நம்பிக்கை அளிப்பது காசு மட்டும்தான்! - அன்புள்ள அப்பாவுக்கு...
pixabay |
7
அன்புள்ள அப்பாவுக்கு,
வணக்கம். நலம் வாழ இறையை
வேண்டுகிறேன்.
நான் இங்கு நலமாக இருக்கிறேன்
என்று சொல்ல முடியவில்லை. மஞ்சள் காமலைக்கான டெஸ்ட் எடுக்க பர்மிஷன் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு
ஓடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கியுள்ளது. அதை எடுத்துவிட்டால் அம்முடிவுப்படி
மருந்துகளை சாப்பிடும்படி இருக்கும்.
ஒரு ரூபாய் ஆலோசனைக் கட்டணமாக
வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள். உடனே நமக்கு இவர்களை பாராட்டத் தோன்றும்.
ஆனால் கவனமாக நோயாளிகளைக் கவனித்துப் பார்ப்பதில்லை. இலவச மருத்துவமனை என்றாலே அங்கு
பணிபுரிபவர்களுக்கு உடலிலும் மனதிலும் சுண்டுவிரல் அளவுக்கு அலட்சியம் முளைத்து விடுகிறது.
வேலைகள் கூடியுள்ளதால்,
உடல் நலிவை மூளைச்சோர்வு இன்னும் கூட்டுகிறது. நீங்கள் அடிக்கடி இருமல் மருந்துகளை
வாங்கி சாப்பிடுவீர்கள் அல்லவா? அதனை மத்திய அரசு தடைசெய்து உள்ளது. அதில் ஆபத்தான
வேதிப்பொருட்கள் ஏதேனும் இருக்கலாம். தேனை மிதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சளி,
இருமலுக்கு பயன் கிடைக்கும். உணவையும் கறாராக
உண்டால் பிரச்னை இல்லை.
மயிலாப்பூருக்கு ரூம் பார்த்து
வந்துவிட நினைத்தாலும், காசை நினைத்தால் பயமாக இருக்கிறது. கையில் காசு இல்லாமல் சென்னையில்
ஒருநாள் கழிவதே கடினம். இப்போதைக்கு கே.கே.நகர் விட்டு கிளம்புவது சந்தேகம்தான்.
உடல்நலன் ஒத்துழைத்து இந்த
வேலையில் தொடர்ந்து நீடிக்க முயன்றால் நன்றாக இருக்கும். இனி அடுத்து எங்கே சென்று
தங்கினாலும், அந்தப் பகுதியில்தான் சிறிதுகாலம் வாழும்படி இருக்கும் என நினைக்கிறேன்.
எதையும் என்னால் இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் உங்களுக்கு அதுபற்றிய
தகவல்களைச் சொல்லுவேன்.
தலித் முரசு பத்திரிகையில்
மீதிப்பணம் கிடைத்ததை, அதைத் தேடி அலைந்த நாயைப் போன்ற அலைச்சல் மறக்கடித்து விட்டது.
மயிலாப்பூரிலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு நடந்து சென்று வாங்கினேன். ஏன் இப்படி என்கிறீர்களா?
என்னமோ தோன்றியது அப்படியே நடந்துவிட்டேன். இப்பெருநகரில் பணம் தவிர்த்து எதுவும் நம்பிக்கை
தருவதாக இல்லை.
ச.அன்பரசு
21.3.2016