இந்தியாவில் உருவாகிறது பெருஞ்சுவர்!
ஜனநாயக நாடுகளிலேயே அதிக நாட்கள் இணையம் தடைசெய்யப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ ஐந்து மாதங்கள் முற்றாக இணையம் துண்டிக்கப்பட்டு காஷ்மீரிலுள்ள தொழில்கள் அனைத்தும் துடைத்து அழிக்கப்பட்டன. இப்போதும் நீதிமன்ற உத்தரவுப்படி சில பகுதிகளில் மட்டும் இணைய வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களை மட்டுமே இணையத்தில் காஷ்மீர் பயனர்கள் பார்க்க முடியும். மேலும் இம்முறையில் 301 வலைத்தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 4, 2019 அன்று இணைய இணைப்பு காஷ்மீரில் தடைசெய்யப்பட்டது. பின்னர், கார்கில் பகுதிகளில் டிசம்பர் 27, 2019 அன்று இணைய இணைப்பு வழங்கப்பட்டது. பிரச்னை ஏற்படுத்தாத பயனர்களுக்கு மட்டும் ஜன.25, 2020 அன்று 2ஜி இணைய இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அரசு அனுமதிக்கும் இணையதளங்களை மட்டுமே காண முடியும்.
மேலும் தகவல் அனுப்புவதற்கு என்கிரிப்ஷன் வசதியுள்ள வாட்ஸ் அப் போன்ற செயலிகளை தடை செய்துள்ளது மத்திய அரசு. அதற்கு பதிலாக அரசுக்கு ஆதரவான ஜியோ சாட் செயலியைப் பயன்படுத்தலாம். இதில் தகவல்களை அரசு இடைமறித்துப் படிக்க முடியும்.
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், தனியார் நிறுவனங்கள் பயனர்கள் சமூக வலைத்தளங்களை அணுகுவதை தடுக்கும் டிஜிட்டல் தடுப்பு மென்பொருட்களை உருவாக்கி வருகின்றனர். இதை மத்திய அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. தனக்கு எதிரான கருத்துகளை பதிவிடுபவர்களை கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் மூலம் களையெடுத்து வழக்கு போட்டு அவர்களை மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகிறது. இம்முறையில் பதினொரு வயது மாணவியின் தாய், பள்ளி ஆசிரியை ஆகியோர் மீது அண்மையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக இந்த தண்டனை.
அரசு மெல்ல அடிப்படைவாத நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.
நன்றி - குளோபல் வாய்ஸ்