அகற்ற முடியாத கறையை ஊழல்கள் ஏற்படுத்தின - மான்டேக் சிங் அலுவாலியா
நேர்காணல்
மான்டேக் சிங் அலுவாலியா
நலின் மேத்தா, சஞ்சீவ் சங்கரன்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல் ஏழு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் என்கிறீர்கள். அப்புறம் ஏன் வளர்ச்சி வீழ்ந்தது?
முதல் ஏழு ஆண்டுகளில் வளர்ச்சி நாங்களே நினைத்துப் பார்க்க முடியாதபடி இருந்தது உண்மைதான். ஆனால் அதற்குப்பிறகு அதாவது 2011இல் ஐரோப்பாவில் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த பாதிப்பினால் அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கவிருந்த திட்டங்கள் தள்ளிப்போயின. அச்சூழலிலும் காங்கிரஸ் உள்நாட்டு உற்பத்தியை வைத்து சமாளித்தது. ஆனால் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட ஊழல்கள், ஆட்சிக்கு அகற்றமுடியாத களங்கத்தை ஏற்படுத்தின.
2014 தேர்தல் காலத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு எதிராக மாறிவிட்டன.
பொருளாதார வளர்ச்சி, ஏற்றம், இறக்கம். வீழ்ச்சி என்பது தொடர்ச்சியான விளைவுதான். தொலைத்தொடர்புத்துறையில் கிடைத்திருக்க வேண்டிய அதீத லாபம் பற்றி தணிக்கைத்துறை சொன்னது மிகப்பெரிய சர்ச்சையானது. உலகில் அலைக்கற்றை விவகாரத்தில் தீர்க்கமான விதிகளைக் கொண்டு ஏலம் எங்குமே நடைபெறவில்லை. இந்தவகையில் இந்தியாவில் நடைபெற்ற ஏலம் என்பது அரசுக்கு வருமானம் ஈட்டித் தந்தது.
அரசின் விதிமுறைகள் நிறைய சிக்கலை ஏற்படுத்துகின்றன. இன்றைய அரசு கூட பல்வேறு தடுமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது?
நான் உங்கள் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் முன்னர் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு மோசமாக எழுதப்பட்ட விதிகளே காரணம். இதைப்போலத்தான் வருமான வரி தொடர்பான விதிகளும் மாற்றப்படாமல் இருந்தன. காலத்திற்கேற்ப விதிகளை மாறுதல் செய்து திருத்தாமல் இருப்பதால்தான், பலரும் வரிவருவாய் மோசடி என்ற பெயரில் மாட்டிக்கொள்கிறார்கள்.
சீர்திருத்தங்களை செய்வதில் தேசிய ஜனநாயக முன்னணி எப்படி செயல்படுகிறது?
ஆளும் அரசு காங்கிரசின் பல்வேறு சட்டங்களை வேறு பெயரிட்டு அதன் நோக்கத்திற்கு மாறுபட்டு பின்னோக்கிய முறையில் அமல்படுத்துகிறது. வங்கி திவால் சட்டத்தை அதன் சாதனை என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி, இறக்குமதி வரி அதிகரிப்பு, ஆர்இசிபியில் இணையாதது ஆகியவற்றை நான் வரவேற்கவில்லை.
வங்கியின் செயல்பாட்டு முறை இன்னும் மாறவே இல்லையே?
வங்கித்துறையில் பல்வேறு துணிச்சலான முயற்சிகளை நாம் செய்யவேண்டியுள்ளது. பொதுத்துறை வங்கிகளை இரு அமைப்புகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ஆர்பிஐ மற்றும் நிதியமைச்சகம் அவற்றை இயக்குகின்றன.பொதுத்துறை வங்கிகளைப் போலவே தனியார் வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறதா என்று தெரியவில்லை. நிதியமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் வங்கித்துறையில் உள்ள சேவைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை யோசிக்கலாம். அவர்களால்தான் சீர்திருத்தங்கள் சாத்தியமாகும் வாய்ப்பு உள்ளது.
நன்றி – டைம்ஸ், பிப்.16, 2020