நேசிக்கும் காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுக்க கொடுக்க முன்வரும் காதலன்!

 












சீகா ஃப்ரம் ஶ்ரீகாகுளம் 


இயக்குநர் - eshwar


அல்லரி நரேஷ், மஞ்சரி, ஷ்ரத்தா தாஸ், வேணு, எம்எஸ் நாராயணா


நரேஷ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு உடல் பலம் குறைவு என்றாலும் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் அதிகம். அதைப் பயன்படுத்தி கல்லூரியில் பெண் ஒருத்தியை வல்லுறவு செய்பவனை தடுக்கிறான். இப்படியானவன், அங்கு படிக்கும் பேரழகியான பெண்ணை பிளான் செய்து மடக்குகிறான். ஆனால் பிறகுதான் தெரிகிறது. அவளின் அப்பா ஊரிலேயே பெரிய ரௌடி என. உயிரு முக்கியம்ப்பா என முடிவெடுத்து காதலெல்லாம் வேண்டாம். உனக்கு உங்கப்பாவே நல்ல பையனா பார்ப்பாரு கட்டிக்கோ என சொல்லி ஜகா வாங்குகிறான். ஆண் காதலிப்பது பிரச்னையில்லை. அந்த ஆணை பெண் காதலிக்கத் தொடங்கினால்தானே கதை தாறுமாறாக ட்விஸ்ட் ஆகிறது. அதுதான் இங்கும் நடக்கிறது. அந்தப்பெண் கட்டினால் நரேஷைத்தான் காதலிப்பேன் என அடம் பிடிக்கிறாள். இறுதியாக நரேஷ் தனக்கு நிச்சயம் முடிந்து கல்யாணம் ஆகும்வரை ஊரில் வந்து இருந்தால் போதும். தான் அவனை விட்டுவிடுகிறேன் என கூறுகிறாள். அது எப்படியான பொறி என தெரியாமல் நரேஷ் அவளுடைய ஊரான கர்னூலுக்கு செல்கிறான். 


அங்கு என்ன நடந்தது, நரேஷூக்கும், மஞ்சரிக்கும் கல்யாணம் நடந்ததா, மஞ்சரியின் ரவுடி அப்பாவுக்கு இப்படி நடக்கும் கல்யாணத்தில் உள்ள லாபம் என்ன என்பதையெல்லாம் படம் நகைச்சுவையாக பேசுகிறது. 


ரிவர்ஸ் சைக்காலஜி போல நரேஷ், மஞ்சரியை காதலிக்க செய்யும் காட்சிகள் ரசிக்கும்படியே உள்ளன. மஞ்சரியின் சொந்த ஊருக்கு சென்றபிறகு கதை நகைச்சுவையும் சற்று நெகிழ்ச்சியுமாக மாறுகிறது. இரு ரவுடிகளை ஒற்றுமையாக இருக்கச்செய்து வேலையில் புரமோஷன், தன்னைவிட்டு தனியாக இருக்கும் மனைவியுடன் இணைந்து வாழ்வது என உதவி ஆய்வாளருக்கு நெருக்கடி இருக்கிறது. அதற்காகவே அவர் இரு ரவுடிகளின் பிள்ளைகளுக்கும் கல்யாணம் ரெடி செய்கிறார். ஆனால் அதில்தான் நரேஷின் காதல் மாட்டிக்கொள்கிறது. 


இன்னொரு பெண்ணுடன் மணமாகி அந்த பெண்ணுடன் முன்னாள் காதலி பற்றி பேசுவதாக வரும் காட்சி, சுவாரசியமாக எடுக்கப்பட்டுள்ளது. அதில்தான் நரேஷ் தன் மனதில் சைலஜா (மஞ்சரி) பற்றியுள்ள காதலை முதன்முதலாக வெளிப்படுத்துவார். ஷ்ரத்தா தாஸை விட்டுவிட்டோம் அல்லவா? மஞ்சரி நூடுல்ஸ் மண்டையோடு இருந்தாலும் அவருக்கு கவர்ச்சி அந்தளவு பொருத்தமாக இல்லை. எனவே, மஞ்சரியின் தங்கையா ஷ்ரத்தா வருகிறார். அவருடன் நரேஷ் செய்யும் கிளுகிளு காட்சிகளெல்லாம் ஆபாச தளத்தில் வரும் ட்ராமா போல உருவாக்கப்பட்டிருக்கிறது. பார்த்து ரசியுங்கள். அவ்வளவுதான். 


தீவிர வன்முறை எண்ணம் கொண்டவராக மணப்பெண்ணின் தந்தையின் அடியாளாக எம்எஸ் நாராயணா வருகிறார். போகும் இடத்தில் எல்லாம் வன்முறையை உருவாக்கி அதை பார்த்து ரசிப்பது, கிடைப்பவர்களை அடித்து உதைப்பதை செய்கிறார். கல்யாணத்தில் கூட தனது பாணியை பயன்படுத்த முனைவது சுவாரசியமாக உள்ளது. 


பெரிதாக முடிவைப் பற்றி கவலைப்படவேண்டியதில்லை. அதை நரேஷ் நகைச்சுவையாக பார்த்துக்கொள்வார் என இருக்கலாம். கதை அந்தப்போக்கில்தான் போகிறது. கிருஷ்ண பகவான் இறுதி காட்சியில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். 


கோமாளிமேடை டீம் 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்