ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு கொள்கை மீது சந்தேகப்பட்ட உளவியலாளர்!
உளவியல் உலகில் இரண்டு ஆளுமைகள் முக்கியமானவர்கள் ஒருவர் இவான் பாவ்லோவ், அடுத்து, சிக்மண்ட் ஃப்ராய்ட். இவர்களின் உளவியல் சிகிச்சை முறைகள் வேறுபட்டவை. சிக்மண்ட் ஃப்ராய்டின் முறைகள் நோயாளியை அடிப்படையாக கொண்டவை. இந்த முறையில் முறையாக ஆய்வுப்பூர்வ கருத்து சிந்தனை ஒன்றை உள்ளதாக கூறமுடியாது. நிரூபிக்கவும் முடியாது. இவான் பாவ்லோவின் முறைகளில் ஆய்வு நிரூபணம் உண்டு. தொடக்க கால உளவியலாளர்கள் கூறிய தத்துவம் சார்ந்த விளக்கங்களை பின்னாளில் வந்த உளவியலாளர்கள் ஏற்கவில்லை. காரணம், அவர்களுக்கு ஆய்வுப்பூர்வ காரணங்கள், விளக்கங்கள் தேவைப்பட்டன.
உளவியல் பல்வேறு வடிவங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றது. அதில் உளப்பகுப்பாய்வு, தன்னுணர்வற்ற நிலையை ஆராய்வது என்பது பொதுவான அம்சமாக இடம்பெற்றது. இதை கேள்வி கேட்டவர்களில் ஆரோன் பெக்கும் ஒருவர். 1953ஆம் ஆண்டு உளவியலாளராக படித்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது சோதனை உளவியல், மனதின் நிலைகளை ஆராயத் தொடங்கியது. இதை அறிவாற்றல் புரட்சி என உளவியல் வட்டாரத்தில் கூறினர். உளவியல் பகுப்பாய்வு படித்துவிட்டு பணிக்கு வந்தாலும் பின்னாளில் அதன் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகம் வந்துவிட்டது. அதை ஆராய்ந்து பார்க்க உண்மையான ஆதாரங்கள் ஏதுமில்லை. இந்த சிகிச்சை முறையில் சிலருக்கு குணமாகி, சிலருக்கு நிலை மோசமாகி, இன்னும் சிலருக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இப்படி நோயாளிகளின் நோய் அறிக்கைகளை வைத்து உளவியல் பகுப்பாய்வு முறையை கணிக்க முடியாது என ஆரோன் கருதினார். உளவியல் பகுப்பாய்வு முறை என்பது பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்தது என கருத்து கூறினார். இவரது வெளிப்படையாக பேசும் போக்கு அவருக்கு நிறைய விமர்சனங்களை எதிரிகளை பெற்றுத் தந்தது. அமெரிக்க உளவியல் சங்கத்தில் இருந்து கூட நீக்கப்பட்டார்.
ஆனால் அவை எதற்கும் பயப்படாமல் எதையும் சோதனை செய்து கண்டறிவேன் என உறுதியாக இருந்தார். அதே நம்பிக்கையுடன் சிகிச்சை முறையையும் கண்டுபிடித்து நோயாளிகளுக்கு வழங்கினார். ஒருவர் அவநம்பிக்கையுடன் உலகைப் பார்த்தால் அங்கு எந்த நல்ல விஷயங்களையும் பார்க்க முடியாது. அதாவது அவரது பார்வைக்கோணம் மாறினால் அவர் சந்திக்கும் சம்பவங்கள் மாறிவிடும். இதுதான் விஷயம். குவளையில் நீர் நிரப்பப்பட்டிருக்கிறது.அதைப் பார்த்து ஒருவர் அரைவாசி நிரம்பியிருக்கிறது என்று கூறுவார். இன்னும் சிலர், குவளை பாதி காலியாக இருக்கிறது என்பார்கள். இரண்டுமே உண்மைதான். ஆனால் இரண்டாவது வாதத்தில் சற்று எதிர்மறை தன்மை உள்ளது.
தனது சிகிச்சை முறையை தனது வெற்றியாக ஆரோன் கருதவில்லை. தன்னை உளவியல் பகுப்பாய்வின் குருவாக நிறுத்த முயன்ற பாராட்டுகளை ஏற்கவும் இல்லை. அவருக்கு முன்னரே ஆல்பெர்ட் எல்லிஸ், ஃப்ராய்டின் சிகிச்சை முறையை மறுத்து ரெப்ட் என்ற முறையை மாற்றாக உருவாக்கியிருந்தார். எல்லிஸ், தென் ஆப்பிரிக்க குண இயல்பு வல்லுநர்களான ஜோசப் வோல்பே, அர்னால்ட் ஏ லாசரஸ் ஆகியோரின் சிகிச்சை முறைகளையும் அறிந்திருந்தார். ஆரோன் உருவாக்கிய முறை, மேற்படி இவர்களின் சிகிச்சை, கொள்கை ஆகியவற்றின் கீழ்தான் உருவானது. எனவே அதை தனித்த சிந்தனை என்று கூற முடியாது.
ஆரோனின் சிகிச்சை முறை உளவியல் குறைபாடுகளான ஸிசோபெரெனியாக்கும் பிறவற்றுக்கும் கூட பயன்பட்டது. மன அழுத்த சிகிச்சையாகவும் உதவியது. பிடிஐ, பிஎஸ்எஸ், பிஏஐ என ஆரோன் உருவாக்கிய பல்வேறு சிகிச்சை முறைகள் இன்றளவும் உளவியல் துறையில் பயன்பாட்டில் உள்ளது.
ரோட் தீவில் பிறந்தவர். ரஷ்ய யூத பெற்றோருக்கு பிறந்தவர். சிறுவயதில் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட நோய் ஒன்றால் மனதில் பயம் உருவானது. அதை எதிர்கொள்ள மருத்துவராக விரும்பினார். 1946ஆம் ஆண்டு யேல் பல்கலையில் மருத்துவராக பட்டம் பெற்று ரோட் தீவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கினார். தனது பெயரில் சிகிச்சை மையம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். அவரது மையத்தை இப்போது அவரது மகளான ஜூடித் பெக் நடத்தி வருகிறார்.
முக்கிய படைப்புகள்
1972 depression causes and treatment
1975 cognitive therapy andemotional disorders
1980 depression clinical experimental theoretical
1999 prisoners of hate the cognition basis of anger hostility and violence
images pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக