உறுப்புதான குற்ற கும்பலால் மனைவி, மகளை இழக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வாழ்க்கைக் கதை!

 










ஜோசப் 


மலையாளம் 


இயக்குநர் - பத்மகுமார்


இசை -ரஞ்ஜின் ராஜ் 



வேலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜோசப். கொலைகளை எளிதாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கு ஒரு மகள் உண்டு. மனைவி விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை மணந்துகொள்கிறார்.  ஜோசப்பிற்கு ஐந்து விசுவாச நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது மது அருந்திவிட்டு மலை உச்சியில் பாட்டு பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு ஒரு திருப்புமுனையாக ஜோசப்பின் மனைவி விபத்தில் சிக்குகிறார். மூளைச்சாவு அடைந்ததாக சொல்லி உறுப்பு தானம் செய்ய மருத்துவமனையில் கேட்கிறார்கள். முன்னாள், இந்நாள் கணவர்கள் இருவரும் ஒப்புதல் தருகின்றனர். ஆனால் முன்னாள் கணவரான ஜோசப்பிற்கு, ஸ்டெல்லா இறந்துபோனது வருத்தம் தருகிறது. அவர் இறந்துபோன இடத்திற்கு சென்று பார்த்து அது விபத்தல்ல கொலை என்று நண்பர்களுக்கு கூறுகிறார். யார் கொலையாளி,என்ன காரணம் என்பதை படம் நிதானமாக பேசுகிறது. இறுதியாக வரும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. மனதை ரணப்படுத்துபவை. 


படத்தின் தொடக்கத்தில் திலீஸ் போத்தன், அரசு அதிகாரி கொடுக்கும் மெடல் ஒன்றை வாங்குகிறார். அவர் நினைவுகளின் வழியாக படம் தொடங்குகிறது. ஜோஜூ ஜார்ஜ்தான் படத்தின் நாயகன், ஜோசப். இவரது பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திறமையான போலீஸ் அதிகாரி. அதேசமயம் பெரிதாக தனது திறமையை முன்னிலைப்படுத்தாத ஆள். அமைதியாக தனது வேலையைப் பார்த்துவிட்டு வெளியே வருகிற ஆள். அவரின் திறமை பற்றி தொடக்க காட்சியில் தெளிவாக கூறிவிடுகிறார்கள். மனதில் நிறைவேறாத காதலை வைத்துக்கொண்டுதான் அவர் ஸ்டெல்லாவை மணம் செய்கிறார். ஆனால், அவரது முன்னாள் காதலி கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் உடல் கிடப்பது அவரை மனதளவில் பாதிக்கிறது. அதற்குப் பிறகு அவரால் ஸ்டெல்லாவுடன் மணவாழ்க்கையில் இயல்பாக இருக்க முடியவில்லை. விவாகரத்தாகிறது. மகளை தனக்கு கொடுக்கும்படி கேட்கிறார் ஜோசப். ஸ்டெல்லா அதை மறுப்பதில்லை. இப்படியான வாழ்க்கையில் ஜோசப்பின் மகள் விபத்தில் இறக்கிறாள். அது ஜோசப்பை பெரும் விரக்திக்கு ஆளாக்குகிறது. அவர் வாழ்க்கையில் பெரிதும் நேசித்தவர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். முதலில் மகள் பிறகு முன்னாள் மனைவி. தான் கொண்ட அன்பிற்காக, அது தந்த வலியைக் கூட பொருட்படுத்தாமல் தன் வாழ்வையே தியாகம் செய்யும் மனிதன்தான் ஜோசப். எளிமையான காட்சிகள் மூலம் மனதில் பெரும் பாரத்தை ஏற்றி அனுப்புகிற படம். 


ஜோசப்பைப் பொறுத்தவரையில் யாரும் இன்னதென அறியமுடியாத மன ஆழம் கொண்டவர். வீட்டில் தனியாக மகளுடன் வாழ்கிறார். மகள் விபத்தில் இறந்துபோக, அவளை மறக்கமுடியாமல் தவிக்கிறார். அவருக்கு ஒரே ஆறுதல் மதுவாக மட்டுமே உள்ளது. படத்தின் இறுதிப்பகுதியில் மதுவைக் கைவிடுகிறார். பெரிதாக கண்டுகொள்ளாத இயேசுவை தொழுகிறார். வார இறுதி பிரார்த்தனையில் பங்கேற்கிறார். ஆனால் அதெல்லாம் எதை நோக்கிய பயணம் என அறியும்போதுதான் நினைத்துப் பார்க்க முடியாத துக்கம் மனதை அழுத்துகிறது. படத்திற்கு ரஞ்ஜின் ராஜின் இசை பெரிய பலம். பெரும்பாலான பாடல்களை விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். நெஞ்சோரம் நீ மாத்ரம், உயிரின் நாதனே ஆகிய பாடல்கள் அதன் பொருள், பாடப்படும் சூழலுக்கு சிறப்பாக பொருந்துகிறது. 


கோமாளிமேடை டீம்

கருத்துகள்