நவதாராளவாத உலகில் மக்கள் மீது செலுத்தப்படும் கண்காணிப்பு அரசியல்!

 










சைக்கோ பாலிடிக்ஸ் 

பியூங் சுல் ஹான் 

வெர்சோ

தத்துவ நூல்


ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தத்துவ நூல். இதை எழுதியுள்ள பியூங் சுல் ஹான், தத்துவத்தில் புகழ்பெற்றவர். இவரைப் பற்றி, இவரது நூல்கள் பற்றி இலக்கிய இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பக்க அளவில் நூல் சிறியதுதான். ஆனால் கூறும் விஷயங்கள் சற்று அடர்த்தியானவை. 


அவர் தனது பேச்சில் கூறுவது போலவே பல்வேறு வார்த்தைகளை  மட்டுமல்ல முழு நூலிலுள்ள அனைத்து அடிக்குறிப்பிட்டு வைத்துக்கொண்டு புரிந்துகொள்ளவேண்டும். அந்தளவு அடர்த்தியான பொருளை விளக்க முயலும் நூல்தான் இது. 


நூலில் பிக் பிரதர், பிக் டேட்டா, ஜார்ஜ் ஆர்வெல்லின் நூலிலுள்ள பல்வேறு பாத்திரங்கள், பிக் பிஸினஸ் என நிறைய எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகின்றன. மக்கள் மீது கேமராக்களின் கண்காணிப்பு இருக்கிறது. ஆனால் அது 1984 நாவலில் வரும்படியான வற்புறுத்தலாக இல்லை. நட்புரீதியான தன்மையில் கண்காணிப்பும், மக்களை வழிக்கு கொண்டு வரும் செயல்களையும் அரசு செய்து வருகிறது என ஆசிரியர் கூறுகிறார். ஒருவரை அரசு, சமகால தொழில்நுட்பங்கள் வழியாக கண்காணிக்கிறது. அரசுக்கு எதிராக அதிகாரத்திற்கு எதிராக போராட முயன்றால் தண்டனையும் தொழில்நுட்ப வழியாக வழங்கப்படுகிறது. இதை 1984 நாவலில் உள்ள பல்வேறு உருவகங்கள் மூலம் மீள எடுத்துக்காட்டுகிறார். உண்மையில் அந்த நாவலில் உள்ள அனைத்து விஷயங்கும் இன்று நாடுகளில் நடக்க தொடங்கிவிட்டன. ஆனால் அவை நட்புரீதியான இணக்கம், இசைவுடன் மெல்ல நடத்தப்படுகிறது. இந்த நூலை படிக்கும்போது வலதுசாரி கட்சிகள், சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு காசு கொடுத்து தமக்கேற்ப அல்காரிதத்தை வளைத்த சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. 


நீட்ஷே, ஹெகல் என பல்வேறு தத்துவ அறிஞர்களின் நூல்கள், கூறிய கருத்துகள் நூலில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நூலை படிப்பவர்களுக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால் அதை அவர்கள் நூலின் பின்புறத்திலுள்ள மேற்கோள் நூல்கள் பட்டியலில் உள்ள நூல்களைப் படித்து தெளியலாம். 


அமெரிக்காவில் உள்ள தகவல்களை சேகரிக்கும் நிறுவனம் ஒன்று, பெற்ற தகவல்களை ஒருவர் செலவழிக்கும் வரம்பு பொறுத்து தரம் பிரித்து அதை வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது என்ற தகவலை வாசிக்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தளவில் அரசே, ஆதார் தகவல்களை வணிக நிறுவனங்களுக்கு கசியவிடுகிறது. இரண்டுக்குமான வேறுபாட்டை நாமே புரிந்துகொள்ளவேண்டியதுதான். அதாவது பிக் டேட்டா என கூறப்படும் தகவல்கள் அனைத்துமே பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன என்கிறார் நூலாசிரியர் பியூங். இந்த வகையில் பிக் டேட்டாவும் பிக் பிஸினஸும் ஒன்றாக கைகோக்கிறது. இதில் விலைபொருளாக ஒன்றும் தெரியாமல் விற்கப்படுவது மக்கள்தான். 


இந்த வகையில்தான் உளவியல் ரீதியாக அரசியல் கட்டமைக்கப்படுகிறது. மக்கள் தாம் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற வலையில் சிக்கிக்கொண்டதே தெரியாமல் இயங்கி வருகிறார்கள். நூலில், தொழில்நுட்பம், வணிகம், அரசியல் , அதிகாரம் ஆகியவை எப்படி ஒன்றோடொன்று இணைந்து இயங்குகின்றன என்பதை ஆசிரியர் விளக்குகிறார். இதையெல்லாம் தாண்டியும் நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றை நூலைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். நூல் எளிமையாகவே உள்ளது. தொடக்கத்தில் வரும் சில வார்த்தைகள் குழப்பமாக உள்ளன. மற்றபடி, அர்த்தத்தை அறிந்துகொண்டால் புரிந்துகொள்ள எளிய நூல்தான் இது.  


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்