அரசு கொள்கைகளை வகுத்தால் மட்டுமே பூமியைக் காக்க முடியும்!



David Wallace-Wells, author of ‘The Uninhabitable Earth ...







நாம் நினைத்ததை நிலைமை மோசமாக உள்ளது

டேவிட் வாலஸ் வெல்ஸ், நியூயார்க் மேகசின் கூடுதல் ஆசிரியர்.

வெப்பமயமாதல் பற்றி தி அன்ஹேபிட்டபிள் எர்த் என்ற நூலை எழுதியுள்ளார். ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவுக்கு வந்தவரிடம் பேசினோம்.

நீங்கள் உங்கள் நூலின் தொடக்கத்திலேயே இப்போது உள்ளதை விட நிலைமை மோசமாகும் என்று கூறியுள்ளீர்களே?

நாம் என்ன செய்துள்ளோம் என்று கூட தெரியாதபடி வெப்பமயமாதலுக்கான விஷயங்களை செய்து விட்டோம். இப்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் கூட புயல்கள், கடலின் நீர்மட்டம் உயர்வது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். கொல்கத்தா போன்ற நகரங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும். வெப்ப பாதிப்பால் பலரும் சுருண்டு விழுவார்கள். வெப்பமயமாதலால், 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சூழல் அகதியாக இடம்பெயர்வார்கள். 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டால் இறப்பார்கள். இதுமட்டுமன்றி, ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் கரையும்.

இதனை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதை திட்டமிடுவது அவசியம். இதில் நிலப்பரப்பு ரீதியான அரசியல், கலாசாரம் ஆகிய பிரச்னைகளும் உண்டு.

நீங்கள் கூறும் வாதங்களை வளர்ந்த நாடுகள் எதுவும் கேட்பதாக தெரியவில்லையே?

அமெரிக்கா போன்ற நாடுகள் அகதிகளால் வளர்ந்து பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளன. ஆனால் இன்று அவர்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு தன் எல்லைகளை மூட முயல்கிறது. இது தவறான செயல். காரணம், உலகளவில் கார்பனை அதிகளவு வெளியிடுவது அமெரிக்காதான். அகதிகளுக்கு மட்டுமல்ல சூழலுக்கும் அநீதி இழைப்பது அமெரிக்காதான்.

வெப்பமயமாதலின் சில அம்சங்களைச்எ சொல்லுங்கள்.

நாம் நினைப்பதை விட வேகமாக வெப்பமயமாதல் உலகை பாதித்து வருகிறது. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 90 லட்சம் பேர் இறந்துவருகின்றனர். இறப்பு தவிர மூச்சுக்கோளாறு, ஆஸ்துமா ஆகிய பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. வெப்பமயமாதலில் நாம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி பெரியளவு கவனம் கொள்வதில்லை. இதைப்பற்றி பேசும் அளவுக்கு உலக நாடுகள் இன்னும் முன்வரவில்லை.

கிரேட்டா தன்பெர்க் போன்ற சூழல் போராட்டக்காரர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கிரேட்டாவின் தன்னெழுச்சியான போராட்டம் பல்வேறு இடங்களில் நல்ல விளைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இப்போராட்டங்களை உலக வணிக அமைப்பு ஏற்கவில்லை. இப்போராட்டங்களை உலகளவில் தொடர்ச்சியாக நடத்தினால் மட்டுமே மாற்றங்களை நாம் காண முடியும். இப்போராட்டத்தில் கிரேட்டாவுக்கு அவநம்பிக்கையும் விரக்தியும் கூட ஏற்படலாம். ஆனால் இதன் விளைவுகள் மக்களிடம் சென்று சேரும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. இதில் கருத்து கூறவேண்டியது அவர்கள்தான்.

குறைவாக விமானப்பயணங்களை செய்வது, வீகன் உணவுகளை சாப்பிடுவது என கார்பன் வெளியீட்டைக் குறைக்க பலர் முயல்கின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து?

தனிப்பட்ட அளவில் சூழல் மாற்றங்களுக்கு எதிராக நாம் மேற்கொள்ளும் இத்தகைய மாற்றங்களை நான் ஆதரிக்கிறேன். காரணம், இவற்றின் மூலம் நாம் அரசியல்வாதிகளிடையே குறிப்பிட்ட கவனத்தை ஏற்படுத்த முடியும். அதேசமயம் உணவில் இறைச்சியை தவிர்ப்பது என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியவில்லை.

நன்றி -டைம்ஸ், ஜன.26, 2020 சோனம் ஜோஷி