ஜப்பானை உருக்குலைக்கும் ஹிக்கிகோமேரி!
பிபிசி |
ஜப்பானில் தொண்ணூறுகளில் புழங்கி வந்த பழக்கம் ஹிக்கிகோமேரி. இந்தப்பழக்கம் தற்போது அனைத்து நகரங்களிலும் பரவி வருகிறது. ஹிக்கிகோமேரிக்கு அர்த்தம் - உள்ளுக்குள் இழுத்துக்கொள்வது. அதாவது, இந்த பழக்கத்திற்கு உள்ளான இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு எங்கும் செல்லமாட்டார்கள். காரணம் சமூகத்திற்கு தன் தேவை என்ன என்பது போன்ற எண்ணங்கள் இவர்களுக்கு ஏற்படுவதுதான். இவர்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு இருப்பதால், இக்காலங்களில் வேலைக்கு போகாவிட்டாலும் சமாளித்து விடுகிறார்கள்.
இந்நிலை சிலருக்கு ஆறுமாதங்களுக்கு நீடிக்கும். அல்லது ஆண்டுகளுக்கு நீளும் வாய்ப்பும் உள்ளது.
இது ஜப்பானில் இருந்து உருவானது என்று கூறப்பட்டாலும், வீடுகளை விட்டு வெளியேறாமல் சமூகத்திலிருந்து விலகி இருக்கும் பழக்கம் பிரான்ஸ்,துருக்கி போன்ற நாடுகளிலும் உருவாகி வருகிறது. இதுபற்றி ஆலன் டியோ என்ற ஆராய்ச்சியாளர் பத்தாண்டுகளாக ஆராய்ந்து வருகிறார். இதில் ஆராய்ச்சி செய்யத் தடையாக இருப்பது இளைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதுதான். அவர்கள்தான் சமூகத்திலிருந்து முழுக்க விலகி இருக்கிறார்களே?
இப்பாதிப்பிற்கு காரணம் என்ன? இளைஞர்கள் இன்று பள்ளி முதற்கொண்டு கடுமையான மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள். சக மாணவர்களின் கிண்டல், பெற்றோரிடம் சண்டை அல்லது புறக்கணிப்பு, நிறைவேறாத ஆசை, ஏக்கம் என இவை எல்லாமும்தான் காரணம். இதன்காரணமாக இனியென்ன இருக்கிறது என்று வீட்டில் அமைதியாக அறையில் தங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் மீதே நம்பிக்கை வரும்போது வெளியே வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு தேவைப்படும் உளவியல் சிகிச்சையைக் கூட மருத்துவர்களால் வழங்க முடிவதில்லை. பெற்றோருக்கு தங்கள் பிள்ளையின் இந்த தன்மையை புரிந்துகொள்ள முடிவதில்லை. வீட்டிலேயே இருக்கிறான் என்ற பாதுகாப்பு உணர்வோடு நிம்மதி அடைந்து விடுகிறார்கள்.
ஹிக்கிகோமேரியை சமாளிக்கும் விஷயங்களும் பெற்றோரிடம் உண்டு. பிள்ளைகளிடம் நேரம் எடுத்து பேசினால் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும். அந்த நேரத்தை டிஜிட்டல் பொருட்களிடம் ஒப்படைத்தால் என்ன செய்வது?
நன்றி - பிபிசி