நண்பனுக்கு கூறாத விளக்கம், எதிரி ஏற்காத உண்மை! - அன்புள்ள அப்பாவுக்கு



Man and Boy Standing on Bridge
pexels




4

அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா?

வேலை என்பதைப் பொறுத்தவரை நான் ஈடுபாட்டோடு செய்கிறேன். ஆனால் மயிலாப்பூரிலிருந்து கே.கே.நகர் சென்று சேர்வது மோட்சத்திற்கு தவம் இருப்பது போலவே இருக்கிறது. மாலையில் 12ஜி பஸ்ஸில் ஏறுவது அய்யப்பசாமியின் கோவிலின் பதினெட்டாம் படி ஏறுவது போலவே இருக்கிறது. அவ்வளவு கூட்டம்.

உடுப்பி பஸ் ஸ்டாப்பில் இறங்கும்போது, நான்கு பேர் சுற்றி நின்று அடித்து உதைத்தது போல உடல் வலிக்கிறது. துயரம்... தூங்குவதற்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா என்று இருக்கிறது. அலுவலகத்திற்கு பக்கத்தில் அறையை எடுப்பது புத்திசாலித்தனம்.

இங்குள்ள பரத் என்ற பிராமணர் மட்டுமே நெருக்கமான நண்பர். பிற ஆட்கள் எல்லாம் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாருடனும் என்னால் ஒட்ட முடியவில்லை. சம்பளம் வந்ததும் உங்களுக்கு பணம் கட்டி முத்தாரம் இதழ் வரும்படி செய்கிறேன். இந்த புத்தகம் பெரு நகரங்களில் உள்ள கடைகளில்தான் கிடைக்கும். இருமாதங்களுக்குப் பிறகு நான்கு நாட்கள் லீவு போட்டுவிட்டு ஊருக்கு வர நினைத்துள்ளளேன்.

மஞ்சள் காமாலைக்கான சோதனை இன்னும் முடியவில்லை. இதனை பரிசோதித்தபிறகு, உணவு முறையை கவனமாக பின்பற்ற வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எனக்கு சிறிதும் திறமை இல்லை. சம்பாதிப்பதை விட அதனைக் காப்பாற்றுவது பெரும் திறமை என்று தோன்றுகிறது. நண்பர்களுக்கு எதையும் விளக்க வேண்டியதில்லை. எதிரிகள் நாம் கூறும் எதையும் ஏற்கப்போவதில்லை என்ற முன்னோர் கூற்றுதான் திடீரென நினைவுக்கு வருகிறது.

ச.அன்பரசு
28.2.2016