் அனுப்பிவைத்துவிட்டேன். எனக்கும் அவருக்கும் எந்தவித கொடுக்கல் வாங்கலுமில்லை. அதோடு சரி. பிறகு, அவரை நான் தொடர்புகொள்ளவில்லை. 

சென்னையை விட்டு வந்து வீட்டில் இருந்தேன். ஆறுமாதங்களுக்கு பிறகு அவராகவே ஒருநாள் போனில் தொடர்பு கொண்டு பேசினார். பிறகு நான் ஒருமுறை தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால் பள்ளிக்காலத்தில் இருந்த நட்பும் நெருக்கமும் இனி என்றைக்கும் ஏற்படாது என்று தோன்றியது. பிறகு போனில் தொடர்புகொள்வதைக் கூட நிறுத்திக்கொண்டுவிட்டேன். ஆழ்மனதில் நம்பிக்கை இல்லாத உறவை, வாய்ப்பேச்சு மூலம் வளர்க்க முடியுமா என்ன? அவரின் சமூக அந்தஸ்து, வகிக்கும் அரசு பதவி, புகழ், பெருமைக்கு பொருத்தமான நட்பாக நான் இருக்கமுடியாது என்று எண்ணினேன். 


முன்னாள் நண்பரின் எழுதிய கடிதத்தில் த.சீனிவாசன் அவர்கள், பிறகு ஆரா பிரஸ் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பது கூட இருவரும் சேர்ந்துதான் நூலை டெலிகிராம் மென்பொருளில் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில்தான் என்பதை புரிந்துகொள்ளமுடியாதா என்ன? 'ஒரு துளி மணலில் ஓர் உலகு' நூல் ஒரு கடித நூல். நான் முன்னாள் நண்பருக்கு எழுதிய கடிதங்கள், அதற்கு பதிலாக காங்கேயத்தில் பணிபுரிந்தபோது அவர் வாய்மொழியாக கூறிய தகவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. வாய்ப்பு, வசதிகள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் உண்மை என்பது ஒன்றுதான் என்பதை நம்புகிறேன். 

டெலிகிராமில் உள்ள சேனல்களில் காப்புரிமை நூல்களை இலவசமாக வெளியிடுகிறார் என்றால் அதை புகாரளித்து தடுத்து நிறுத்தமுடியும். கடித நூலை எழுதியவன் என்பதற்காகவே இரவில் இடையறாது போனில் அழைப்பது, குறுஞ்செய்தி அனுப்புவது என அச்சுறுத்துவது எதற்காக என்று புரியவில்லை. முன்னாள் நண்பரின் மதம், சாதி, குடும்பம், பெற்றோர், வகிக்கும் பதவி  ஆகியவை பற்றிய இறைஞ்சுதலுக்கு தொழில்நுட்ப வல்லுநரான த.சீனிவாசன் தன்னால் இயன்ற ஏதேனும் ஒன்றை செய்ய இயலுமாயின் நல்லது. என்னால் செய்ய இயன்றது ஏதுமில்லை.

 இந்தமுறை அளிக்கப்பட்ட புகாரின் மூலம் முன்னாள் நண்பர் என்ன சாதி, அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்ற தகவல்களை அறிந்துகொண்டேன். 

முதல்முறை புகாரின்போது நூலை நீக்கியபோது அதைப்பற்றி விளக்கமாக பேசியிருக்கவேண்டும். ஆனால், அதனால் என்ன பயன் என்று யோசித்தேன். ஏனெனில் அச்சமயத்தில் என் மீதான நம்பிக்கை த.சீனிவாசன் அவர்களிடம் நொறுங்கிப்போய்விட்டது. நூலையும் நீக்கிவிட்டார். விளக்கம் கொடுத்து என்ன பயன் விளையும் என்று புரியவில்லை. ஆனால், இரண்டாம் முறையும் முன்னாள் நண்பர் வன்மத்தோடு குற்றம்சாட்டி தாக்குதல் தொடுப்பதை பொறுத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. 

நான் செய்த தவறு, ஒருவரை ஆத்ம நண்பராக நினைத்து பழகியதுதான். வேறு ஏதுமில்லை. அதற்கான வீண்பழியை இன்றளவும் சுமந்துகொண்டிருக்கிறேன்.  இந்த கட்டுரையின் தலைப்பைப் போலவே எனது மனநிலையும் இருக்கிறது. உண்மை என்பது ஒன்றுதான். அதை அடையாளம் காண சில ஆண்டுகள் ஆகிவிட்டது. காலத்திற்கு நன்றி!


அன்பரசு சண்முகம்






 




கருத்துகள்