பத்தாவது ஆண்டில் கோமாளிமேடை - தொடரும் பயணம்!

 











பத்தாவது ஆண்டில் கோமாளிமேடை.... 



இந்த வலைப்பூவை இத்தனை ஆண்டுகள் நடத்த முடியும் என யார் நினைத்திருக்க முடியும்? எங்களுக்கே அந்த நம்பிக்கை இல்லை. என்ன எழுதுவது, எப்படி இயங்குவது, யாருக்கு என்ன தெரியும் என நிறைய கேள்விகள் இருந்தன. தொடக்க காலத்தில் எழுதிய கட்டுரைகளிலும் கூட இதுபோன்ற தடுமாற்றங்கள் தென்பட்டிருக்கலாம். கோமாளிமேடையின் ட்ரங்குப்பெட்டியில் இதற்கான சான்றுகள் உண்டு என நம்புகிறோம். 


அன்பரசு என்ற ஒருவரின் சிந்தனையில்தான் கோமாளிமேடை வலைப்பூ உருவானது. அதுதான் அடித்தளம். அதன் அடிப்படையில்தான் ஆராபிரஸ் இ நூல் பதிப்பகம் கூட பின்னாளில் உருவானது. இந்த பத்து ஆண்டுகளை திரும்பி பார்ப்பது என்பது கடினமாகவே இருக்கிறது. ஏனெனில் பாதை அந்தளவு எளிமையாக இல்லை. சந்தித்த மனிதர்களும், அவர்களுடனான அனுபவங்களும் கூட மகிழ்ச்சி கொள்ளத்தக்கவை அல்ல. ஆனால் , நகை முரணாக அவைதான் கோமாளிமேடையில் எழுதிய பல்வேறு கட்டுரைகளுக்காக அடித்தளமாக அமைந்தது. 


பெரும்பாலான நேரங்களில் எழுதிய எழுத்துகள் மட்டுமே மனதளவில் பெரிய ஆறுதலாக இருந்தது. தொடக்க காலத்தில் கணியம் சீனிவாசன் அவர்கள், அன்பரசு எழுதிய  மொழிபெயர்ப்பு நூலை தனது ஃப்ரீதமிழ் இபுக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அது கோமாளிமேடை குழுவுக்கே பெரிய நம்பிக்கையாக மாறியது. அதன்பிறகு, அந்த தளத்தில் கோமாளிமேடை/ ஆரா பிரஸ்ஸின் நிறைய நூல்கள் வெளிவந்தன. இப்படி கூறுவதால் நாங்கள் புகழ்பெற்ற எழுத்தாளர் ஏற்காடு இளங்கோவிற்கு போட்டியாளர் என்பதல்ல. எழுத்துகளை பாரபட்சம் பார்க்காமல் வெளியிடக்கூடிய இபுக் தளங்கள் அன்று குறைவு. அவ்வளவு ஏன்? அன்பரசு சூரியன் பதிப்பகத்திற்கு உதவி ஆசிரியராக இருந்தபோது அவரின் பெயரைக் கூட கல் பப்ளிகேஷன்  நிறுவனம், தனது நூலில் பிரசுரிக்க மறுத்துவிட்டது. அதற்கு ஆசிரியர் திரு. கந்தன் அவர்களின் மகத்தான செல்வாக்கும் ஒரு காரணம்.

இணையத்தில் இப்படியான பாகுபாடுகளும் வஞ்சங்களும் சற்று குறைவு. நிறைய தேர்வுகள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். 


சூரியன் பதிப்பகம் நஷ்டத்தில் ஓடவில்லை. அன்றைய கால லாப அளவு ஆண்டுக்கு ஐந்து லட்சங்களுக்கும் மேல்.  ஐம்பது நூல்களுக்கும் மேல் சீர்திருத்திய மனிதருக்கு, மூன்று ஆண்டுகள முடிவில் போனஸ் என ஐநூறு ரூபாயைக் கொடுத்தார்கள். இதெல்லாம் நாங்களாக அன்பரசிடம் கேட்டு தெரிந்து வருந்தியதுதான். அவர் அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இங்கு திறமையை விட சிபாரிசும், நாம் யாருக்கெல்லாம் தெரிந்தவர்களாக இருக்கிறோம் என்பதும்தானே முக்கியமாக இருக்கிறது?  அன்பரசு முத்தாரத்தில் எழுதிய கட்டுரைகளை இதழ் அச்சான பிறகு வலைப்பூவிற்கு வழங்கினார். அதுவும் கூட சூரியன் பதிப்பகத்தில் பிரசுர வாய்ப்பு இல்லாமல் போனதுதான் என பின்னர் அறிந்தோம். பத்திரிகை ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகளை வழங்குகிறார்கள். பின்னர், அன்பரசு தனது தொடர்களை  பிரதிலிபி தமிழ் தளத்தில் பதிப்பித்தார். 


 கோமாளிமேடை, ஆரா பிரஸ் என்பது ஒரு பிராண்ட். ஒரு குறிப்பிட்ட மனிதரின் சொத்துகள் அல்ல. இதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். 


கோமாளிமேடையில் கல்வி, இயற்கை, உளவியல், உறவுகள், வினோதங்கள், செய்திகள், பொருளாதாரம், வேளாண்மை என பல்வேறு விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. குழுவினரின் ஓய்வு நேரங்களில்தான் கட்டுரைகள் எழுதப்பட்டன.


 எல்லோருக்கும் தகவல்தொடர்பு துறையினரைப் போல சம்பளம் கிடைத்துவிடாது அல்லவா? வலைப்பூவில் விளம்பரம் வெளியிட முயற்சி செய்தாலும், அது கட்டுரைகளின் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பது போல தோன்றியது. கூகுளின் விதிமுறைகள் அப்படியானவை. எனவே, அந்த முயற்சி, முயன்ற சிலமுறைகளோடு முடிந்துவிட்டது. அத்தோடு சரி. எழுத்தை எழுதுபவனுக்கு ஏதேனும் வேண்டுமே என்றுதான் கட்டுரைகளை தொகுத்து நூலாக்கி அமேஸானில் வெளியிடும் முயற்சி தொடங்கியது. ஆரா பிரஸ் இப்படித்தான் உருவானது. நூலை கொடுத்துவிட்டால் அதை அவர்கள் பார்த்து திருத்தி வெளியிடுவார்கள். இதில் கோமாளிமேடையின் பங்கு கருத்துகளின் தொகுப்புதான். வேறொன்றுமில்லை. 



கோமாளிமேடையில் உள்ளவை அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை, வெறும் நாட்குறிப்பு என எழுத்தாளர் பாலகிருஷ்ணன், கணியம் சீனிவாசன் ஆகியோர் தங்கள் விமர்சனங்களை கூறினர்.  குறைந்தபட்சம், இந்தளவு வெளிப்படையாக கருத்துகளை கூறவும் நேர்மை, துணிச்சல் வேண்டும்தானே?. மற்றபடி, கோமாளிமேடையின் அறிமுக குறிப்பில் எழுதியிருப்பது போல இது ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரைகளுக்கான தளம். பாகுபாடு இல்லாமல் நிறைய விஷயங்கள் இங்கு பகிரப்படும். விருப்பம் இருப்பவர்கள் வாசியுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லையா? வேறு தளங்களுக்கு சென்று தேடுங்கள். ஒன்றும் குடி முழுகிவிடாது. 


உலக வாழ்க்கையில் நமக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. உங்களை சுற்றி உள்ளவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வருந்தி பாரம் சுமந்து நட்பை, உறவை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை. நேர்மையான கருத்துகளை சொல்லும் இரண்டு மூன்று நண்பர்கள் இருந்தால் போதும். எங்கள் குழு கூறும் கருத்தில் அறம் பிறழாமல் இருந்தால் போதும் என்றே கருதுகிறது. காலம் மாறலாம். அடிப்படையான கொள்கை மாறக்கூடாது என்பதை மனதில் கொண்டுள்ளோம்.


தொடங்கி பத்தாண்டுகளைத் தொட்டும் கோமாளிமேடைக்கு பெரிய விமர்சனங்கள் ஏதும் வந்தது இல்லை. முன்னொருமுறை வாசகர் முத்து காமிக்ஸ் பற்றி கேள்வி கேட்டார். நூல் எங்கே கிடைக்கும் என்றார். அடுத்து, இன்னொரு வாசகர், வலைப்பூவில் உள்ள கட்டுரைகளை எனது தளத்தில் எடுத்து பயன்படுத்தலாமா என்றார். இதற்கெல்லாம் குழுவினர் அவ்வப்போது பதில் அளிப்பது உண்டு. 


அண்மைய மாதங்களில், வலைப்பூவில் சிலர் வினோதமாக கோடிங்குகளை பயன்படுத்தினர். இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை சில நாட்களில் இருபதாயிரம் என்றெல்லாம் சென்றது. பொதுவாக தினசரி வாசகர்களின் எண்ணிக்கை ஐம்பத்தி்ற்குள் இருக்கும். மாதம் என கணக்கிட்டால் இரண்டாயிரம் பேர் என கூறலாம். 


கோமாளிமேடையில் கட்டுரைகள் இலவசம்தான். விளம்பரங்கள் கிடையாது. எனவே,சில கோடிங் வல்லுநர்கள் செய்யும் மாய மந்திரங்களைப் பற்றி எந்த கவலையுமில்லை. நீங்கள் உங்கள் பணியைச் செய்யுங்கள். நாங்கள் எங்கள் பணியைச் செய்கிறோம் என இயங்குகிறோம்.  உண்மையான வாசிக்கும் வேட்கை கொண்ட ஒருவர், கட்டுரைகளை படித்து அதை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்தினால் கூட எங்கள் குழுவினருக்கு மகிழ்ச்சிதான். தளத்தில் உள்ள கட்டுரைகளை இலவசமாக வாசிக்கலாம். அவற்றை தொகுத்து நூலாக்கி வெளியிடுவதை நீங்கள் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கலாம். இந்த முறையில்தான் நாங்கள் இயங்குகிறோம். 


தொடக்கத்தில் ஃப்ரீதமிழ் இபுக்ஸில் வெளியிடப்பட்ட  நூல்கள் இலவசம். ஆனால் அதன் பெரிய பாதகம், இலவசம் என்றால் நூலில் சாரமிருக்காது என வாசகர்கள் நம்புவதுதான். அப்படியாயினும் பிரதிலிபி தமிழ், ஃப்ரீதமிழ் இபுக்ஸ், ஆர்ச்சீவ்.ஆர்க் ஆகிய தளங்களில் கோமாளிமேடை நூல்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன. அவற்றை வாசகர்கள் வாசிக்கலாம். நல்ல நூலை வாசகர்கள் தேடித்தான் வாசிக்கவேண்டும். அதற்கான குறைந்தபட்ச மரியாதைதான் காசு கொடுத்து வாங்குவது என்பது. எனவே, இந்த அடிப்படையில் கோமாளிமேடையில் வந்த கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டு, ஆரா பிரஸ் நிறுவனம் மூலம் செம்மை செய்யப்பட்டது. இ நூலாக விற்பனைக்கு வைக்கப்பட்டது. 


எதிர்காலத்தில் பப்ளிக் டொமைன் உரிமம் பெற்ற நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு நூலாக்கம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. இதன்மூலம் காப்புரிமை பிரச்னைகள் இருக்காது. பதிப்பகத்தின் செயல்பாடும் வெளிப்படையானதாக, சட்டப் பிரச்னைகளற்றதாக மாறும் என நம்புகிறோம்.  


எழுத்துக்கு மதிப்பில்லை. வீடியோக்கள்தான் புகழ்பெறுகின்றன. ஆடியோ பேச்சுகளை மக்கள் கேட்கிறார்கள். இதெல்லாம் ஒருவகையில் உண்மைதான். மறுக்கவில்லை. எங்களால் முடிந்தளவுக்கு, எழுதுபவர்களுக்கு எழுத்து மகிழ்ச்சி தரும்வரை கோமாளிமேடை வலைப்பூ இயங்கும். எதிர்காலத்தை யாரும் கணிக்க முடியாது. ஏறத்தாழ 2014ஆம் ஆண்டு கோமாளிமேடை தொடங்கியபோது, பெரிய லட்சியம் ஏதுமில்லை. பத்தாம் ஆண்டு தொடங்கவிருக்கிறது. இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று துல்லியமாக தெரிய வந்திருக்கிறது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. ஆற்றின் போக்கில் இலை மிதப்பது போல பயணித்து வருகிறோம். 


இந்த வலைப்பூவுக்கு வந்து வாசிப்பவர்கள், மின்னஞ்சல் மூலம் கட்டுரைகளைப் பெற்று படிப்பவர்கள், ஆரா பிரஸ் வெளியிடும் நூல்களை வாசிப்பவர்கள் என அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! 


கோமாளிமேடை டீம் 


நன்றிக்குரியோர்


இரா முருகானந்தம்

கணியம் சீனிவாசன்

கவிஞர் சிவராஜ்

கே என் சிவராமன்

புலியூர் முருகேசன்

பாலகிருஷ்ண மேனன்

அர்ஷத் ஹக்கீம்

காந்திராமன்

வினோத்

நோயல் கார்க்கி

மீகா மைக்கேல் 

சாந்தி

டங்கா பாலமுருகன

கார்ட்டூன் கதிர்

காம்ரேட் கதிரவன்

கவிஞர் இளங்கோ

பேராச்சி கண்ணன்

த சக்திவேல்



ஜிஃப், புகைப்படம் - 

ஃபிளாட்டிகான்.காம்

ஃப்ரீபிக்.காம்



























 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்