இன்று சகிப்புத்தன்மையை யாரும் விரும்புவதில்லை! அன்புள்ள அப்பாவுக்கு




Father, Son, Silhouette, Boy, Child, Family, Human
பிக்சாபே




11

அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம்.

நலமாக இருக்கிறீர்களா? நான் எனது ஜாதகம் பற்றி சில விஷயங்களை சோதித்துப் பார்த்தேன். எனக்கு பெரும்பாலும் ராசிபலன்களிலேயே நல்ல பலன்கள் கிடைத்தது கிடையாது. இதில் ஜாதகத்தில் என்ன கிடைக்கப்போகிறது? அப்படித்தான் நண்பர் ஜனாவும் சொன்னார்.

அவர் இதனை நம்புகிறார். நான் அதனை அறிவியல் முறையாக ஏற்கிறேன். அதாவது கணக்கீடுகள். நடக்கும் அனைத்திற்கும் முன்னோர் வினைதான் காரணம் என்று வருத்தப்பட்டு உட்கார்வதால் என்ன கிடைக்கும்?

உண்மையிலேயே பணம் என்பதை பொருட்டாக எடுக்காமல் சோதிடர் ஒருவர் ஜாதகம் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம். பூமியும் சுற்றுகிறது. பூமியிலுள்ள நாமும் அதன்படியே இயங்குகிறோம். எனவே ஜோதிடத்தில் துல்லியமான பலன்களை கண்டறிவது கடினம். அப்படியும் சரியாகச் சொல்லிவிட்டால், நமக்கு நேரும் துயரங்களைத் தடுக்க முயற்சிக்கலாம். நீங்கள் பேசும் திருமணம் சாதாரண காரியமல்ல. நிறைய சோதனைகள், நெருக்கடிகள் உள்ளன.

.அன்பரசு
26.5.16


12


அன்புள்ள அப்பாவுக்கு,

வணக்கம்.

வாழிய நலம். திருமண வாழ்க்கை நீ என்ன எதிர்பார்ப்பு வைத்திருக்கிறாயோ அதற்கு அப்படியே எதிராக இருக்கும் என்றார் நண்பர் ஜனா. அதே நேரத்தில் அவர் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டிருக்கிறார். அவர் தன் அனுபவங்களிலிருந்து இப்படி சொல்லியிருக்க வேண்டும்.

வாழ்க்கையை சுமுகமாக நடத்திச்செல்ல தேவையானவை கிடைத்தால் சரி. தினமும் வீட்டில் போர் புரிந்துவிட்டு வெளியில் செல்வது சாத்தியமாகாதுதானே? இதற்கு உதாரணமாக உங்கள் திருமண வாழ்க்கையைச் சொல்லலாம். உறவை முறித்துக்கொள்ளாமல் நீங்களும், அம்மாவும் ஒன்றாக இருக்க சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் இன்று புதிய தலைமுறையினர் தங்களது சுதந்திரத்தை மட்டுமே முக்கியமாக கருதுகின்றனர். யாரும் உங்கள் அளவுக்கு சகிப்புத்தன்மையோடு இருப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்கிறார்கள்.

பெண் தனக்கான பொருளாதாரத் தேவையை நிறைவு செய்துகொள்ளும் தன்னம்பிக்கையை திருமணத்தில் பெற முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள துணை வேண்டும் என்றால் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் சமூக அழுத்தம் காரணமாக திருமணம் செய்கிறேன் என்றால் அது வறண்ட கிணற்றில் தெரிந்தே குதிப்பது போல. சரியாக அமையும் வாய்ப்பு குறைவு. உடல்ரீதியாக ஏற்படுத்திக்கொள்ளும் பந்தம் அவ்வளவு எளிதில் முறிக்க கூடியது அல்ல. மறக்கவும் முடியாது. பரஸ்பர எதிர்பார்ப்புகள், லாபங்கள் இன்றி திருமணங்கள் நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. நன்றி.

.அன்பரசு
10.5.16



பிரபலமான இடுகைகள்