பாஸ்வேர்டால் பணயக் கைதியாகும் வாழ்க்கை

 










பாஸ்வேர்ட்டால் வதைக்கப்படும் வாழ்க்கை 


ஒவ்வொருமுறை விண்டோஸ் ஓஎஸ்ஸை எஸ் ஆர் எலக்ட்ரிகலுக்கு எடுத்துச்செல்லும்போதும் நான் மறந்துவிடும் விஷயம் ஒன்றுண்டு. அதுதான் பாஸ்வேர்ட். விண்டோஸ் கணினியில் இணையத்தில் இணைத்தால் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டிற்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. பிறகு, கணினிக்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. இதை பதிவு செய்து மொபைலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிந்து கணினியை இயக்குவதற்குள் வாயில் நுரைதள்ளிவிடும். அந்த நேர பதட்டத்தில் பாஸ்வேர்டுகள் நினைவுக்கு வந்து தொலைவதில்லை என்பதுதான் தனித்துயராக மாறுகிறது. கணினி பழுதுபார்க்கும் அண்ணனோ, பாஸ்வேர்டை இந்த முறையும் மறந்துவிட்டாய்தானே என கிண்டலாக பார்ப்பது மாறவே இல்லை. இதன் பிரச்னைகளைப் பார்ப்போம். 


லினக்ஸ் ஓஎஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள் இயங்குவதே பாஸ்வேர்டில்தான். அதை வைத்துத்தான் டெர்மினலை இயக்க முடியும். மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யமுடியும். ஜினோமில் உங்கள் கணக்கு தொடங்க, கூகுள் கணக்கை இணைத்தால் போதுமானது. அப்போதுதான் இதற்கு தனியாக பாஸ்வேர்ட் கேட்கவில்லையே என மனம் நிம்மதி அடைந்தது. இது கொஞ்சம் ஆறுதலான ஓஎஸ். 


இணையத்தில் இயங்க கூகுள் மெயில் கணக்கு அவசியம். அதை வைத்து பல்வேறு வலைத்தளங்களுக்கு செல்லலாம். நிறைய வலைத்தளங்கள் மின்னஞ்சல் கடந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என மாறிவிட்டன. அந்த கணக்குகளைக் கேட்கின்றன. இதை கொடுத்தால்தான் நீங்கள் உள்ளே செல்ல முடியும். ஒருவேளை ஸ்மார்ட்போன் தொலைந்து இமெயில் பாஸ்வேர்டையும் மறந்துவிட்டால், உங்களை இந்த உலகில் காப்பாற்ற அந்த மாதவப்பெருமாளால் கூட முடியாது. தனித்தீவில் மாட்டிக்கொண்ட டாம் ஹேங்க்ஸ் போல மாறிவிடுவீர்கள். அதாவது டிஜிட்டல் அகதி.


அந்தளவு நாம் உருவாக்கிய பாஸ்வேர்டுகள்,நம்மை கைதிகள் போல பிடித்து வைத்துள்ளன. சொந்த வாழ்க்கையில் ஒருவர் எத்தனை பாஸ்வேர்டுகளை மனதில் வைத்துக்கொள்வது என்றே புரியாது. அந்தளவு டிஜிட்டல் உலகம் சிக்கலாக உள்ளது. வங்கி கடன் அட்டைகள், வங்கியின் ஆன்லைன் கணக்கு , வங்கி ஆப்கள், தனியார் பணம் செலுத்தும் ஆப்கள் என இவற்றுக்கான பாஸ்வேர்டுகள் தனி. இவையெல்லாம் குறையாது. நீண்டுகொண்டே செல்பவை. அதிலும் பல்வேறு குறியீடுகள், எண்கள் கொண்ட பாஸ்வேர்டுகள் என்றால் துயரத்தின் தூரம் மிக அதிகம். 


இணையத்தில் பிரச்னைகளும் உண்டு. அதற்கான தீர்வுகளையும் கூட தருகிறார்கள். எது தீர்வென நாம்தான் தீர்மானிக்கவேண்டும். பாஸ்வேர்டுகளை பொதுவாக ப்ரௌசரில் சேமித்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கென பாஸ்வேர்ட் மேனேஜர் எனும் தனி மென்பொருள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் எளிதாக உடைக்கவேண்டுமென்றால் ஒருவர் உடைத்துவிடலாம். அந்தளவு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சி உள்ளது. உண்மையில் அவர்களும் கூட பாஸ்வேர்ட் மேனேஜர் வைத்துக்கொள்ளலாம் தவறில்லை. பெருநிறுவனங்கள் நடத்தும் ப்ரௌசர்கள் அனைத்தும் தகவல்களை திருடுபவைதான். எட்ஜ், குரோம் ஆகியவை இப்பணிகளை சிறப்பாக செய்கின்றன. ஆனால் கூட உங்கள் தனிப்பட்ட தகவல்களை விட்டுக்கொடுக்காமல் அவர்களது எந்தவொரு சேவையையும் தொடர முடியாது. 


கூகுளின் எந்த சேவையும் பயன்படுத்தாத தனிப்பட்ட, அலுவலக வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். தமிழ் ஹாரர் காமெடி படங்கள் போல கடுப்பாக இருக்கும். 

பாஸ்வேர்டுகள் மூலம் எல்லாம் நம் கையில் இருப்பது போல இருக்கிறது. அப்படித்தான் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் மனிதரா, எந்திரமா என்று கேட்கும் கேப்ட்சா கூட கடினமாக மாறிவருகிறது. 


வீட்டிலுள்ள பல்வேறு பொருட்கள் ஸ்மார்ட்டாக மாறிவருகிறது. இவற்றை எளிதாக அலெக்ஸாவோடு, கூகுள் அசிஸ்டெண்டோடு இணைத்துக்கொள்ளலாம். பார்த்தால் நாம் இதைக் கட்டுப்படுத்துவது போல தோன்றும். ஆனால் அவைதான் நம்மை இயக்குகின்றன. நம்மைப் பற்றிய தகவல்களை ஸ்மார்ட் எந்திரங்கள் சேமித்து தங்கள் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகின்றன. 

புதிய கருவிகளை இயக்குவதால், நம்மை நாம் கடவுள் போல நினைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் உண்மை அல்ல. எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இருப்பது போல தோன்றினாலும் எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் திரையில் பாஸ்வேர்ட் டைப் செய்யுங்கள் என்று செய்தி வரும்போதெல்லாம் நாம் அதிகாரம் கொண்டவர் போல உணர்வு உருவாகிறது. ஆனால் யோசித்துப் பார்த்தால், அது ஒரு அவமானகரமான நிகழ்ச்சியாகவே தோன்றுகிறது. 


பால் ஃபோர்ட்

வயர்ட் இதழ் 


மூலக்கட்டுரையை தழுவியது.



கார்ட்டூன்ஸ்டாக்

கருத்துகள்