தொடக்க கல்வியில் சறுக்கும் இந்தியா! - பிரதாம் நிறுவன அறிக்கை!
pexels |
தொடக்க கல்வியின் முக்கியத்துவம்!
பிரதாம் தொண்டு நிறுவனத்தின் ஏஎஸ்இஆர் (Annual Survey of Education Report) 2019 அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் மாணவர்களின் தொடக்க கல்வி பற்றி பேசப்பட்டுள்ளது.
உலகளவில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில், முதல் எட்டு ஆண்டுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆறு வயதில் மூளையின் வளர்ச்சி 90 சதவீதம் முழுமையடைந்து விடுகிறது. எட்டு வயது வரையில் குழந்தைகளின் உணர்ச்சி, அறிவு, ஆற்றல், சமூக கலந்துரையாடல் ஆகிய தன்மைகள் வளர்கின்றன. மேலும் பல்வேறு திறன்களை பள்ளிச்சூழல் வளர்க்கிறது.
பள்ளிகளின் நிலை, 4 முதல் 8 வயது வரையிலான மாணவர்களின் திறன்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். இவர்களின் பரிந்துரைகள், அனுபவங்கள் அடிப்படையில் , வெளியான கல்வி அறிக்கை, தொடக்க கல்வி பற்றிய நம்பிக்கை அளிப்பதாக அமையவில்லை. ஆய்வுக்குழுவினர், 24 மாநிலங்களிலுள்ள 24 மாவட்டங்களை தேர்ந்தெடுத்தனர். இங்குள்ள கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 39,730 மாணவர்களை (4 முதல் எட்டு வயதுக்குட்பட்ட) ஆய்வு செய்தனர். இதில் 12.7 சதவீத மாணவர்கள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் நேரடியாக பள்ளியில் இணைந்துள்ளனர்.
நான்கு முதல் ஐந்து வயதில் மாணவர்களுக்கு வரிசைப்படுத்துதல், தொடர் எண்களை கண்டறிதல், புதிர்களை கண்டுபிடித்தல், வடிவங்களை புரிந்துகொள்வது, இடங்களை அறிவது ஆகிய திறன்கள் அவசியம். ஆய்வில் தொடக்க கல்வி மாணவர்கள் மேற்சொன்ன திறன்களில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதற்கு பெரும்பகுதி மாணவர்கள் அங்கன்வாடிக்கு செல்லாததே காரணம். 44 சதவீத மாணவர்கள் மட்டுமே அங்கன்வாடியில் சேர்ந்து அடிப்படை விஷயங்களைக் கற்கின்றனர். ஏறத்தாழ 30 சதவீத மாணவர்கள் அங்கன்வாடிக்கோ, அதற்கு சமமான தனியார் வகுப்புகளுக்கோ செல்லவில்லை. இதுபற்றிய விழிப்புணர்வை பெற்றோர்களும், ஆசிரியர்களும் பெற்றால் மட்டுமே தொடக்க கல்வியில் மாணவர்கள் சாதிக்க முடியும். தொடக்க கல்வியே மேல்நிலைக் கல்விக்கான சிறந்த அடித்தளம் என்பதை நாம் உணரவேண்டிய நேரம் இதுவே.
தகவல்: FE