சீரியல் கொலைகாரரான அப்பாவை போலீசில் பிடித்துக்கொடுத்த மகள்!

 








அப்பா, தொடர் கொலைகாரர். தன்னை வெளி உலகில் நல்லவராக காட்டிக்கொண்டு கொலைகளை மறைவாக செய்துவருகிறார். இதை மகள் ஏப்ரல் மெதுவாகத்தான் சந்தேகம் வந்து விசாரணை செய்து கண்டுபிடிக்கிறார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட ஐந்துபேர் கொல்லப்பட்டு விடுகிறார்கள். ஆனாலும் நீதியுணர்வும், குற்றவுணர்ச்சியும் அவரை துன்புறுத்த தானாகவே சென்று காவல்துறையில் தந்தை எட்வர்ட்ஸ் பற்றி புகார் கொடுக்கிறார். 


காவல்துறையும் முப்பது ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது. ஆனால் துப்பு கிடைக்கவில்லை. ஏப்ரல் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் எட்வர்ட்ஸை பிடித்து விசாரித்தனர். அவர் ஐந்து கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் சிறையில் இறந்துவிட்டார். 


இந்த கொலை வழக்கை சற்று விரிவாக பார்ப்போம். 


அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வாட்டர்டவுன் நகரம். அப்போது ஏப்ரலுக்கு ஏழு வயது இருக்கும். அவருக்குப் பிறகு நான்கு பிள்ளைகள் உண்டு. ஒருநாள் இரவில், அவரது அப்பா, சீக்கிரமாக கிளம்பவேண்டும் என ஏப்ரலை எழுப்புகிறார். கனசரக்கு வண்டி ஓட்டுநரான எட்வர்ட்ஸ், ஆண்டில் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை வேறு வேறு இடங்களுக்கு ஐந்து பிள்ளைகளுடன் இடம்பெயர்வது வழக்கம். ஆனால் இது ஏப்ரலுக்கு வித்தியாசமாக தோன்றியது. யாரேனும் காரணம் கேட்டால் வேலை விஷயம் என பதில் சொல்லுவார் அவரது அப்பா. ஏப்ரலுக்கு தான் படித்த பள்ளி, நண்பர்களை விட்டு வர மனமில்லை. ஆனாலும் அப்பா கிளம்ப சொல்லிவிட்டதால் வேறு வழியில்லை. தனது சகோதர சகோதரிகளுடன் கிளம்புகிறார். 


எட்வர்ட்ஸூக்கு வினோதமான பழக்கம் இருந்தது. உள்ளூரில் நடைபெறும் கொலை வழக்குகள் பற்றி நாளிதழில் வரும் செய்திகளை கிழித்து சேமித்து வந்தார். கொலை வழக்குகள் பற்றி காவல்துறைக்கும் சில தகவல்களை கொடுத்து வந்தார். அடிக்கடி வீட்டை காலி செய்து வேறு இடங்களுக்கு இடம்பெயரும்போது, ஏப்ரலுக்கு நாம் வாழும் இடங்களில் எல்லாம் கொலை நடந்துகொண்டே இருக்கிறது. பிணங்கள் விழுந்துகொண்டே இருக்கின்றன என்று நினைத்தார். அப்போதைய சூழலில் அவரால் எதையும் கண்டறியமுடியவில்லை. கொலைகள் நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரலுக்கு மணமாகி மூன்று பிள்ளைகள் பிறந்தனர். 


ஒருநாள் ஓஹியோவில் நடைபெற்ற கொலைகளைப் பற்றி இணையத்தில் பார்த்தார். அதைப்பற்றிய விவரங்களைத் தேடும்போதுதான் அவரது தந்தை எட்வர்ட்ஸ் பற்றிய சந்தேகம் பிறந்தது. 2009ஆம் ஆண்டு, கணினியில் சிறுவயதில் வாழ்ந்த இடங்களில் நடைபெற்ற உள்ளூர் கொலைகளைப் பற்றி தேடினார். அப்போதுதான் தான் வாழ்ந்த வாட்டர்டவுன் நகரத்தில் நடந்த இதுவரை தீர்க்கப்படாத கொலை வழக்குகளை கணினியில் தட்டி தேடினார். அதில் ஸ்வீட்ஹார்ட் மர்டர்ஸ் என இரு கொலைகள் இருந்தன. 1980ஆம் ஆண்டு திருமண நிச்சயத்திற்கு சென்ற பத்தொன்பது வயதான ஹேக், கெல்லி என இருவரும் வீடு திரும்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு மரங்களுக்கு இடையில் அழுகிய நிலையில் இரு பிணங்களாக கிடைத்தனர். இதில் ஹேக்கிற்கு முதுகிலும், மார்பிலும் கத்திக்குத்து காயம் இருந்தது. கெல்லி, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதோடு, கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். 


கொலை செய்யப்பட்டவர்கள் திருமண நிச்சயத்திற்கு சென்ற இடமான கான்கார்ட் ஹவுசில்தான் ஏப்ரலின் அப்பா எட்வர்ட்ஸ் வேலைசெய்து வந்தார். கொலை நடந்த வாரத்தில் அவரும், அவரது பிள்ளைகளும் அந்த நகரத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்திருந்தனர். எனவே ஏப்ரல் தனது அப்பாவின் நடத்தையையும், செயல்பாடுகளையும் கூறிய பொய்களையும் இணைத்துப் பார்த்து, அவர்தான் கொலைகளை செய்திருக்கவேண்டும் என கணித்தார். பிறகு அதிகம் யோசிக்கவில்லை. உடனே போனை எடுத்து உள்ளூர் காவல்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் மூலம் சாட் கார்சியா என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். இரு கொலைகள் நடந்தபோது அங்கே வேலை செய்த ஆள் என்ற வகையில் எட்வர்ட்ஸையும் விசாரித்தனர். ஆனால் அதில் உபயோகமான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது எட்வர்ட்சின் மகளே துப்பு கொடுக்க, காவல்துறை சுறுசுறுப்பாக தகவல்களைத் தேடத் தொடங்கியது. 


ஒருமுறை காவல்துறை எட்வர்ட்சை விசாரித்தபிறகு, அவரை அந்த நகரில் காவல்துறை பார்க்கவே இல்லை. அதாவது அடுத்தநாளே அவர் தன் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வேறு நகரத்திற்கு சென்றுவிட்டார். ஏப்ரலின் புகார் மூலம் சில வாரங்களுக்குப் பிறகு காவல்துறை ஆதாரங்களை சேகரித்துவிட்டு எட்வர்ட்ஸை கைது செய்தது. கொலை நடந்த இடத்தில் கிடைத்த டிஎன்ஏ மாதிரிகள், எட்வர்ஸோடு பொருந்திப்போனது. அதுவரை தனது அப்பா கொலைகாரரா என அப்படியா இப்படியா என யோசித்து வந்த ஏப்ரலுக்கு அந்த செய்தி பேரிடியாக அமைந்தது. 


எட்வர்ட்டின் பால்ய காலம் அமைதியானதாக இல்லை. ஆதரவற்றோர் காப்பகத்தில் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்தவர். பிறகு பல்வேறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டார். பெட்ரோல் நிலையங்களில் கொள்ளை, தீவைப்பு சம்பவங்களில் வழக்கு போடப்பட்டு மாட்டி சிறையில் சில காலம் இருந்தார். இவரது புகழ் எப்படி பெருகியது என்றால் கொள்ளை அடிப்பதில் சாதனை செய்து, எஃப்பிஐயின் தேடப்படும் பத்து குற்றவாளிகள் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். அதற்குப் பிறகு எட்வர்ட், தனது மனைவி கேவை சந்தித்தார். பள்ளி ஆசிரியையான இவரது வருகைக்கு பிறகு தனது வாழ்க்கை மாறியதாக எட்வர்ட் கூறினார். இப்படி கூறுவதை நூலாகவே எழுதிவிட்டார். மெட்டாமார்பிஸ் ஆஃப் கிரிமினல் என்ற பெயரில் சுயசரிதை எழுதினார். பிறகு நூலை பிரபலப்படுத்த கல்லூரி, தேவாலயம் என அலைந்து திரிந்து புகழ் சம்பாதித்தார். 


டு டெல் தி ட்ரூத் என்ற டிவி சேனல் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்களுக்கு பிரபலமாக அடையாளமானார். ஒரு வீட்டை வாங்கி அதை புதுப்பித்து விற்பதுதான் எட்வர்ட்சின் தொழில். அதை தனது பிரபலத்தை வைத்து செய்தார். ஆனால் இதெல்லாம் வெளி உலகிற்குத்தான். அவர் வீட்டில் வார்த்தை, செயல் அளவில் மோசமான வன்முறையாளராகவே இருந்தார். எப்போதெல்லாம் அவரது மனைவி கேயுக்கும், அவருக்கும் வாக்குவாதம் வருகிறதோ அப்போதெல்லாம் மனைவி அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது வழக்கம். கொலைகளை செய்வது, அதை எப்படி தடயம் அறிந்து கண்டுபிடிக்கிறார்கள் என்பது பற்றிய பல்வேறு இதழ்களை வாங்கிப் படித்து வந்தார் எட்வர்ட்ஸ். 


டிவி சேனல்களில் வரும் ஸோடியாக் கொலையாளி  பற்றிய நிகழ்ச்சியை வலுக்கட்டாயமாக பிள்ளைகளை பார்க்க வைப்பது எட்வர்ட்சின் வழக்கம். தனது அப்பா, அந்த நிகழ்ச்சியைப் பார்த்து உற்சாகத்தில் கத்தி மகிழ்வதை ஏப்ரல் நினைவுகூர்ந்து கூறினார். கொலைகளை செய்வதில் அவர் திறமையானவராக இருக்கவேண்டும் அல்லது அதைப்பற்றிய அறிவு கூடுதலாக இருந்திருக்கலாம் என்ற ஏப்ரல் எனக்கு மனதில் அவரைப் பற்றி சந்தேகம் இருந்தது என்றார். 


2009ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று, மகள் ஏப்ரல் கொடுத்த புகாரின்படி, அவரது அப்பா எட்வர்ட்ஸ் கைது செய்யப்பட்டார். டிமோத்தி ஹேக், கெல்லி ட்ரூ ஆகிய இருவரை கொன்றதுதான் குற்றச்சாட்டு. விசாரணையில், பில்லி லோவகோ, ஜூடி ஸ்ட்ராப் ஆகியோரை ஷாட்கன்னால் கொன்றதாக கூறி தகவல்களை துல்லியமாக கூறினார். கூடுதலாக, அவர் தனது வளர்ப்பு மகனான டேனிபாய் எட்வர்ட்ஸை காப்பீட்டு பணம் 2,50,0000 டாலர்களுக்காக பாயின்ட் பிளான்க்கில் துப்பாக்கியால் சுட்டு கொன்றதையும் கூறினார். டேனிபாயின் பிணத்தை, எட்வர்ட்சின் வீட்டில் இருந்து ஒரு கி.மீ.தொலைவில் கண்டெடுத்தனர். 


சிறுவயதில் ஏப்ரலுக்கு தனது அப்பா அழைத்துச் சென்ற பூங்கா ஒன்றில் நடந்த இரு கொலைகளைப் பற்றி நினைவில் இருந்தது. அதாவது, அங்கு கொலையான இரு உடல்களை பார்க்க ஏப்ரலை எட்வர்ட்ஸ் அழைத்து சென்றிருந்தார். அவர் இருகொலைகளுக்கு ஆயுள் தண்டனையும்,தனது வளர்ப்பு மகனை கொன்றதற்காக மரணதண்டனையும் விதிக்கப்பட்டது. அப்பாவின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டபிறகு, ஏப்ரல் அவரை சந்திக்கவே இல்லை. எட்வர்ட்ஸ் ஐந்துகொலைகளை செய்ததாக ஏற்றாலும், இன்னும் அவர் தீர்க்கப்படாத பல்வேறு கொலைகளை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகப்படுகிறது. மகளே அப்பா கொலைகாரர் என காவல்துறையில் வந்து புகார் கொடுப்பது அரிதானது. இந்த காரணத்திற்காக கொலை வழக்கை விசாரித்த அதிகாரிகள், ஏப்ரலை மரியாதையோடு நினைவுகூருகிறார்கள். ஆனால் ஏப்ரல் குற்றவுணர்ச்சியால் தவித்து வருகிறார். ஒன்று, அவரது அப்பாவை குற்றவாளி என காவல்துறையில் பிடித்துக் கொடுத்தது. அடுத்து, முன்னமே இதை செய்திருந்தால் நிறைய உயிர்கள் பலி போயிருக்காது என மனதில் நினைத்து குமைந்து வருகிறார். 


ஏப்ரலின் அம்மா, கணவர் சீரியல் கொலைகாரர் என்று ஒப்புக்கொண்டபிறகும் அவரை விவாகரத்து செய்யவில்லை. அவரது வாழ்க்கையை எப்போதும் போல வாழ்கிறார். இதை ஏப்ரலால் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவரது அப்பா எட்வர்ட்ஸிடம் ஏன், என்ன, எதுக்கு இப்படி செஞ்சீங்க என கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் இனி பதில் கிடைக்கப்போவதில்லை. எனக்கு கெட்ட விஷயங்களை நல்ல விஷயங்கள் மீது நம்பிக்கை உள்ளது. மனிதர்களை நம்புகிறேன். அப்பாவைப் போல அல்ல. பிறர் மீது கருணை உள்ளது என்று கூறுகிறார். 


ஜிலியன் டெல்லிங்


பீப்பிள் இதழ் 


பின்டிரெஸ்ட்









 



கருத்துகள்