அசுரகுல தலைவரின் இரண்டாவது பிறப்பு

 











பாத் ஆஃப் சாமன்ஸ்


காமிக்ஸ்


மங்காபேட்.காம்


அசுரகுல இனக்குழுவைச் சேர்ந்த தலைவர் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவருக்கு எமனின் அழைப்பு மூன்று முறை கேட்டால் உயிர் பிரிந்துவிடும். இந்த நிலையில், அவரது விசுவாச சீடன் யூம்யங் அமர வாழ்க்கை தரும் மூலிகையை கொண்டு வந்து வாயில் பிழிகிறான். இதனால், அவரது உடல் பலம் பெறுகிறது. அதேசமயம், ஆன்மா உடலை விட்டு வெளியே வருகிறது. அதை எமன் கொண்டு போக நினைக்கிறார். ஆனால் உடல் மூலிகையால் பலம் பெற்றவுடன் ஆன்மா உள்ளே நுழைய முயல்கிறது. உண்மையில் தலைவருக்கு பணம், செல்வாக்கு, மனைவிகள் என அனைத்துமே கிடைத்தும் நினைத்த லட்சியங்களை அடையமுடியவில்லை. அதை அடையவே அமரத்துவ வாழ்வை பெற நினைக்கிறார். 


இம்முறை எமன் செய்த விளையாட்டால் அவரது உயிர், வுடாங் இனக்குழுவில் தாவோயிசம் பயிலும் மாணவன் உடலில் புகுந்துவிடுகிறது. அந்த மாணவனுக்கு அசுரகுல தலைவரின் நினைவுகளும் உள்ளது. அந்த மாணவனின் உடலில் உள்ள இயற்கையான நினைவுகளும் இருக்கிறது. இந்த பிறப்பில் அசுரகுல தலைவர் அவரது இயல்பான தீயசக்திகளை பயன்படுத்த முடியாமல் போகிறது. அதேசமயம் அவரது எதிரிகளை நண்பர்கள் என்ற முறையில் சந்திக்க நேரிடுகிறது. 


பத்து ஆண்டுகளாக படுக்கையில் கிடந்த தனது குருவை நாயகன் கறி சூப் சமைத்துக்கொடுத்து அக்கறையாக பார்த்துக்கொண்டு மீட்டெடுக்கிறான். இந்த பகுதி உணர்வெழுச்சி கொண்டதாக உள்ளது. இதனால் அந்த குரு, தனது சீடன் மேல் நினைத்துப் பார்க்கவே இயலாத பாசத்தை கொண்டிருக்கிறார். வுடாங் இனக்குழு, புத்தரின் பத்து கட்டளைகளை மீறாமல் பின்பற்றி வருகிறது. ஆனால், நாயகன் செய்த இறைச்சி புரட்சியால் படுக்கையில் கிடந்த இனக்குழுவின் முக்கிய குரு ஒருவரே உடல்நலம் தேறியதால் கறி சாப்பிடுவது பற்றிய கட்டாயம் மெல்ல நீக்கப்படுகிறது. 


நாயகனைப் பொறுத்தவரை அவனுக்கு குருவின் உடல்நலம் சீரடைந்தால் தாவோயிச குழுவை விட்டு நீங்கி, தனது அசுரகுல ஆட்களை சென்று சந்தித்து மீண்டும் தனது ஆட்சியை அமைப்பதே திட்டம். ஆனால், வுடாங் இனக்குழுவில் உள்ள குருவின் பாசம் அவனைத் தடுக்கிறது. அங்கேயே தாவோயிச தற்காப்புக் கலைகளை பயிற்சி செய்கிறான். அப்போது அங்கு உணவு கொண்டு வரும் சுங்வூ என்ற மாணவனுக்கு அவனது உடலுக்கு ஏற்ப மணிக்கட்டு தற்காப்புக் கலையை அடித்து உதைத்து சொல்லித் தருகிறான். 

சுங்வூ, தான் கற்றதை பயிற்சி செய்து தன்னை கேலி செய்யும் மாணவனி்ன் ஆண்மையை இழக்கச்செய்கிறான். இதனால் கோபமுற்ற தாவோயிச வீரன் ஒருவன் யார் இதை உனக்கு கற்றுக் கொடுத்தது என்று சொல்லி நாயகனை சந்திக்க வருகிறான். நாயகனின் சிறப்பு என்னவென்றால், தாவோயிச தற்காப்பு கலையில் சில மாறுதல்களை செய்து அதன் பலவீனத்தை சீரமைக்கிறான். இதனால் விதி மீறாமல் சண்டையிடும் வாள் வீரனை, நாயகன் அடித்து உதைத்து பல மாதங்கள் படுக்க வைக்கிறான். இது, தாவோயிச இனக்குழு தலைவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஏனெனில் நாயகன் ஓராண்டு பயிற்சி எடுத்தவன். அதுவும் அவனாக தற்காப்பு பயிற்சி செய்தவன். அவனது குருவுக்கு பயிற்சியை செய்துகாட்டக்கூட உடல் பலமில்லை. வெறும் வாயில் கூறும் வழிகாட்டல்தான். ஆனால் அவனை எதிர்த்து சண்டை போட்டவன், மிகச்சிறந்த வாள் வீரன் என பெயர் பெற்றவன். 


நாயகனுக்கு தன்னுடைய ஆன்மாவில் உள்ள தீயசக்தியை , தாவோயிச சக்தியுடன் இணைக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு தாவோயிசத்தின் இரட்டைக் கலை எனும் பயிற்சியை பயில வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு தாவோயிச பள்ளியில் தலைவரின் மாணவராக சேர வேண்டும். அதற்கு பல்லாண்டுகள் உழைக்கவேண்டும். ஆனால், நாயகனுக்கு வுடாங் இனக்குழு தலைவர்கள் அவன் செய்த மூன்று குற்றங்களுக்காக கோவில் ஒன்றை சீரமைக்க உத்தரவிடுகிறார்கள். அங்கு நாயகனும் அவனது சீடனாக சேரும் சுங்வூவும் செல்கிறார்கள். முதல் ஒருவாரம் அங்குள்ள விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுகிறார்கள். சுங்வூவுக்கு இறைச்சி என்றால் அந்தளவு இஷ்டம். சாப்பிடும்போது அவன் உலகை, ஏன் தன்னையே மறந்துவிடுகிற ஆள். அவனுக்கு உலகின் சூதுவாது தெரியாது.அப்பாவி.

ஆனா், நாயகன் ஊட்டும் தன்னம்பிக்கையும் ஆணையையும் உடனே செய்பவன். 


 நாயகன் அவனுக்கு கறிச்சோறு போடுவதோடு, தற்காப்பு கலையையும் கற்றுக்கொடுத்து அவனை வலிமையாக்கியதால் அவனுக்கு பெருமை தலைகால் புரிவதில்லை. எனவே அவன் நாயகனை மாஸ்டர் அங்கிள் என அழைக்கிறான். கூடவே கோவிலை மறுகட்டுமானம் செய்யும்போது,சுங்வூ , சுங்செங் என்ற தாவோயிச வீரனை கூட்டி வருகிறான். இவன் சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்துவந்தவன். இவனது பெற்றோரை கொள்ளையர்கள் கொன்று, சொத்துகளை கொள்ளையடித்து விடுகின்றனர். அங்கு சென்ற வுடாங் இனக்குழு தலைவர் ஒருவர் அவனைக் காப்பாற்றி வந்து தற்காப்பு கலைகளைப் பயிற்றுவிக்கிறார். வுடாங் இனக்குழுவின் பள்ளியிலும் புகழ்பெற்ற குடும்ப பிள்ளைகள் அவனை பாகுபாடாக நடத்துகிறார்கள். எனவே, அவன் வாள் வீச்சில் திறமை பெற்றாலும் முன்னேற முடியாத நிலை.அப்போதுதான் நாயகன் பற்றி கேள்விப்பட்டு அங்கு வருகிறான். அவனைப் பார்த்த உடனே நாயகன், அவனை சரியானபடி பயிற்சி கொடுத்தால் தனக்கு முதல் தளபதியாக இருப்பான் என முடிவு செய்கிறான். தனக்கு ஆதரவான சக்திகள் இருந்தால்தானே ஒருவன் முன்னேற முடியும். 


பாத் ஆஃப் சாமன் கதையில் நாயகன், சுங்செங், சுங் வூ என்ற மூன்று பேர்தான் முக்கியமானவர்கள். கதையில் பெரும்பாலான இடங்களில் இந்த மூவர் கூட்டணிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. பெண்கள் வேண்டும் அல்லவா?  அதற்கு ஜெகல் குடும்பத்தைச் சேர்ந்த சான்சன் என்ற பெண் இருக்கிறாள். இவளுக்கு நாயகன் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது. குழந்தையை அஜூர் படுகொலைக்குழு, கொல்ல முயலும்போது அதைத் தடுக்க நாயகன் முயல்கிறான். அங்கு ஒயிட் ஹெரான் எனும் மூத்த தலைவரும் இருக்கிறார். இங்குதான் சான்சன் நாயகனின் தற்காப்பு திறமைகளை அறிகிறாள். 


அடுத்து டேங் இனக்குழுவைச் சேர்ந்த  செரியாங் என்ற இளம்பெண். நல்ல புத்திசாலி. கூடவே கிறுக்குத்தனமும் கொண்டவள். நாயகனுடன் அவளது கோட்டை வாசலில் சண்டை போடுகிறாள். நாயகன் அவள் யார், அந்தஸ்து என்னவென்று பார்ப்பதில்லை. லேசாக அடித்து விலக்குகிறான். ஆனால், இதை டேங் இனக்குழு தலைவர் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் மெல்ல நிலைமை புரிந்து தன் மகள்தான் வம்புச்சண்டைக்கு போயிருக்கிறாள் அறிந்து மன்னிப்பு கேட்கிறார். செரியாங் மெல்ல நாயகன் மேல் வெறித்தனமான காதலில் வீழ்கிறாள். 


டேங் இனக்குழு பொதுவாக ஈகோ கொண்ட ஆட்கள். பலரிடமும் சண்டை போடுவதுதான் வேலை. தங்கள் நாட்டில் படை வீரர்களைக் கொன்றுவிட்டு மர்ம மனிதர்கள் குயின்செங் எனும் நாட்டிற்கு சென்றால் கூட, அங்கும் அனுமதியின்றி சென்று குற்றவாளிகளை வேட்டையாடுகிறார்கள். இது இருநாட்டிற்கும் பெரிய சண்டையாக மாறுகிறது. நாயகன், இரட்டைகலை பற்றிய உண்மையை அறிந்து அதைப்பெறவே தாவோயிச யாத்திரை எனும் திட்டத்தை பயன்படுத்திக் கொள்கிறான். இதன்படி அவன் ஐந்து இடங்களுக்கு சென்று வரலாம். ஐந்துமே புத்த மதம் சார்ந்த இடங்கள். குயின்செங்கும் கூட அப்படித்தான். அங்குள்ள முன்னோர்கள் கோவிலில் இரட்டைக்கலை பற்றிய சீட்டு கிடைக்கிறது. அதை எடுக்கும் முயற்சியில் பெரிய ஓநாய், அவரது அசூர் குழு உள்ளது. 


இந்த பெரிய ஓநாய் தற்காப்பு கலையில் மிகச்சிறந்தவர். ஆனால் அவரது நோக்கம்தான் பிரச்னை. நாயகனுக்கும் பெரிய ஓநாய்க்கும் நடக்கும் முதல் யுத்தம், ஹோட்டலில் நடக்கிறது. இரண்டாவது யுத்தம் சற்று கடுமையானது. இரண்டுமே பிரமாதமாக வரைந்திருக்கிறார்கள் ஓவியர்கள். அந்தளவு ஆக்ரோஷத்தை இரு சண்டைகளிலும் சம்பவங்களிலும் பார்க்கலாம். இரண்டாவது சம்பவத்தில், நாயகன், டேங் செரியாங்கை காப்பாற்ற முயல்வான். ஆனால் அவள் அதை ஏற்காமல் குறுக்கே புகுந்து காயம்பட்டுவிடுவாள். உண்மையில் அவள் வராதபோது , நாயகன் வேகமாக கொல்லப்பட்டிருப்பான் என்பதே உண்மை. இருவருக்குமான உறவு சிறிது சிக்கலானதுதான். 


அசுரகுல ஆன்மா என்றாலும் கூட தாவோயிச பள்ளி மாணவன் என்ற முறையில் பிறருக்காக தன்னை இழப்பது என்பதை டேங் இனக்குழுவின் இளவரசி செரியாங்கிற்காக செய்வான் நாயகன். பொதுவாக தாவோயிச பள்ளி மாணவர்கள் பெண், மது, இறைச்சி ஆகியவற்றை தொடாத சந்நியாசிகள். ஆனால், நாயகன் தொடக்கம் முதலே அப்படியெல்லாம் இருக்கவேண்டியதில்லை என தனது குரு, சீடர்கள் சுங்வூ, சுங்சென் ஆகியோருக்கு அனைத்தையும் பழக்குவான். அதாவது, இறைச்சி, மது. அவனுக்கு தனது அசுர இனக்குழுவைத் தவிர பிறர் ஊழல்வாதிகளாக இருக்கவேண்டும் என்பதுதான் எண்ணம். 


அதேசமயம் முந்தைய பிறவியில் இருந்தது போல அந்தளவு கறாராக நாயகன் இருப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு சுங்வூ, சுங்சென் ஆகிய சீடர்களாக உள்ளார்கள். அசுரவெறி கொல்லும்போதெல்லாம் அவர்கள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். இதெல்லாம் தாண்டி அவனது வுடாங் இனக்குழுவே பெருமைப்படுமாறு வெடிமருந்து கடத்தல்காரர்களை, அராஜக ஆட்கள் மூவரைப் பிடித்து அரசுக்கு உதவுவான். இதெல்லாம் வுடாங் இனக்குழு தலைவர்களுக்கு தாம் இழந்த பெருமையை மீட்கிறோம் என்ற பெருமையைத் தருகிறது. அடையாளமே இல்லாமல் இருந்த வுடாங் மெல்ல எழுச்சி பெறத் தொடங்குகிறது. நாயகன் மெல்ல பல்வேறு இடங்களில் பிரபலமடைகிறான். 


உலக மக்களுக்கு தாவோயிச மாணவர்கள் இறைச்சி சாப்பிடமாட்டார்கள். மென்மையாக பேசுவார்கள் என்ற அபிப்பிராயம் இருக்கும். ஆனால் நாயகன் பேசும் முதல் வார்த்தையே உதைப்பதற்குள் ஓடிவிடு என்பதுதான். இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள்,லொள்ளு பேசியவர்கள்  அடிபட்டு கீழே விழுந்து கிடப்பார்கள். 


பண்டிட் எனும் கொள்ளைக் குற்றவாளிகளை முகத்திலேயே குத்தி, கை, கால்களை உடைத்து வீழ்த்துவது நாயகனுக்கு பிடித்தவேலை. இதைப் பார்த்து முதலில் சுங்வூ, சுங்சென் பீதியானாலும் மெல்ல அவர்களும் குருவின் வழிக்கு வருகிறார்கள். கொள்ளையர்கள்தானே, அவர்களை அடித்து உதைப்பதில் என்ன தவறு என வன்முறைக்கு மாறுகிறார்கள். அடி உதை எல்லாமே தப்பான ஆட்களுக்குத்தான். 


அசுரகுலத்தின்தலைவராக எண்பது ஆண்டுகள் வாழ்ந்த காரணத்தால் நாயகன் இருபதுவயது என்றாலும் கூட மனிதர்களை எளிதாக எடைபோடும் புத்தி இருக்கும். எனவே, பிச்சைக்கார இனக்குழு தலைவர், ஜெகல் இனக்குழுவினரின் செயல்கள் என அனைத்தையுமே நாயகன் அறிந்து அவர்களோடு மோதுவான். சில இடங்களில் கத்தி, சில இடங்களில் சாதுரிய புத்தி. 


மொத்தம் மூன்று சீசன்கள். 118 அத்தியாயங்கள். அனைத்துமே வேகமாக வாசிக்கலாம். சுவாரசியமாக இருக்கிறது. சிறப்பான கதை. நல்ல தரமான ஓவியங்கள் என தேடுபவர்களுக்கு நல்லகதை. 


கோமாளிமேடை டீம் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்