மலமள்ளும் தொழிலாளர்களை அதிகரித்த ஸ்வட்ச் பாரத் அபியான்!
sanrangindia |
பாதாளச் சாக்கடைகளை மனிதர்கள் சுத்தம் செய்வது இந்தியாவில் இன்னும் முக்கியப் பிரச்னையாகவே இருக்கிறது. இத்தொழிலை செய்பவர்கள் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அரசும் கண்டுகொள்வதில்லை. இதற்கான இயந்திரங்களை பல்வேறு அரசு அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் கண்டுபிடித்தாலும் அதனை வாங்குவதற்கு அரசு முன்வருவதில்லை.
1993இல் சாக்கடைகளை மனிதர்கள் வைத்து சுத்தம் செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பை பிப்ரவரி 1 அன்று நிதி அமைச்சர் மக்களவையில் அறிவித்தார். ஆனால் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவெங்கும் 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 119 பேர் இறந்துள்ளனர்.
ஆனால் இச்சட்டம் இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ.. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.
2013ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் மனிதக்கழிவுகளை அகற்றுவது, சாக்கடைகளை சுத்தம் செய்வது போன்றவற்றில் மனிதர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. 2020 ஆம் ஆண்டிலும் ஐந்து நாட்களுக்கு ஒருவர் என கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உயிரை விடுகின்றன. ஜனவரி 25 அன்று, பெங்களூருவைச்சேர்ந்த இளைஞர் கழிவுகளை அகற்ற சாக்கடைக்குள் இறங்கி மூச்சுத்திணறி இறந்துபோனார். இவரைக்காப்பாற்ற உள்ளே இறங்கி ஒப்பந்ததாரரும் கூட இச்சம்பவத்தில் உயிரிழந்தார்.
இந்தியாவில் 62,904 மனிதக்கழிவகற்றும் பணியாளர்கள் உள்ளதாக அரசு கணக்கு கூறுகிறது. பதினெட்டு மாநிலங்களில் ஆய்வு செய்து இந்திய அரசு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அடையாளம் கண்டறிந்துள்ளது. ”இந்திய அரசு மனிதக்கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறினாலும் கூட அதனை மேம்படுத்த அக்கறை காட்டுவதில்லை ” என்கிறார் சஃபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் நிறுவனரான பெசவாடா வில்சன்.
Waste of a Nation: Garbage and Growth in India என்ற நூலை எழுதிய ராபின் ஜெஃப்ரி இதுபற்றி வேறுவிதமான விஷயங்களைச் சொல்லுகிறார். தொழில்நுட்பம் என்பது இப்பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று கூறமுடியாது. காரணம், சுத்தப்படுத்துதல் பணிக்கு குறிப்பிட்ட சாதிக்காரர்களைப் பயன்படுத்தும் அரசின் எண்ணமே அதிலிருந்து அவர்களை நீக்குவதற்கு பெரும் தடையாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள பொறியாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் இடங்களுக்கு தினசரி சென்று பார்வையிட்டு, பிரச்னைகளை தாமே சரிசெய்ய முயல வேண்டும். அப்போதுதான் இங்கே உள்ள பிரச்னைகளை தீர வாய்ப்பு உள்ளது.
ஸ்வட்ச் பாரத் அபியான் என்ற திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டன. ஆனால் இவற்றில் கழிவுகளை அகற்றுவதற்கு நிறைய பணியாளர்கள் தேவை. இக்கழிவுகளை குறிப்பிட்ட காலத்தில் அகற்றும் பணிச்சுமை கூடியது. இதனால் இத்தொழிலைச் செய்ய தாழ்த்தப்பட்டோர் மீண்டும் இத்தொழிலில் ஈடுபடுத்தும்படி நிலைமை உள்ளது என்கிறது இந்தியாஸ்பென்ட் மற்றும் வாட்டர் எய்டு செய்த ஆய்வு.
நன்றி - இந்தியாஸ்பென்ட்