சூழலுக்கு இசைந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தடுமாறும் லீகோ!
லீகோ குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதை அறிவீர்கள். இந்த நிறுவனம் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான அடிப்படை ஆதாரம், கச்சா எண்ணெய்தான். ஆனால் சூழலியல் கட்டுப்பாடு, அதைப்பற்றிய அறிவு மக்களுக்கு அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு சங்கடமாகி வருகிறது. எனவே லீகோ தனது உற்பத்தியை மாசுபாடு அதிகம் ஏற்படுத்தாத மறுசுழற்சி செய்யும் பொருட்களுக்கு மாற்றி வருகிறது. தற்போது அக்ரிலோனைட்ரில் பூட்டாடையின் ஸ்டைரீன் சுருக்கமாக ஏபிஎஸ் என்ற பொருளை பயன்படுத்தி வருகிறது. இதை மறுசுழற்சி செய்யலாம். உயிரியல் ரீதியாக மட்க கூடியது. ஆனால் அதற்கான காலம் அதிகம்.
தற்போது, லீகோ பிராண்டின் மதிப்பு ஏழு பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நிறுவனம் சூழலுக்கு உகந்த பொருளை கண்டுபிடித்து அதை உற்பத்திக்கு பயன்படுத்தினால் மட்டுமே வணிக வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லீகோ நிறுவனம், ஆர்பெட் எனும் பிளாஸ்டிக்கை பற்றி பெருமையுடன் கூறியது. இதை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்கலாம் என்றது. ஆனால் இந்த வகை பிளாஸ்டிக்கும் கூட லீகோவிற்கு உதவவில்லை.
ஏபிஎஸ்சிலிருந்து ஆர்பெட்டிற்கு மாறுவது கடினமான செயல்முறையாக உள்ளது. குறிப்பாக இதனால் ஏற்படும் கார்பன் வெளியீட்டு அளவு அதிகம். அடுத்து, ஆர்பெட்டில் விளையாட்டு பொருட்களை செய்யும்போது ஏற்படும் நடைமுறை பிரச்னைகள். அதாவது நிறம் சேர்ப்பது, அதன் ஈரப்பதம் உலர்வது தொடர்பானவை என நிறைய உள்ளன. ஏபிஎஸ் பிளாஸ்டிக்கில் உயிரியல் ரீதியாக மட்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கை சேர்த்தே விளையாட்டுப் பொருட்களை உருவாக்குகிறது. கரும்பிலிருந்து உயிரியல் ரீதியான பிளாஸ்டிக் வேதிப்பொருள் பெறப்படுகிறது. மாற்று பொருட்களை கண்டறிய லீகோ 115 மில்லியன் டாலர்களை கொட்டி தனி ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. இதில் மொத்தம் 150 விஞ்ஞானிகள் பணிபுரிகிறார்கள்.
லீகோ விளையாட்டுப் பொருட்கள் தலைமுறை தலைமுறையாக குழந்தைகளுக்கு பகிரப்படுகிறது. அமெரிக்கா, கனடா நாடுகளில் லீகோவின் ரீப்ளே எனும் திட்டம் மூலம் பயன்படுத்தப்பட்ட லீகோ விளையாட்டுப் பொருட்களை சுத்தம் செய்து பேக்கிங் செய்து திரும்ப குழந்தைகளுக்கு விளையாட வழங்கி வருகிறார்கள்.
மற்ற நிறுவனங்களின் விளையாட்டுப் பொருட்களை வாங்கி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது வழக்கம். ஆனால் லீகோ நிறுவனத்தின் விளையாட்டு பொருட்களை இரண்டாவது முறையாக விற்கும் முயற்சியிலும் சிலர் காசு பார்க்கிறார்கள். இதன் விற்பனை மதிப்பு பதினொரு சதவீதமாக உள்ளது. இப்படி புதிய பொருட்களை வாங்காமல் பழைய பொருட்களை பயன்படுத்தும்போது கார்பன் மாசுபாடு குறைகிறது.
அண்மையில் லீகோ, பிரிக் லிங்க் எனும் பழைய பொம்மைகளை விற்கும் ஆன்லைன் வலைத்தளத்தை கையகப்படுத்தியது. இதன் வழியாக பழைய பொருட்களை விற்று இயற்கை சூழலியலை கெடாமல் பாதுகாக்கலாம். ஆர்பெட் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது லட்சியமாக கொண்டால் பழைய பொருட்களை பயன்படுத்துவதை இன்றைய நிச்சய செயல்பாடாக செயல்படுத்தலாம்.
வயர்ட் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக