ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!
ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்!
ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.
அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில், இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு இருபத்தைந்து வயதாகிறது.
1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பதிப்பகம், ஜிம்பாவேயின் மண்ணுக்கு சொந்தமாக கலாசார கதைகளை இன்றுவரையில் சொல்லி வருகிறது. இவர்கள் வெளியிட்ட பல்வேறு நூல்கள் மேக்மில்லன் பரிசு, புக்கர் பரிசு, கெய்ன் பரிசு ஆகிய புகழ்பெற்ற இலக்கியப் பரிசுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பரிசுகளையும் வென்றுள்ளது.
வேவர் பிரஸ் தம்பதிகள், ஜிம்பாவே ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றபிறகு அங்கு சென்றனர். அப்போது அங்கே மண்ணுக்கு சொந்தமான இலக்கியங்கள் வெளியிடப்படத் தொடங்கின. அதற்கான தேவையும் மக்களுக்கு இருந்தது. இத்தனைக்கும் அப்போது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தடுமாறிக்கொண்டிருந்தது. ''இன்று போட்டோகாப்பி எடுத்து பிரசுரம் செய்கிறார்கள். நாங்கள் தொழிலை தொடங்கிய அன்றும் நிலைமை மோசமாகவே இருந்தது. எடிட்டர் என்ற பணியை பின்னணியில் இருக்கவேண்டியதாகவே நினைக்கிறேன். அவர்கள் பின்னணியில் இருந்து எழுத்தாளரை முன்னே கொண்டு வரவேண்டும்'' என ஐரின் பேசினார்.
ஆண்டுக்கு பத்து தலைப்புகளுக்கும் குறைவாகவே நூல்களை வெளியிடுகிறார்கள். அதேசமயம் இருநூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களோடு பணியாற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் வேவர் பிரஸ்ஸூக்கு உண்மையில் பெரிய பெருமைதான். ஜிம்பாவேயின் இலக்கியப் பணிக்கென தன்னை அர்ப்பணித்து இயங்கி வரும் வேவர் பிரஸ், இன்னும் புகழ்பெற்று வளரவேண்டும்.
சயீத் கமாலி தேஹ்கான்
கார்டியன் நாளிதழ்
மூலக்கட்டுரையை தழுவியது.
கருத்துகள்
கருத்துரையிடுக