2015ஆம் ஆண்டு சூழல் ஒப்பந்தம் மீறப்பட்டால் என்ன விளைவுகளை சந்திக்க நேரும்?.....

 







2015ஆம் ஆண்டு பாரிஸ் சூழல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்குப் பிறகு எட்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 1.5 டிகிரி செல்சியஸ் என வரையறை செய்துகொண்டு நாடுகள் முயற்சிகளை செய்தன. ஆனால், காலப்போக்கில் பெருநிறுவனங்கள் கார்பன் வெளியீடு பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வருமானம் எந்தளவு பெருகியுள்ளது. பங்குச்சந்தையில் பங்கு விலை அதிகரித்துள்ளது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். அரசும் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. 


திரைப்படத்தின் வருமானம் என்பதைவிட அதைப்பற்றிய கருத்தியல் ரீதியான விமர்சனமே முக்கியம். ஆனால் இன்று மோசமான படம் கூட வருமான சாதனை செய்கிறது. அதை வைத்தே படத்தின் கருத்து சரியில்லை என்று கூறுபவர்கள் மீது வழக்கு தொடங்குகிறார்கள். அவர்களின் பதிவுகளை நீக்க முயல்கிறார்கள். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தபிறகே, மாசுபாடு, கார்பன் வெளியீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தலைவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவருகிறார்கள். போராளிகளை சிறையில் அடைத்து வருகிறார்கள். 


மாசுபாடு காரணமாக தீவு நாடுகள் ஏற்கெனவே நீரில் முழுகத் தொடங்கிவிட்டன. கச்சா எண்ணெய் எடுக்கும் நிறுவனங்கள் உலகமெங்கும் தங்களின் செயல்பாட்டை விரிவுபடுத்த தொடங்கியுள்ளன. இதன் விளைவாக சூழல் மாசுபாடு இன்னும் மோசமாகும் 2023ஆம் ஆண்டில் முதல் பத்து மாதங்களில் 1.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தது. எனவே, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது எட்டமுடியாத இலக்கு அல்ல. 


உணவு,நீர் பிரச்னைகள் 


வெப்பமயமாதல் காரணமாக பஞ்சம், புயல், வெள்ளம் ஆகியவை அதிகளவு ஏற்படும். ஐபிசிசி அமைப்பு, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மனிதர்களின் தலையீடின்றி வெப்பம் அதிகரிக்கும் என கூறியுள்ளது. எந்தளவு என்றால் 1.5 டிகிரி என்றால் 4.1 மடங்கு, 2 டிகிரி என்றால் 5.6 மடங்கு அதிகமாக இருக்கும். 


வெப்பமயமாதலில் அதிகம் பாதிக்கப்படுவதும், இகழப்படுவதும் வளர்ந்து வரும்நாடுகளைச் சேர்ந்த ஏழை மக்கள்தான். இவர்களுக்கு செய்யும் மருத்துவ சிகிச்சைகளும் கூட பற்றாக்குறையாகவே இருக்கிறது. எனவே, மாசுபாட்டால் இறந்தால் கூட அதை வேறு ஒரு வியாதி என்று அடையாளப்படுத்தி தவறுகளை அரசு மறைத்துவிடுகிறது. வெப்பமயமாதல் காரணமாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தால் கூட ஆப்பிரிக்காவில் உள்ள மக்களில் ஏழு மில்லியன் பேர் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க தொடங்கிவிடுவார்கள். தெற்கு ஆப்பிரிக்காவில் ஏற்படும் பஞ்ச பாதிப்பு 30 சதவீதமாகவும், பயிர் விளைச்சல் பாதிப்பு 40-50 சதவீதமாகவும் உள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக மக்கள் இடம்பெயர்வும் நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. 


காடு

வெப்பம் இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், 18 சதவீத பூச்சிகள், 16 சதவீத தாவரங்கள், 8 சதவீத இருவாழ்விகள் ஆகியவற்றின் வாழிடம் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. பருவ மழைக்காடுகளில் வேகமாக ஈரப்பதம் குறைந்துவிடும். அங்கும் வெப்பம் மூன்று மடங்கு அதிகரிக்கும். அமேசான் காடுகளில் பஞ்சம் தொடங்கினால் ஆறுகள் வற்றி அதிலுள்ள மீன்கள் டால்பின்கள் அழியத் தொடங்கும். அதோடு காட்டுத்தீ அபாயமும் கூடும். 


கடல்

கடலில் அமிலத்தன்மை அதிகரித்து வருகிறது. கூடவே அதில் உள்ள பிராணவாயுவின் அளவும் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, அதில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அடுத்து இதை நம்பியுள்ள மனிதர்கள் வேலைவாய்ப்பை இன்றி வருமானத்தை இழப்பார்கள். 


பவளப்பாறைகள் வெப்பநிலைக்கு ஏற்ப தங்கள் செயல்பாட்டை மாற்றிக்கொள்பவை. கரீபியன் கடல், இந்தியப் பெருங்கடலின் மேற்குப்பகுதியில் பவளப்பாறைகள் அதிகம் அழிவைச் சந்திக்கின்றன. பத்து முதல் முப்பது சதவீதம் பவளப்பாறைகள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெப்பம் கூடிக்கொண்டே வந்தால், ஒன்று முதல் பத்து சதவீதம் பவளப்பாறைகள் மட்டுமே உயிர்பிழைக்கும் நிலை உள்ளது. 


அண்டார்டிகாவில் பனிப்பாறை உருகினால் நமக்கென்ன என நினைப்போம். ஆனால் நமது வாழ்க்கை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படு்ம். கடல் நீர் மட்டம் உயர்ந்து கடலை ஒட்டிய நகரங்களை, தீவுகளை மூழ்கடிக்கும். இதன் இன்னொரு அர்த்தம், நிலம் முழுக்க கடலால் சூழப்படும். வேளாண்மை நிலங்கள் முழுக்க அழியும். நிலத்தடி நீரிலும் கடல்நீர் உள்ளே வருவதால், குடிக்க குடிநீரே இருக்காது. புயல் காலங்களில் வெள்ள அபாயம் கூடும். 


ஜொனாதன் வாட்ஸ்

கார்டியன் வீக்லி

cartoonstock

கருத்துகள்