ஒரே நேரத்தில் மூன்று இளம்பெண்களை காதலிக்கும் ரோமியோ!
ரோமியோ
மலையாளம்
திலீப்,விமலா ராமன், சம்யுக்தா,ஹனீபா
சாதி,மதம் மாறி மூன்று பெண்களை காதலிக்கும் ரோமியோ ஒருவரின் கதை. உண்மையில் வதந்தி நாளிதழில் வரும் செய்தியைப் போன்றதல்ல. இங்கு நாயகன் மனு கிருஷ்ணன், தனது வேலை, அதில் வரும் சம்பளத்தையே நம்பியிருக்கிறார். அதில் பிரச்னை வரும்போது, பெயர் மாற்றி, சாதி மாற்றிக்கொண்டு ஓரிடம் செல்கிறார். அங்கு வாழும் ஒரு அய்யங்கார் பெண்,சுப்பிரமணி என்ற பெயருடைய நாயகனை விரும்பத் தொடங்குகிறாள். ஏன் என்றால் அதற்கென அவளுக்கென சில காரணங்கள் உள்ளன. அவளுக்கென பார்த்த மாப்பிள்ளை குடிநோயாளி. சுப்பிரமணிதான் அவனுடைய பெயரும் கூட.
நாயகன், அய்யங்கார் பெண்ணிடம் வாய்ப்பாட்டு கற்கவும் கூட முயல்கிறான். இப்படி சில விஷயங்கள் ஒற்றுமையாக இருக்க அந்தப்பெண் நாயகனை காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் நாயகன் அவளை காதலிப்பதில்லை..
அடுத்து, டிவி நிகழ்ச்சி பாடகியின் அப்பாவிடம், வாங்கிய காசை அடைப்பதற்காக பாடகியை மணக்க முடிவெடுக்கிறார் மனுகிருஷ்ணன். ஆனால் இந்த சமாச்சாரம் அந்தளவு எளிதாக இல்லை. பாடகியின் அப்பா, நாயகன் மனுவை மதம் மாறச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார். இதனால் மானுவேல் என பெயர் மாற்றிக்கொண்டு கையில் சிலுவையை பச்சையும் குத்துகிறார். ஆனால், இந்த திருமணத்தை பாடகியின் அப்பாவே தடுத்து, மானுவேலை அவமானப்படுத்துகிறார்.
இதில் முக்கியமான திருப்பம், மனு கிருஷ்ணன் வேலையில் சேர்ந்திருப்பதே இந்து என்ற அடிப்படையில்தான். ஆனால் அவர் மதம் மாறியதால் மருத்துவமனையி்ல் நர்ஸ் வேலையும் பறிபோகிறது. இந்த நிலையில், அவரை அதே மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவரான பெண்ணும்,தோழியுமானவர் காதலிப்பதாக அறிகிறார். இந்த உண்மை மனு கிருஷ்ணனை பாதிக்கிறது. ஆனால் இந்த உண்மை தெரிவதற்குள்ளாகவே டிவி பாடகி, அய்யங்கார் பெண் என இருவரும் மானுவேல், சுப்பிரமணி என்று கூறிய நாயகனை பின்தொடர மணம்செய்ய முயல்கிறார்கள்
காதலியான மருத்துவரின் அப்பா, சிபிஐ அதிகாரி. வசதியானவர். எனவே அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மனுகிருஷ்ணனை சிறையில் தள்ள முயல்கிறார். இந்த முயற்சி வெற்றியானதா? மனு கிருஷ்ணன் மூன்று பேர்களி்ல் எந்த பெண்ணை தேர்ந்தெடுத்தார் என்பதே கதை.
நகைச்சுவைப்படம். அந்த நோக்கத்தில் மட்டும் படத்தைப் பாருங்கள். இல்லையெனில் படத்தை ரசிக்க முடியாது. மனு கிருஷ்ணன் நர்ஸ். அவனும் அங்கேயே வேலை செய்யும் பெண் மருத்துவரும் நண்பர்கள். அதேநேரம் அந்த பெண் மருத்துவருக்கு மனு மீது ஒருதலைக் காதல் இருக்கிறது. அதை எப்படி கூறுவது என தெரிவிக்காமல் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் டிவி பாடகி மீது நாயகனுக்கு காதல் இருப்பது வெட்டவெளிச்சமாகிறது. இதனால் பெண் மருத்துவர் மனமுடைந்து போகிறார். வேறு இடத்திற்கு பணி மாற்றம் கேட்டு செல்கிறார்.
நாயகனுக்கு திருமணம் செய்வதில் உள்ள பிரச்னை என்னவெனில், பணம்தான். அவரது அப்பா சினிமாவில் துக்கடா வேடம் போடுபவர். அம்மா, ரியாலிட்டி ஷோவில் நடுவர். அம்மா, நர்ஸ் மகன் ஆகியோரின் பணத்தில்தான் வீட்டு செலவுகளே செய்யப்படுகின்றன. இந்த சூழலில் பாடகியின் அப்பா, வசதி வாய்ந்தவர். அவர் தனது மகளை காசு கொடுத்து பாடல் போட்டியில் வெல்ல வைக்க நினைக்கிறார். இதைப் பயன்படுத்தி நாயகனின் அப்பா, ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக்கொள்கிறார். அதைக் கொடுத்து ஒரு சினிமாவில் ஒரு வேடத்தை தனக்கு சொந்தமாக்குகிறார். ஆனால் பாடல் போட்டியில் நாயகனுக்கு பிடித்த பாடகி தோற்றுப்போக, அவளின் அப்பா தான் கொடுத்த லஞ்சப் பணத்தை திரும்ப கேட்கிறார். இங்குதான் நாயகன் வம்பில் மாட்டிக்கொள்கிறார். பணத்தை கொடுக்காமல் இருக்க பாடகியை அவரே மணந்துகொள்வதாக சொல்கிறார். டௌரியில் பணத்தை கழித்துக்கொள்வதே திட்டம். ஆனால் செல்வாக்கும் பணமும் உள்ள பாடகியின் அப்பா, அவமானத்தில் கோபம் கொள்கிறார். ஆனால் வஞ்சம் வைத்து நாயகனை மானுவேலாக மதம் மாற்றவைத்து இறுதியில் மகளுக்கு மணமுடித்து தரமுடியாது என கூறி மறுத்து அவமானப்படுத்தி அனுப்புகிறார். மதம் மாறியதால் கோட்டாவில் கிடைத்த நர்ஸ் வேலையும் பறிபோகிறது.
அப்போதுதான் மனு கிருஷ்ணனின் நண்பன், அக்கிரகாரத்தில் நர்ஸ் வேலை இருக்கிறது. வயதானவரை பார்த்துக்கொள்ளவேண்டும். இனி உன்னோட பேரு பட்டாபிராமன் என்கிறான். காசு கிடைக்குமே என வேறுவழியின்றி மனு ஏற்கிறான். அங்கு சென்றால், வயதானவரிடம் தனது பெயர் சுப்பிரமணி என மாற்றிச் சொல்கிறான். வயதானவருக்கு உள்ள மகன் பெயர் சுப்பிரமணி. அவன் ஒரு குடிநோயாளி. அவனுக்கு பார்த்து வைத்த பெண் அருகிலேயே அம்மா, பாட்டியுடன் வாழ்கிறாள்.
அவளுக்கு புதிதாக வந்த மனு மீது ஒரு கண். காதல் என கொள்வோமே? குடிகாரனை மணப்பதை விட நமது சாதியைச் சேர்ந்த இவனை மணக்கலாமே என நினைக்கிறாள். இந்த காதல் என்பது, அவளது பாதுகாப்பு குறித்ததுதான். ஆனால் இந்த இடத்தில் நாயகனுக்கும் குடிகாரன் சுப்பிரமணிக்கும் நடக்கும் மோதலில் நாயகனின் மதம் தெரிய வருகிறது.அங்கிருந்து அடித்து உதைக்கப்படும்போது, பெண் மருத்துவர் அவனை காரில் வந்து காப்பாற்றுகிறாள். தனது காதலை வெளிப்படையாக கூறுகிறாள். நாயகன் மனுவும் அடடா, அருகிலிருந்து காதலித்தவளை கவனிக்கவில்லையே என வருந்துகிறான்.
இதே நேரத்தில் தன்னால் மனு பாதிக்கப்பட்டான். இறுதியாக தன்னை மணக்க மானுவேல் என பெயரைக் கூட மாற்றிக்கொண்டான் என பாடகி அனுதாபம் கொண்டு அவனை மணக்க முயல்கிறாள். தனது திருமணத்தை தடுத்து நிறுத்துகிறாள். மனுவின் அப்பாவுடன் கிளம்பி வருகிறாள்.
பெண் மருத்துவரின் அப்பா, அந்தஸ்து பார்ப்பவர். மகள் மருத்துவர். அவள் காதலிக்கும் பையன் நர்ஸ். இதை எப்படி ஏற்பது என கொந்தளிக்கிறார். தனது செல்வாக்கு மூலம் அவனைப் பிடித்து சித்திரவதை செய்ய நினைக்கிறார். உண்மையில் அவர் மனுவை ஏற்றாரா, அவனைக் காதலிக்கும் பிற பெண்களைப் பற்றி தெரிந்துகொண்டாரா என்பதை கலாட்டா காமெடியோடு கூறியிருக்கிறார்கள்.
படத்தில் ஹனீபா, திலீப், சுராஜ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். மூன்று பெண்களுக்குமே நடிப்பதற்கான இடம் குறைவு. பாடகி பாத்திரம் என்ன நினைக்கிறது என காட்சி மூலம் கூட அறிய முடியவில்லை. இது எழுத்தாகவே சரியாக எழுதப்படவில்லை. அடுத்து, அய்யங்கார் பெண். இறுதிக்காட்சியில், அவளை முன்னர் இரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயன்றவனுக்கு நாயகன் மனு மணம் செய்து வைக்கிறான். இது ஏற்புடையதாக இல்லை. அந்த பெண்ணின் தாய், பாட்டி கூட குடிகாரன் சுப்பிரமணி பலாத்காரம் செய்யும்போது அதை தடுப்பதில்லை. இது என்ன மாதிரியான மனநிலை என்று புரியவில்லை. திலீப், சுராஜ் காமெடிக்காக பார்க்கவேண்டிய படம்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக