பொறுப்பை கைகழுவிய நிறுவனங்கள் - சிஎஸ்ஆர் 4
அன்லாக் இம்பேக்ட் |
அத்தியாயம் 4
பெருநிறுவன சமூகப் பொறுப்பு!
குளறுபடி செய்த நிறுவனங்கள்!
இந்திய அரசு, 1960களுக்குப் பிறகு கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றியது. மத்திய அரசு, சோசலிச கருத்தைப் பின்பற்றி பல்வேறு துறைகளிலும் பொதுநிறுவனங்களைத் தொடங்கியது. இதனால் தனியார் நிறுவனங்கள் தொடங்கப்பட வாய்ப்பு குறைவாக இருந்தது. அப்படித் தொடங்குவதற்கு அரசிடம் உரிமம் பெறுவது, இமயமலை ஏறுவது போன்ற செயல்முறையாக இருந்தது.
தொண்ணூறுகளுக்குப் பிறகு, இந்தியச்சந்தையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் உள்ளிட்ட சீர்திருத்தங்கள் அமலாகின. இதன் விளைவாக, அரசின் கட்டுப்பாடு சந்தையில் தளர்ந்தது. தனியார் நிறுவனங்கள் சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிகராக போட்டி போடத் தொடங்கின. இந்தியா தன் வளங்களைக் கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.
கிளிப்ஆர்ட் லோகோ |
தனியார் நிறுவனங்களான டாடா, பிர்லா, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களை முன்பிருந்தே ஈடுபாடு காட்டி செய்து வருகின்றன. நுகர்வோர் துறையில் உள்ள பெருநிறுவனமான லீவர், கல்வி, சுகாதாரம் சார்ந்த பணிகளைச் செய்துவருகிறது. ஐடிசி, பி அண்ட் ஜி, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கல்வி சார்ந்த சமூகத் திட்டங்களை தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து செய்து வருகின்றன.
அனைத்து நிறுவனங்களும் தம் சமூகப் பொறுப்பை உணர்ந்து இதற்கென செலவழிக்க முன்வருவதில்லை. 2013 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் எட்டு மாடிக் கட்டடமான ராணா பிளாசா விபத்து ஏற்பட்டது. அப்போது சமூக பொறுப்புணர்வு திட்டம் பற்றிய விவாதங்கள் தீவிரமாக எழுந்தன. காரணம், அங்கு செயற்பட்ட தொழில்சாலைகள் பலவும் வால்மார்ட், கேப் உள்ளிட்ட பெருநிறுவனங்களுக்கான பணிகளைச் செய்து வந்தன. இந்த விபத்தில் 2500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள்.
அக்கட்டடத்தில் வால்மார்ட், ஹெச் அண்ட் எம், கேப் ஆகிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. ஆனால், பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வந்த தொழிற்சாலைகளுக்கான தமது பொறுப்பை அவை மறுத்துவிட்டன. அதேசமயம் வால்மார்ட் மற்றும் கேப் எனும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிறுவனங்கள், பெண்களுக்கான சமூகத் திட்டங்களை செயற்படுத்துவதில் புகழ்பெற்றிருந்தன. ”பெருநிறுவனங்கள் அனைத்து துறைகளுக்கும் பணம் ஒதுக்கி சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை செய்வது சாத்தியம் இல்லை. இதற்காக அவர்களை குற்றம் சாட்டுவது சரியல்ல” என்கிறார் வார்டன் பல்கலைக்கழகத்தின் மார்க்கெட்டிங் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் அமெரிகஸ் ரீட். இன்று தொடங்கப்படும் பல்வேறு பெறுநிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை கூடுதல் சுமையாக கருதவே வாய்ப்புள்ளது.
நன்றி - தினமலர் பட்டம்