புதிய இந்தியா பிறந்துவிட்டதா?
pixabay |
புதிய இந்தியா பிறந்துவிட்டதா?
உலக நாடுகள் முழுக்க அரசியல் நிலையின்மை காரணமாக போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. மக்களின் எண்ணங்களை போராட்டங்களாக வெடிக்கச் செய்ய சமூக வலைத்தளங்கள் பெருமளவு உதவி வருகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் அடிப்படைவாத, தேசியவாத கட்சிகள் வென்றுவருகின்றன. இந்த போராட்ட அலையில் இந்தியாவும் தப்பவில்லை.
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அமலான குடியுரிமை திருத்தச்சட்டம், நாடெங்கும் கடும் போராட்டங்களை கிளப்பியுள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளிலுள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் அரசின் மூலம் குடியுரிமையை எளிதாகப் பெற முடியும் என்கிறது இச்சட்டம். ஏறத்தாழ முஸ்லீம்களை இரண்டாம் தர மக்களாக மாற்றும் இச்சட்டம் அமலாகிவிட்டது என உள்துறை அமைச்சககம் கூறிது. இல்லை என பிரதமரும் பேச, விவகாரம் மேலும் குழப்பமாகிவிட்டது.
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டத்தின் முடிவில் லட்சக்கணக்கான இந்துகள் குடியுரிமை இல்லாத நிலைமையில் இருப்பது தெரியவர, இந்திய அரசின் திட்டம் தோல்வியுற்றது. திரும்பவும் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவோம். பின்னர், பிற மாநிலங்களில் விரிவுபடுத்துவோம் என்று உற்சாகமாக பேசினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அப்போதே அசாமில் குடியுரிமை இல்லாதவர்களுக்கான முகாம் கட்டடத்தை செய்தியாக்கின ஊடகங்கள். அங்குள்ள அசாம் மக்களுக்கான அமைப்புகளும் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
அச்சமயத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி கட்டண உயர்வை எதிர்த்து போராடத் தொடங்கியிருந்தனர் மாணவர்கள். குடியுரிமைத் திருத்த சட்ட அறிவிப்பு வெளிவந்ததும் அதற்கு எதிராகவும் போராடத் தொடங்கிவிட்டனர். அமைதியான முறையில் போராடிய மாணவர்களை ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகள் குண்டர்களை வைத்து தாக்கின. ஆனாலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் மாணவர்களை அழைத்து பேசவோ, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை தள்ளி வைக்கவோ விரும்பவில்லை.
இதுபோன்ற போராட்டங்கள் இந்தியாவிற்கு புதிதல்ல. 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான அன்னாஹசாரே போராட்டம் நடைபெற்றது. இதற்கு அடுத்த ஆண்டே டெல்லியைச் சேர்ந்த மாணவி வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கும் இன்று அரசியல் அமைப்புச் சட்ட நூலை கையில் வைத்துக்கொண்டு மாணவர்கள் போராடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.
பாஜக அரசு கொண்டு வரும் குடியுரிமை திருத்தச்சட்டம் போன்ற சட்டங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் உண்டு. முதலில் சிரியா, எகிப்து, அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து அகதிகளை ஏற்ற மேற்கு நாடுகள் கலாசார வேறுபாடுகளால் 1960க்குப் பிறகு அகதிகளை ஏற்பதில் தயக்கம் காட்டின. உள்நாட்டிலும் பல்வேறு கட்சிகள் தேசிய உணர்ச்சிகளைத் தூண்ட அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்களை உருவாக்கினர். இதன் நோக்கம் முஸ்லீம் அகதிகளை கட்டுப்படுத்துவதுதான். இந்நோக்கத்தை சட்டமாக்கும்போது பொதுவான வார்த்தையாக அகதிகள் என்றே எழுதப்பட்டு சட்டங்கள் அமலாயின. ஆனால் இந்தியாவில் நேரடியாக இந்துக்களை அங்கீகரித்து பல்வேறு நாடுகளிலிருந்து வந்தாலும் குடியுரிமை தருவதாக இந்திய அரசு அறிவித்திருப்பதை ஜனநாயகவாதிகள் எவரும் ஏற்பதாக இல்லை.
பாஜக கட்சிக்கு இரு அவைகளிலும் இருக்கும் செல்வாக்கை வைத்து வேலைவாய்ப்புகளை பெருக்கலாம். பொருளாதாரச் சரிவை சரிசெய்து மக்களின் சிக்கல்களைப் போக்கலாம். கல்விக்கான நிதியை அதிகரிக்கலாம். ஆனால் மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்தலில் வெல்வதற்கான வழிகளையே தேடுகிறது. இது அரசியலமைப்புச்சட்டம் நமக்களிப்பதாக உறுதி கூறும் சமத்துவம், ஜனநாயகம் ஆகிய தன்மைகளுக்கு பெருமை சேர்க்காது. மேலும் குடியுரிமை என்பது இந்தியா மட்டும் அமல்படுத்தினால் போதாது. அண்டை நாடுகளுடன் இதுபற்றி பேசியே ஆகவேண்டும். அதற்கான முயற்சிகளை தொடங்காதபோது இச்சட்டம், இந்திய மக்களுக்கே தீமையாக முடியும்.
2
சாமனியர்களுக்கும் பத்ம விருதுகள்!
அரசு அளிக்கும் விருதுகளைப் பொறுத்தவரை அதற்கு விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கவேண்டும். பிறகுதான் குறிப்பிட்ட நபர்கள் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் பெயர் அறிவிக்கப்படும். ஆட்சி மாறும்போதெல்லாம் காட்சி மாறும் என்பதுபோல, கட்சிகளுக்கு உதவும் ஆதரவான ஆட்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன என்று வெகுகாலமாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் தேர்வு, தேர்வு செய்தது இந்திய அரசுதானா இவர்களைத் தேர்ந்தெடுத்தது எனுமளவு ஆச்சரியப்படுத்துகிறது. 71வது குடியரசு தின விழாவில் பத்ம விருதுகளைப் பெறுபவர்களைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருதுகளை 118 பேர் பெறுகின்றனர். பத்ம விபூஷன் விருதை 16 பேர் பெறுகின்றனர். சமூகத்திற்கு உழைத்த நபர்களை மட்டுமே இங்கு பார்ப்போம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் பத்ம ஸ்ரீ விருதைப் பெறவிருக்கிறார். இவர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் 14 ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்வேறு திறன் வளர்ப்பு செயல்பாடுகளை செய்துள்ளார். ஏழைகளுக்கு பணக்காரர்களிடமிருந்து நிலங்களைப் பெற்றுத் தந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது.
சண்டிகரைச் சேர்ந்த ஜக்தீஸ் லால் அகுஜா என்பவர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவர் சண்டிகரிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு இருபது ஆண்டுகளாக உணவு வழங்கி வருகிறார். பிரிவினையின் போது, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் அமிர்தசரஸ், மான்சா ஆகிய முகாம்களில் தங்கினார். பின்னர், மெழுகுவர்த்தி, வாழைப்பழங்கள் விற்று சம்பாதித்தார். சிறுவயதில் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட்ட நினைவை அவர் மறக்கவில்லை. அதனால், 83 வயதாகி சர்க்கரை நோய் பாதிப்பிலும் ஏழைகளுக்கு உணவிட்டு வருகிறார் அகுஜா.
ஃபைசாபாத்தைச் சேர்ந்த முகமது ஷாரிஃப், 27 ஆண்டுகளாக ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்து வருகிறார். இதனால் அவரை பைத்தியக்காரர் என்று ஊர் மக்கள் அழைக்கின்றனர். இவரின் செயல்களுக்கு பின்னாளில் அவர்களே உதவியது தனிக்கதை. முகமதுவின் மகன் இறந்துபோன சம்பவத்திலிருந்து, தோராயமாக 27 ஆண்டுகளாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை அடக்கம் செய்துள்ளார்.
அசாமைச் சேர்ந்த மருத்துவர் குஷால் கொன்வர் சர்மா, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளுக்கு சிகிச்சையளித்துள்ளார். வார விடுமுறையைக் கூட யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் செலவு செய்துள்ள சர்மா, ஆச்சரியகரமான மனிதர். தொண்ணூறுகளில் இருந்து குவகாத்தியில் அறுவைசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த சத்யநாராயணன் முண்டாயூர், நூலகங்களை வீடுதோறும் அமைக்க பிரசாரம் செய்து சாதித்தவர். நாற்பது ஆண்டுகளாக 13க்கும் மேற்பட்ட நூலகங்களை மக்களுக்காக அமைத்து தந்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த அப்துல் ஜப்பார், போபால் விஷவாயு கசிவுக்கு எதிராக போராடி வருகிறார். இவர் இதற்கென தனி அமைப்பு தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரும் முயற்சியில் உள்ளார். இதற்காக, 2300 பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இறுதியாக உஷா சாவ்மர். இவர் ஏழுவயதில் குடும்ப நெருக்கடி காரணமாக மனிதக் கழிவுகளை அள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர், தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் அத்தொழிலிருந்து மீண்டார். இன்று மனிதக்கழிவுகளை அகற்றுவதற்கு எதிராக போராடி வருகிறார்.
இவர்களுக்கு இந்த பத்ம ஸ்ரீ விருது மூலம் சிறிய அங்கீகாரத்தையேனும் அரசு வழங்கியுள்ளது மகிழ்ச்சி.
-அரசு கார்த்திக்