அமைதியாக இருப்பது குற்றம்! - சொல்வது போராட்ட இசைக்கலைஞர்கள்
அகு சிங்கேங்பம் |
புரட்சிப் பாடல்களின் நாயகர்கள்!
தாரு டால்மியா - டெல்லி சுல்தானேட்
அகு சிங்கேங்பம் - இம்பால் டாக்கீஸ், தி ஹோவ்லர்ஸ்
பூஜன் சாஹில் - யூடியூப் இசைக்கலைஞர்
எங்கள் நம்பிக்கையை நீங்கள் லத்தியாலும், கண்ணீர் குண்டாலும் உடைக்க முடியாது. லத்தியை விட சக்தியானது பேனா என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று டில்லி பாடகர் பூஜன் சாஹில் பாடும்போது கூட்டம் அப்படியே உறைந்து பார்க்கிறது. இருபத்தாறு வயதான பூஜன் சாஹில், ஆசிரியர் என்பது கூடுதல் தகவல்.
taru dalmia |
இத்தாலிய புரட்சி பாடலை அப்படியே இந்திக்கு மாற்றி பாடிய இவரின் யூடியூப் வீடியோ, இணையத்தில் வெகு பிரபலம். இவர் இப்பாடலை டில்லியில் இரண்டு மாதங்களாக வெவ்வேறு அரசுக்கு எதிரான போராட்டங்களில் பாடி வருகிறார். ”அரசுக்கு எதிரான பேச்சை விட மக்கள் எளிதாக பாட்டை ஏற்கின்றனர். என்னை நான் போராட்ட பாடகன் என்று கூறிக்கொள்வதில்லை. போராட்டத்தில் குறிப்பிட்ட பாடலை இசைத்துப் பாடுவது எதிர்ப்பை பதிவு செய்வதோடு மக்களுக்கு நம்பிக்கையையும் அளிக்கிறது” என்கிறார் சாஹில்.
இவர் மட்டுமல்லாது, நாடு முழுவதும் ரகே, பாப், மெட்டல், நாட்டுப்புறப்பாட்டு என பல்வேறு இசை வடிவங்களில் இசைக்கலைஞர்கள் போராட்டங்களில் பாடி வருகின்றனர். அரசின் குடியுரிமைச்சட்டம், மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டக்களங்களே இவர்களின் பாடல் மேடைகள். சாஹில் தனக்குத் தேவையான பணத்திற்காக நகரில் உள்ள கஃபேக்களில் பாடி வருகிறார். ஆனால் அங்கு இந்திப்பட பாடல்களை மட்டுமே பாடுகிறார். காரணம், அரசியல்ரீதியான பாடல்களை அங்கு பாட முடியாது. இதை சாஹில் ஏற்கிறார். அவர்களுக்கு என தனிக்கருத்து இருக்கலாம் என்கிறார்.
poojan sahil |
ஆனால் அனைத்து கலைஞர்களும் இதில் சமரசம் செய்துகொள்வதில்லை. தாரு தால்மியா அப்படிப்பட்ட இசைக்கலைஞர்களில் ஒருவர். நாங்கள் எந்த இடத்திலும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்வதில்லை. எங்களுடன் இணைந்துகொள்ள பல்வேறு நிறுவனங்கள் முயன்றாலும் நாங்கள் அதனை ஏற்பதில்லை. எங்கள் கொள்கைகளுக்கு இசைந்த நிறுவனங்களுடன் மட்டுமே பணிபுரிகிறோம் என்கிறார் தால்மியா.
இவர்களைப் போலவே புகழ்பெற்ற இன்னொரு இசைப்பாடகர் அகு சிங்கேங்பம். இவர் மணிப்பூரில் நடைபெறும் அரசு அநீதிகளுக்கு எதிராக பாடல்களை எழுதிப் பாடி வருகிறார். மக்களின் இடம்பெயர்வு, வறுமை, அரசு சட்டங்கள் இவரின் பாடுபொருளாக உள்ளன. முனைவர் பட்டம் பெற்றவர் அகு. நாங்கள் எங்கள் கண்களின் என்ன பார்க்கிறோமோ அதைப்பற்றி மட்டுமே பாடுகிறோம். ராணுவம் பல்லாண்டுகளாக எங்கள் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி இருக்கிறது. நாங்கள் இயல்பாகவே அதைப் பாடுகிறோம். பாடல்களும் அரசியல்மயமானவைதான் என துணிச்சலாக பேசுகிறார். ஆங்கிலத்திலும், மெய்டெய் என்ற பழங்குடி மொழியிலும் பேசுகிறார்.
இதில் தணிக்கையும் ஒடுக்கு முறையும் இல்லாமலில்லை. அதற்கு ஆட்பட்டவர்தான் தீபக் பீஸ். இவரின் பிரதமர் பற்றிய பாடல் இணையத்தில் ஏற்றப்பட்டது. இதனை பலரும் புகார் கூற, அதிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. பின்னர் வேறு வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. இசை சக்தி வாய்ந்த ஒன்று. அதனை அரசியலுடன் கலக்கும்போது அது மேலும் பிரம்மாண்டமான ஒன்றாகிறது. இந்தியாவில் நடக்கும் பல்வேறு ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்காமல் இருப்பதை நான் குற்றம் என்றே சொல்லுவேன். என்னால் இந்த அவலங்களை, அரசின் குற்றங்களை பொறுக்க முடியவில்லை. அதனை பாடல்களாக இசையாக மாற்றி அப்பாவியான மக்களுக்கு பாடிக்காட்டுகிறேன். அவர்களுக்கு இச்செய்தியை புரிய வைக்க முயல்கிறேன். என்கிறார் தீபக்.
நன்றி - டைம்ஸ், ஜன. 5, 2020 - சோனம் ஜோஷி