ஜனநாயகத்தை சக்தி வாய்ந்த அமைப்புகள் தடுக்கின்றன!


Patrick Basham | Cato Institute


பேட்ரிக் பாசம், இயக்குநர், ஜனநாயக கழகம்.

உலகம் முழுக்க பாப்புலிச சிந்தனை கொண்டவர்கள் வென்று அதிபர்களாகவும், பிரதமர்களாகவும் உருவாகி வருகிறார்கள். அப்போது ஜனநாயக சிந்தனை வலுவிழந்து வருகிறதா என்று கேள்வி எழுகிறது அல்லவா? அதற்குத்தான் சரியான பதில்களை அளிக்க ஜனநாயக தன்மையை ஆராய்ந்து வரும் பேட்ரிக் பாசத்தைச் சந்தித்தோம்.

ஜனநாயகம் இன்று என்ன நிலையில் இருப்பதாக கருதுகிறீர்கள்?

ஜனநாயகம் இன்று பல்வேறு சவால்களை சந்தித்தாலும் சரியான நிலையில்தான் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் இனி ஜனநாயகத்திற்கு உலகில் இடமில்லை என்று பேசி வருகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் உருவாகி வந்த இடம்தான் என்று நான் அறிவேன்.

மக்கள் இன்று தங்களின் அரசியல் நிலைமை சரியில்லை என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர். அதனை தங்களது வாக்குகள் மூலம் மாற்ற முயல்கின்றனர். தொண்ணூறுகளில் ஏற்பட்ட உலகமயமாக்க மாற்றங்களால் பணக்காரர்கள் பயன் பெற்றதாக மக்கள் நினைக்கிறார்கள். இதனால்தான் அவர்களுக்கு பாப்புலிச தலைவர்களின் வாக்குறுதிகள் நம்பிக்கை அளிக்க அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

உதாரணமாக, அமெரிக்க முன்னாள் அதிபரான ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தவர்கள்தானே 2016இல் டொனால்டு ட்ரம்பைத் தேர்ந்தெடுத்தார்கள். பாப்புலிச தலைவர்களின் செயல்பாடுகளால் உலகளவில் மூடுபனியான சூழலே அரசியலில் நிலவுகிறது. மக்கள் இந்த அமைப்பைத் தூக்கி எறிய விரும்பவில்லை. அவர்கள் தான் தேர்ந்தெடுத்த அமைப்பு தனக்கு பதில் சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எனவே ஜனநாயக அமைப்பு தொன்மையான கிரேக்க ஏதேனிய தன்மையில் இருந்தால் அதனை மக்கள் புறக்கணித்துவிடுவார்கள்.

அடிப்படையான ஜனநாயக மதிப்புகள் என்று ஏதேனும் இருக்கிறதா? உலகளவில் ஜனநாயகத்தன்மை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறதே?

மக்களின் பங்கேற்பு, சமவாய்ப்பிலான வாக்கு, சுதந்திரமான 
பத்திரிகைகள், பேச்சு மற்றும் எழுத்து உரிமை

வெளிப்படைத்தன்மை ஆகியவைதான் அடிப்படையான ஜனநாயக மதிப்புகள். நாட்டில் தேர்தலில் தோற்றவர்கள் தம் தோல்வியை தாமாகவே ஏற்கும் அளவுக்கு ஜனநாயக, வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த சூழ்நிலை அனைத்து நாடுகளிலும் இப்போது நிலவவில்லை. இன்று எந்த விலை கொடுத்தேனும் வெல்லவேண்டும் என்பதில் அனைவரும் குறியாக உள்ளனர். இதற்கு சவாலாக இருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, காலனியாதிக்க நிலையில் இருந்த ஆப்பிரிக்க நாடுகளில் ஜனநாயகத் தன்மை குறைவு. அங்கு மனநிலை அப்படி அமைந்துவிட்டது. அடுத்து, ஜனநாயகத்தன்மை பரிணாம வளர்ச்சி பெற்று உருவாக வேண்டும். உலகிலுள்ள நாடுகளில் அனைத்திலும் ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்த முடியும்.

ஓர் நாடு ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்த அதற்கு தனித்துச் செயல்படும் சார்பற்ற பொருளாதார பலம் தேவை. அப்போதுதான் உணவு, வாழிடத்திற்காக மக்கள் மோசமான தலைவர்களுக்கு வாக்கு அளிக்காமல் இருப்பார்கள். இச்சூழலில்தான் ஜனநாயகத்தை வளர்க்க முடியும்.

பொருளாதார வளர்ச்சி என்ற நிலையில் சீனாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறதுழ

அவர்கள் பொருளாதார அடிப்படை விஷயங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவிட்டனர். ஆனால் அரசியல் செயல்பாட்டைப் பொறுத்தவரை இரும்புத்திரை நாடாக இருந்தனர். ஆனால் இன்று பாருங்கள். அதன் முக்கிய பொருளாதார வளர்ச்சிப் பகுதியான ஹாங்காங் தன் சுதந்திர முழக்கத்தை முன்னெடுத்துவிட்டது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் முக்கியமான பொருளாதார நகர் ஹாங்காங். அங்கு மக்களிடம் ஜனநாயக மாற்றத்திற்கான வேட்கை உருவாகிவிட்டது. சீனா, தன் அரசியல் கொள்கைகளை வைத்துக்கொண்டு அதிக தூரம் செல்ல முடியாது.

ஜனநாயகத் தன்மையைக் கொண்டு வருவதை பல்வேறு சக்தி வாய்ந்த அமைப்புகள் தடுக்கின்றனவா?

அமெரிக்காவில் புகையிலை, ஆயுத நிறுவனங்களின் செல்வாக்கு உலகறிந்த ஒன்று. இவர்கள் எப்போதும் தம் வணிகத்திற்கு ஆதரவான பல்வேறு கருத்துகளை சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதையும் அனுமதிப்பதுதானே ஜனநாயகம். ஆனால் இவர்கள் சொல்லும் விஷயங்களை எல்லாம் அரசு கொள்கைகளாக வகுக்க கூடாது. உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நீ சொல்வது எதனையும் ஏற்கமாட்டேன் என்ற மூர்க்கத்தனம் நாட்டை ஆபத்தில் தள்ளிவிடும்.

நன்றி - டைம்ஸ், பிப்ரவரி, 5, 2020